வான்மழையும் கடலும் சங்கமித்த ஓர் நாள் ...................!
ஆழ்கடலின் ஆர்ப்பரிக்கும்
======அலைகள் அழகாய்
அழகான மழைத்
======தோரணங்களில் நனைந்திருக்க ,
நனையாத சோகங்களின்
======நச்சரிப்பும் சிலிர்ப்படைய
சிலிர்க்கும் ரோமக்கால்களோ
======மண்டியிடக் காணலாமே !
அத்தருணம் கரையுமுன்
======கருணைகள் வான்முகிலே !
முகிலுரித்து முகம்காட்டும்
======நீர்த்துளிகளால் நிறையுமோ
நிறைகின்ற நிலமெல்லாம்
======பச்சைவளம் பெருகுமோவென ,
பெருகியோடுமென் ஏக்கங்கள்
======சேருமிடம் உனதாமே !
கரையோரம் கடக்கின்றேன்
======பதித்த கால்தடங்களை
தடம்புரளும் வெறுமைகளின்
======பிடியினின்று மீண்டே !
மீண்ட மிச்சமெல்லாம்
======உறைவது குளிர்பனி உச்சத்தில் ;
உச்சத்தின் தேடலில்
======அடையாளமானதோர் வெற்றிடமே !
நிறுத்திக் கொண்ட
======நினைவுகளின் தொடக்கமாய்
தொடங்கிய மௌனத்தின்
======கூச்சலில் தெறிப்பதுவோ ,
தெறிக்கின்ற துளிகள்
======உலரவேண்டிவரும் உளறல் ;
உளறுகின்ற குரல்நுனியில்
======அர்த்தங்கள் குறைபடுமே !
விண்ணிலிறங்கி வீதிவுலா
======கண்டபின்னும் அடங்காதோ ,
அடங்காத ஆசையாலே மழையே
======வீழ்கின்றதுன் விருப்பம்;
விருப்பமாய் ரசிக்குமெந்தன்
======விழியோரம் சங்கமிப்பதுவோ
சங்கமத் திருநாளில் கலந்த
======கடலும் வான்மழையுமாமே !