நொடி....!

மார்புக் கூட்டில் ஒரு
பிரளயம்!
ஒரு தோட்டா!

முட்டிச் சில்லு
சாலையில் சிதறியிருக்கிறது!

**********

கரைந்த படியேயொரு
காகம்
என் தலைக்கு மேல்...
என் வாயில் எச்சமிட்டாவது
போயேன்
என்று என்னை
எண்ண வைத்தது எது???
பசியா???
இப்பொழுதா??

பத்மா சொன்னது -
நான் விசித்திரமானவன் என்று!!

******

இடுப்புக்குக் கீழ்
உணர்வில்லை..!
நெஞ்சிலிருந்து
அலையலையாய்
மூளை நோக்கிய
ஒரு அக்கினிப் பிரவேசம்!
அதிர்வுகளின் புறப்பாடு..!

அப்பாவிக் கணவனில்லை...!
ஆட்டோக்கார இளைஞனில்லை!
புரட்சி வீரனில்லை..!
சேரி விடலையில்லை...!
அரசடியான்
அரசுக்கெதிராய்
மாறியவனில்லை...!

என்னை ஏன்
சுட்டார்கள்...?!
எனக்காக கண்ணீர்
அஞ்சலி
இருக்கப் போவதில்லை...!
போராட்டம்
ரயில் மறியல்
புன்சிரிப்பு.......
அட..!
பிரியாணியுடன் முடியும்
ஒரு நாள்
அடையாள உண்ணாவிரதம்..!
இல்லவே இல்லை...!

********

எனக்காக
அழுவதற்கு
தாய் தந்தை
இல்லை...!
இங்கில்லை...!
ஆம்...!
எங்காவது இருந்து தான்
ஆகா வேண்டும்.....!
எனக்கு தான்
தெரியவில்லை....!

*********

பத்மா சொன்னது-
உன் ஆண்மையில்
தனிமையின் விரக்தி மட்டுமே
உள்ளது - சலிப்பு...!

*************

எனக்கான இந்த
உலக வாழ்வு அர்த்தமேயின்றி
இரு தோட்டாவுடன்
ஈண்டு நிறைவுருகிறதா???
என்னைச் சுட்ட
அந்த காக்கி
இரவு பேரனைக்
கொஞ்சக் கூடும்..!
குற்றவுணர்ச்சி ,,,?
ஒன்றின் கீழ்
லட்சத்தின்
முக்கால்வாசியேனும்..!
ம்ஹூம்.....!

**************

வாசலில் கிடக்கும் பால்
காலையில்
திரிந்து போகும்..!
8.30 மணிக்கு
ஓரிரு முறை
செய்திகளில் காட்டப்படலாம்..!
எந்த நடிகையும்
எவனுடனும் ஓடாமலிருந்தால்..!

*************

பத்மா சொன்னது-
முரண்பாடென்பதே
உனக்கான பெயர்...!
கீழ் பல் வரிசை
தெரிய சிரிக்குமுனக்கு
தீராக் கோபம்
வருவதெங்கனம்....?

***************

என் வீட்டைச்
சுற்றும் அந்த நாய்
இன்றிரவு முதல்
பட்டினிதான்.....!

****************

என்றும் வரும்
சாலையில்
இன்று கலவரம்...!
நான் ஏன் சுடப்பட்டேன்..!
ஆம்.!..
நான் ஏன் சுடப்பட்டேன்..!

எனக்குப் பசிக்கிறது..!
கரைந்த படியேயொரு
காகம் என்
தலைக்கு மேல்..!
என் வாயில்
எச்சமிட்டாவது போயேன்...!

****************

பத்மா சொன்னது-
உனக்கெனவே
ஒரு வானம்!
ஒரு பூமி!
ஒரு மலர்!
ஒரு நாள்..!

**************

நான் ஏன் சுடப்பட்டேன்..!
நாதியற்ற
நடுத்தர வர்க்கம்..!

எழுதியவர் : ஹரீஷ்.நெ (2-Mar-13, 10:14 pm)
பார்வை : 184

மேலே