[433] நமத்துப் போன திரிகள்.....

ஒவ்வோரு இந்தியனுக்கும்
அவசியம் தேவை
'ரேஷன்' அட்டை
அடகுவைக்க........
***********************************
வீட்டுக் குப்பையை
'ரோட்டில்' எறிவதும்
அடங்காப் பிள்ளையை
அரசியலுக் கனுப்புவதும்
எங்களுக்கு வாடிக்கை.......
**************************************
உழைத்து உழைத்து
வியர்க்கிறதோ இல்லையோ...
ஒவ்வொன்றுக்கும்
வரிசையில் நின்றே
வியர்த்துமட்டுமா போகிறோம்
களைத்தும்தான்........
***************************************
சூரியன் என்றால்
கதிரில்லாமலா...
ஆளவந்தா ரென்றால்
'பினாமி' இல்லாமலா.......
*****************************************
'கிலோவுக்கு மூன்று ரூபாய் நிற்கும்'
நான் நினைத்துக்கொண்டேன்...
'முப்பது ரூபாயாவது
நிற்கவேண்டும்'
கடைக்காரன் நினைத்துக் கொண்டான்!
'ரேஷன்' அரிசிதானே!...............
**********************************************
அந்நியனை விரட்டிவிட்டோம்
அந்நியன் என்பதற்காக அல்ல
நமக்குள்
அந்நியத்தை அல்லவா விரட்டிவிட்டான்..
அதனால்தான் சுதந்திரம் வந்ததும்
கேட்டுவிட்டோம்
'மொழிவாரி மாகாணப் பிரிவினை"........
********************************************
தேர்தலில் எல்லாம் சகஜமப்பா!
கத்தியின்றி ரத்தமின்றி
சுதந்திரம் வேண்டுமானால் வாங்கலாம் ..
அதற்காகக்
கத்தியின்றி ரத்தமின்றி
ஆட்சியை வாங்க முடியுமா..?
***********************************************
ஈழப் பாலகனுக்காக
வேளைச் சோற்றை
வேண்டாமென்னும்
காளையர்களே!
அங்கே ஈழம் எரியுமுன்பு
ஒரு நூலகம் எரிந்தது..
இங்கும்
ஒரு நூலகம் அழியும்போது
சேலையால் மறைத்துகொண்டுவிட்டீர்களே!
***************************************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (10-Mar-13, 2:35 pm)
பார்வை : 113

மேலே