ஆசை விட்ட ஆள் தான் யாரோ...
குரங்கின் குணமும் சற்று மருவி,
மனிதன் என்றானான் மற்றொரு பிறவி..
தாவும் இயல்போ செயலில் இல்லை,
அது குணத்தின் இயல்பென்பதால் வருவதோ தொல்லை..
ஆசைக் கடலில் அஸ்த்தமித்து விட்டு,
ஆயிரம் எண்ணங்கள் உள்ளூர விட்டு,
அடைந்த சுகங்கள் துளியும் மதியாது,
பெருகிடும் ஆசைகள் உள்ளம் தொட்டு..
நிலவின் ஒளியை மறைக்கும் முகிலும்,
நாளும் அதனை மறைப்பதுமில்லை..
தன்னிலை அறியா மனித கூட்டம்,
நிலையாய் தாவும் குணம் தான் என்னவோ..
இக்கரை மதியாது,
அக்கரை தான் பச்சையென்பான்..
எக்கரை சென்றாலும்,
இக்கதை தான் சொல்லி நிற்பான்..
சொந்தங்கள் இறந்தால்,
சோகங்கள் சில நொடிகள் மட்டும்..
பிறகு,
சொத்துக்கள் பிரிப்பதிலே,
சிந்தனைகள் சென்றனவே..
ஆசை விட்ட ஆள் தான் யாரோ,
ஆழ்கடல் ஆழம் அது இருப்பதும் ஏனோ..
ஆடித் திரியும் நாட்கள் கடந்தால்,
ஆறடி குழிதான் என்றறிவாரோ..