சிலநேரங்களில் சில மரங்கள்..! பொள்ளாச்சி அபி

"மரங்கள்...பல விதம்..." :rameshalam .

புத்தர் காலத்தைய மரம் ஒன்று...
ஆசையைத் துறக்கக்
கற்றுத் தந்தது.

நியூட்டன் காலத்தைய ...
ஆப்பிள் மரமோ...
ஈர்ப்பு விசையை விடுவித்தது.

எங்கள்...
பள்ளிக்கூடத்து மரங்களோ...
நிழல் பரப்பி...குழந்தைகளுக்கு...
வகுப்பெடுத்துக் கொண்டிருந்தது.

என்றாலும்...
நேற்று வயலோரமாய் இருந்த..
வேப்பமரம் ஒன்று...
திடீரெனப் பால் வடியச் செய்து..

காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது...
வெகு தீவிரமாக,
---------------------------------------------------

!!!===(((தனி மரம்)))===!!! நிலா சூரியன்

நிழலை
நேசிப்பவர்கள் மட்டுமே
இங்கே
தோப்பை நேசிக்கிறார்கள்...
நிழல் தரும் மரமோ
வெயிலை யாசிக்கிறது....

வசந்த காலத்தில்
என்னை
வாழ்த்திப் பாடியவர்களெல்லாம்
திரும்பி போகிறார்கள்
இலையுதிர்காலத்தில்
ஏளனம் பேசியவாரே...

கடுமையான இளவேனில்
தோப்புகளே
எலும்புகூடுகளாய்...
தனிமரம்
நானென்ன செய்ய...?

சூரியனோடு
ஒளிச்சேர்க்கை செய்து
பூக்கள் பூத்து
பழங்கள் பழுத்து
விதைகளை தூவுவேன்...

தனிமரம் தோப்பாகாது
ஆனால்
தோப்பினை உருவாக்கும்...!!!
-----------------------------------------
கடவுள் ?? -கவி கண்மணி

"மனம்
கல்லான மனிதனுக்கு
மரமும் கடவுளாகிறது "
------------------------------------

"நீ இல்லாவிடில்..!" snekamudan sneka

மரம் எனும் பெண்
மண்ணுக்கு அணிகலன்

விண்ணிலிருக்கும் மாசுகளை
விரட்டிவிடும் காவலன்

மழையைக் கொண்டுவரும்
மாபெரும் மந்திரவாதி.

மின்னிணைப்பு தேவைப்படாத
இராட்ஷச விசிறி

மண்அரிப்பை தவிர்த்திடும்
மாயநூற் கண்டு.

அமிலவாயுவை உள்வாங்கி
உயிர்தரும் மந்திரக்கோல்.

மூச்சிருக்கும்வரை மரத்தை
நினைக்க வேண்டும்.

இதில்லாவிடில் மூச்சிருக்குமா..?
யோசிக்க வேண்டும்..!
---------------------------------------------------------------
"மரம் காப்போம் !" - கே.எஸ்.கலை

நாளை உன் இனம் காக்க
என் இனம் காத்துக்கொள்

கல் அடித்து கனி பிடுங்கி
காயப் படுத்தி போனாலும்
துயரப் பட்டு துடிக்கவில்லை
வலி என்று கதறவில்லை...!

பூ சீவி கள் எடுத்து
பூரித்துப் போனாலும்
வெறி பிடித்துக் கத்தவில்லை
வேண்டாம் என்று சொல்லவில்லை !

வீடு கட்டி வாழ்வதற்கும்
பாடை கட்டிப் போவதற்கும்
கை அசைத்து காற்று வீசி
காத்திருப்பேன் காட்டுக்குள்ளே !

மணமாலை நீ சூட
மலர் மகளை நான் தருவேன்
மங்களமாய் வரவேற்க – வாழை
மரமாக நான் நிற்பேன் !

எரித்து நீயும் பசியாற
விறகாக நானிருப்பேன்
புசித்து நீயும் நலம் வாழ
இலை தந்து மருந்தாவேன் !

எழுதி நீயும் உயர்வதற்கு
ஏடாக நானிருப்பேன்
புழுதி பறக்கும் மண்மீது
பூங்காற்றை நான் தருவேன் !

என் தேகம் இல்லை என்றால்
உன் தாகம் தீராது தெரியாதா ?
பாகம் பாகமாய் அறுத்தாலும்
நிழல் தானே நான் தருவேன் ?

குளிர் காற்றும் குடி நீரும்
நானின்றி உனக்கேது ?
குடிசை வீடோ மாடி வீடோ
நானின்றி உனக்கேது ?

பூக்களால் வாசம் வீசி
மூங்கிலால் கானம் பாடி
மூலிகையாய் நோய் தீர்த்து
நீ வாழ நான் வாழ்வேன் !

ஏடுகளில் வாழவைத்து
காடுகளில் அழிக்கின்றாய்
கேடு கெட்ட மானிடமே
புத்தி கெட்டு போனதேனோ?

மரம் என்றால் வரம் என்று
மனம் நிறைய வாழ்த்துகிறாய்
பணம் கொஞ்சம் வரும் என்றால்
தரம் கெட்டு மாறுகிறாய் !

நான் வாழ ஒருபோதும்-நீ
துளி நீரும் தரவில்லை
நான் இன்றி போனாலோ
துளி நீரும் உனக்கில்லை !

கிளி குரங்கு நரி பருந்து
புலி சிங்கம் பூச்சி எல்லாம்
என் நிழலில் வாழும் போது
எனை அழித்தால் என்னாகும் ?

கொத்து கொத்தாய் பூக்கின்றேன்
கொப்பு கொப்பாய்க் காய்க்கின்றேன்
அத்தனையும் எடுத்துக் கொண்டு
எனை அழிக்க ஏன் வாராய் ?

தீயிட்டு கொளுத்திவிட்டு
நீ கண்ட மோட்சம் என்ன?
சோலை வனப் பாரெல்லாம்
பாலை வனம் ஆகாதா?

ஆறறிவு கொண்டவனே
அக்கறையாய் சொல்லுகின்றேன்
ஓரறிவு நான் அழிந்தால்
உனக்கில்லை வாழ்வென்று !

எண்ணற்ற விதை கொண்டு
மண் மீது வாழுகின்றேன்
தேவை கொண்டு வெட்டும் போது
ஒரு விதையை நட்டு விடு !

நாளை உன் இனம் காக்க
என் இனம் காத்துக்கொள் !
----------------------------------------------------------

பாடும் மரங்கள்..! பொள்ளாச்சி அபி

-நண்பர் கேஎஸ்.கலை எழுதிய கவிதையில் மரம் பேசியது.இங்கு பாடுகிறது அவ்வளவுதான்.! அறிவொளி இயக்கத்திற்காக நான் எழுதிய வீட்டுக்கொரு மரம் குறித்த விழிப்புணர்வுப் பாடல்-படகோட்டி படத்தில் வரும் “தரைமேல் பிறக்கவைத்தான’; ராகம்.சும்மா பாடிப்பாருங்கள்..!
------------------

தரைமேல் இருக்க வைத்தான்-எங்களை
மரமாய் நிறுத்தி வைத்தான்..!
வரமாய் உமக்கெனவே –எங்களை
வாழ்க்கை நடத்த வைத்தான்..!

கட்டிய வீட்டில்;,கதவும் ஜன்னலும்
உமக்காய் அளித்தது யாரோ..?..ஓ..ஓ..
மெத்தைகளிட்டு சுகமாய் உறங்க
கட்டிலை அளித்ததும் யாரோ..?..ஓ..ஓ..

எம்உடலை அறுப்பதும் உயிரை அழிப்பதும்
ஒவ்வொரு நாளும் துயரம்..!
நெடுநாள் வளர்ந்த நிழலாய் இருந்த
கதைகள் இங்கே உலவும்..! -தரைமேல்-


மனிதா..உனது மாசுகள் நீங்க
ஆக்ஸிஜன் கொடுப்பது யாரோ..?.ஓ..ஓ..
ஓசோன் ஓட்டை மேலும் விரிய
தடையாய் இருப்பது யாரோ..?..ஓ..ஓ

பிறப்புக்குத் தொட்டில் இறப்புக்கு பாடை
உறவாய் உனக்கு வாழ்ந்தோம்..!
உயிராய் இருந்தும் விறகாய் இறந்தும்
அடிமை மௌனம் காத்தோம்..! –தரைமேல்-

கொதிக்கும் பூமி ஒருநாள் சீறும்..
குடிநீர் இன்றிப் போகும்…ஓ..!
கடல்நீர் உயரும் தீவுகள் மூழ்கும்
நாடுகள் இங்கே அழியும்..ஓ..!

செல்வமும் மாடியும் இருந்தால்கூட
பயனே இன்றி போகும்..,,
இயற்கையின் பகுதி எங்களைக்
காத்தால் நிலைமை உனக்கு மாறும்.! –தரைமேல்-

மலைமேல் நின்று மழையைத் தடுத்து
ஆறாய் உன்னிடம் தருவோம்..!.ஓ..ஓ..
இனிதாய்க் கனிகள் இலைகள் மருந்தென
இன்னும் உனக்கே தருவோம்...?..ஓ..ஓ..

எம்மை அழித்தால் நீங்கள் அழிவது
காலம் காட்டும் வாய்மை..!
ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள் இருந்தால்
உலகம் பிழைக்கும் உண்மை..! -தரைமேல்-
---------------------------------------------
மரங்கள் குறித்த நான் பார்த்தவற்றுள் கிடைத்தது.
நன்றிகள் இதன் படைப்பாளிகளுக்கு ..
அன்புடன் பொள்ளாச்சி அபி

எழுதியவர் : நண்பர்களுடன் பொள்ளாச்சி (17-Mar-13, 6:23 pm)
பார்வை : 406

மேலே