[441] -- துளிப்பாக்கள் --(18-03-13)

சமாதானத் தேவதைக்குச்
சட்டை தைத்துப் போடுங்கள்
ஆனால் அவசியம்
ஒரு ஆயுதக் கவசம்
அணிவித்து அனுப்புங்கள்!
***************************************

சமாதனம் என்பது
பூவுக்குள் இருந்து
தேன் எடுக்கும் வேலைதான்
எத்தனை நாள்
இதையே செய்வீர்கள்?
வாருங்கள்
பூமிக்குள் இருந்து
பூகம்பங்கள் எடுப்போம்!
********************************** *******

வினை விதைத்தவன்
வினையை அறுப்பான்
நாம்
மக்களை அல்லவா
விதைத்துக் கொண்டிருக்கிறோம்!
*************************************

மணிமேகலைகள்
பிறக்கலாம்
ஆனால்
அட்சய பாத்திரத்திற்கு
எங்கே போவது?
அதனால்தான்
ஊழல் பாத்திரத்தில்
டாஸ்மாக் நீர்விட்டு
இலவசத்திட்டங்களாகச்
சமைத்து வழங்குகிறோம்!
******************************************
காதல் என்பது
கரையில் இருந்தபடியே
கப்பல் பயணம் செய்வது..
தரையில் நின்றபடியே
குதிரைச்சவாரி செய்வது..
‘காரில்’ இருந்தபடியே
விமானப் பயணம் செய்வது..
கடைப்பலகாரத்தைக்
கண்ணாலேயே உண்பது..
****************************************
ஆடைகளைக் களைந்தால்
உடலுக்கு நிர்வாணம்
எண்ணங்களைக் களைந்தால்
மனதுக்கு நிர்வாணம்
உயிர்களைக் களைந்துவிட்டால்..
பூமிக்கு நிர்வாணமோ?
*********************************************

ஆற்றலைப் போற்ற வேண்டும்;
--அறிவினை வளர்க்க வேண்டும்;
மாற்றிலா உழைப்பைக் காட்ட,
--மதிப்புற, வளர்ச்சி காண,
ஏற்றதாம் சுதந்தி ரத்தை
--இயல்புடன் உரிமை யாக்கி,
ஊற்றென மகிழ்ச்சி பொங்க
--உதவுதல் மனித நேயம்!
*********************************************

கண்களில் பார்வை குன்றிக்
--கைகளில் கலயம் தூக்கிப்
புண்களால் போர்த்தி னாற்போல்
--பொய்யுடல் காட்டி நிற்கும்
பெண்களை, குழந்தை என்ற
--பெயருடைப் பிறவி தம்மைக்
கண்மு(ன்)னே கண்டும், போரின்
--கருவிகள் செய்வார் எங்ஙன்?
******************************************
இதமாய்ப் பாரு!
இதமாய்ப் பேசு!
இதயம் இருப்பதற்கு
இது எடுத்துக் காட்டு!
******************************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (18-Mar-13, 8:49 am)
பார்வை : 139

மேலே