ருத்ராட்சம்...!

எந்தப் பரதேசியைப் பற்றி எழுத? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் சடாரென்று கடந்து போன அந்த அதிர்வுகள் நிரம்பிய மஹாசிவராத்திரிக்குள் விழுந்து விட்டேன். சனிப் பிரதோஷமும், அதனையடுத்த மகா சிவராத்திரியும் எங்கிருந்தோ என்னைத் தேடி வந்த ஒரு முக ருத்ராட்சமும், அதை அணிய ஷீரடியில் இருந்து யார் மூலமாகவோ வந்த கருப்பு கயிறும் என்னோடு ஒட்டிக்கொள்ள....முழுமையான அதிர்வுகளில் நான் நிரம்பி வெறுமையில் பரதேசியாக நின்றிருந்தேன்.

சிறுவயதில் இருந்தே சிவனைப் பிடிக்கும். சிவனைப் பிடித்ததால் ருத்ராட்சமும் பிடிக்கும். ருத்ரனின் நெற்றிகண்ணில் இருந்து வந்த நெருப்பு பொறிதான் ருத்ராட்சம் என்று புராணங்கள் மூலமாக ஒரு நெருப்பினை எனக்குள் செல்வமணி மாமா ஏற்றி வைக்க, ரஜினியும் ருத்ராட்சம் அணிகிறார் என்ற ஈர்ப்பு என்னை இழுத்து வைக்க....20 வயதில் ஐந்து முக ருத்ராட்சத்தை ஒரு காது குத்துக்காக அழகர்கோவில் போன போது வாங்கி அணிய ஆரம்பித்தேன். ருத்ராட்சத்திற்கு என்ன சக்தி இருக்கிறது என்றெல்லாம் ஆராய முற்படாத ஒரு மனது அப்போது. ருத்ராட்சத்தை நல் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் அறிந்து அதை நான் அணிகிறேன் என்று என் வயதை ஒத்தவர்களிடம் விளம்பரம் செய்து கொள்ளும் மனோநிலை மட்டுமே என்னிடம் இருந்தது.

பிரதோஷ விரதமும் ருத்ராட்சமும் என்னை இப்படி ஏதோ ஒரு விதத்தில் பிடித்துக் கொள்ள, கூட்டமில்லாத சிவாலயங்கள் என்னை ஏனோ அதிகமாய் வசீகரிக்கத்தன. இப்போது சிவ வழிபாட்டில் நிறைய பேர்கள் ஈடுபடுகிறார்கள். சிவனை லெளகீகத்துக்கும் சொந்தமானவர், என்ற மதரீதியான அடையாளம் பரப்பப்பட்ட போது நிறைய பேர்கள் குறிப்பாக, நாகாத்தம்மன் கோயிலையும், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியையும் வணங்கிக் கொண்டிருந்த பக்திக் கூட்டம் சிவாலயங்களை பிரதோஷ தினங்களில் நிரப்பத் தொடங்கி இருந்தது.

சிவம் என்னும் சத்தியத்தை, முழுமையை உருவம் கடந்து, அருவம் உடைத்து உணர்வாய் உணரத் தொடங்கி இருந்த போது, நான் ஒற்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தேன். திருவொற்றியூர் எனக்குப் பிடித்த இடமாய் போயிற்று, காளையார்கோயில் காளீஸ்வரர் சன்னதியும், திருப்பத்தூர் திருத்தளிநாதர் சன்னதியும், முசிறி கைலாச நாதர் சன்னதியும் நான் காதலோடு சுற்றித் திரிந்த இடங்கள். அப்போது சிவன் எனக்குள் சம்மணமிட்ட உருவமாய் அந்த அந்த கற்பகிரகங்களுக்குள் நின்று ஏதேதோ கதைகள் சொல்வார். கண்மூடி ஏதோ ஒரு தூணருகே அமரும் தருணங்களில் இன்னதென்றே தெரியாத பெரும் பிணியாய் சமகால வாழ்வு தெரிய என்னவென்று அறிய முடியாமல் கண்ணீர் வழிய பைத்தியக்காரனாய் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டே இருந்திருக்கிறேன்.

ஒற்றீஸ்வரர் கோயிலுக்குப் போகும் போது அப்படி அல்ல. வேறு ஒரு புரிதல் இருந்தது. அந்தப் புரிதலுக்கு பாலகுமாரனின் எழுத்து எனக்கு உதவியது. இருளில் வழிகாட்டும் கை விளக்காய் அவரின் சிந்தனைகள் என்னை வெளியே வரவிடாமல் உள்ளுக்குள் தள்ளியது. பட்டினத்தாரும், அருணகிரி நாதரும், இரமண மகரிஷியும், சேஷாத்ரி சுவாமிகளும், பதினெட்டுச் சித்தர்களும், 64 நாயன்மார்களும், சிவபுராணமும் சைவ சித்தாந்தமும் விவேகானந்தரும்.... எனக்கு துணையாய் இருந்தனர்.

மணிக்கணக்கில் ஒற்றீஸ்வரர் முன் அமர்ந்து சிவபுராணம் சொல்லி, வெறுமனே சுவாசிக்கும் ஒரு ஜந்துவாய் எண்ணங்களற்று கிடந்து வரும் சுகம் எனக்குச் சொர்க்கமாகத்தான் இருந்தது. கொடுத்தலும் பெறுதலும் அல்ல ஆன்மீகம். வெறுமனே இருத்தல். இப்படி வெறுமனே இருத்தல் உள்ளதை உள்ளபடி பார்க்க வைக்கும். உள்ளதை உள்ளபடி பார்க்கும் போது அப்படியாய் பார்ப்பதில் இருக்கும் சத்தியம் புரியும். சத்தியத்தை உணரும் போது நாம் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு வரும். தெளிவான செயல்கள் சரியான விளைவுகளைக் கொடுக்கும். சரியான விளைவுகள் நிம்மதியைத் தரும். நிம்மதி....நான் உடலென்ற நிலை கடந்த பேருண்மைக்கு கூட்டிச் செல்லும்.

பேருண்மைக்கு கூட்டிச் சென்றால் என்னவாகும்....?

தெரியவில்லை. அதை நோக்கிய நகர்வுதான் 35 கழிந்து 36 ஆம் வருடத்திற்குள் என்னை கூட்டி வந்து நிறுத்தி இருக்கிறது. ருத்ராட்சம் ஐந்து முகம் யார் வேண்டுமானாலும் அணியலாம். எந்த செயல் செய்தாலும் அகம் சுத்தமாய் இருக்க வேண்டும். அகச் சுத்தம் புறச்சுத்தத்தை தானியங்கியாய் நிறுவும். புறமும், அகமும் அழகாக வாழ்க்கை அழகாகிப் போகும். புறச்சுத்தம் மட்டும் இருந்து அகம் சுத்தமில்லாதவர்கள் மனநோய்க்கு ஆளாக நேரிடும். ருத்ராக்க்ஷம் மின் காந்த அதிர்வுகள் கொண்டது அது நேர்மறையான அதிர்வுகளை அணிந்திருபவர்களுக்கு கொடுக்கிறது. இப்படி எல்லாம் விபரம் அறிந்தவர்கள் கூற அதை ஆன்மா எந்த வித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள தொடங்கியது என் ருத்ராட்ச பயணம்.

ஒருமுக ருத்ராட்சம் சிவனின் அம்சம். கூர்மையானது. நீயும் நானும் ஒரு சத்தியம்தான் என்றாலும் உன்னையும் என்னையும் யார் யாரோவென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுகம் என்பது எண்ணங்களை குவிக்க குவிக்க ஒற்றைப் புள்ளியில் நினைவுகள் ஓடி ஒளிய உள்ளுக்குள் ஏற்படும் பிரமாண்டம். வெற்றிடம். வெற்றிடம் என்பது ஒரு முகத்தின் நுனி. ருத்ராட்சம் உன்னையும் என்னையும் உள்நோக்கி பயணிக்க வைக்கும் ஒரு சூட்சுமத்தின் ஸ்தூலக் குறியீடு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு அதிர்வு. ஒரு முகத்தின் அதிர்வுகள் கூடுதல்.

அதை வாங்கிக் கொள்ளும் தன்மை பாத்திரத்துக்கு இருக்க வேண்டும். நீ ஒரு முகம் ருத்ராக்க்ஷம் அணிய வேண்டும் என்று விலை கொடுத்து வாங்கலாம்...ஆனால் அணிய முடியாது. சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அசத்தியத்தை செய்தால் அப்படி செய்பவனுக்கே அது அழிவு. இன்னும் சொல்லப் போனால்....ஒரு முகம் ருத்ராட்சத்தை நீ அணியவேண்டுமானால் நீ அதை தேர்ந்தெடுக்கவே முடியாது. காலச் சூழலும் உனது பக்குவமுமே உன்னை ஒரு முகத்திடம் கொண்டு சேர்க்கும்...அதுவரையில் இட்ட பிச்சையை புசித்து வாழ்ந்து வா....

ஒற்றீஸ்வரர் கோயிலில் ஒரு யோகி கூறியதை ஆன்மா உள்வாங்கிக் கொள்ள இட்ட பிச்சையைப் புசித்து நடந்து கொண்டிருந்த என்னிடம் இப்போது ஒரு முகம் வந்து சேர்ந்து விட்டது. நேபாளம், இந்தியா, சிங்கப்பூர், மீண்டும் இந்தியா வழியாக துபாய் வந்து சேர்ந்த கதையை நான் இப்போது சொல்லப் போவதில்லை. அது விதி. பரதேசம் போகவேண்டிய பரதேசியின் விதி. இழுத்துச் செல்லும் சக்தியோடு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்ம பயணத்தில் ஒரு மைல்கல்.

அஹம்ப்ரமாஸ்மி....நீயே கடவுள்.. பிறகு ஒருமுக ருத்ராட்சம் என்ன செய்து விடும் என்ற புரிதலான கேள்விகள் எல்லாம்....ஏறி வந்து மறைந்து போக படிகள் வேண்டாமா? மேலேற்றி விட கைகள் ஏதும் இல்லாமல், வழித்தடங்கள் இல்லாமல் ஏறிச் சென்றுதான் விடமுடியுமா? என்ற எதிர்கேள்விகள் கேட்ட போது செத்துப் போய்விட்டன.

உணர்வு நிலை என்னும் சூட்சுமத்தின் ஸ்தூல அடையாளம் இது. சிவம் என்னும் சலனமற்ற சூன்யத்தின் சக்தி குறியீடு. போகிக்கும். யோகிக்கும் மத்தியில் இஸ்லாம் வர்ணிக்கும் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் மயிரினும் மெல்லிய பாலத்தை நான் இப்போது கடந்து கொண்டிருக்கிறேன்.

கடந்த பிரதோஷ தினத்தில் என்னோடு ஒட்டிக் கிடந்த ஐந்து முகம் என்னை விட்டு பிரிய உடல் பிரிந்த ஆன்மாவாய் என்னோடு ஒட்டிக் கொண்டது இந்த ஒருமுகம். இருந்த உயிரின் தடிமன் இன்னும் இன்னும் அழுத்தமாய் படர்ந்து கொள்ள மனம் உள்முகமாய் இன்னும் ஆழமாய் திரும்பிக் கொண்டது. உடலை சூழ்ந்து கொண்ட அதிர்வுகள் எங்கிருந்து பிறந்தன என்று என்னால் யோசிக்க முடியவில்லை....ஆனால் இன்னும் எதார்த்தமாய் அழுத்தமாய் தரையில் எனது கால்கள் பதிய நின்று கொண்டேன். நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு இன்னுமொரு உந்து சக்தியாய் எனக்கு இந்த ஒருமுகம் கிடைத்திருக்கிறது.

ஒருமுகம் ஏதோ ஒன்றை எனக்குச் செய்து விடும் என்று உங்களுக்கு இங்கே நான் சொல்ல வரவில்லை.....எப்படி ஒரு காந்ததிற்கு ஈர்ப்பு நிறைந்த அதிர்வுகள் இருக்கிறதோ அப்படியான அதிர்வுகளை இந்த ருத்ராட்சமும் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்ததின் அடிப்படையில் இங்கே பதிவு செய்கிறேன். அதற்கு மேலதிகமாக எதை நான் சொன்னாலும் அது முழுமையைச் சொன்னதாகாது. முன்னும் பின்னும் அலையும் மதயானையைப் போல காலம் நம்மிடம் பிரமாண்டப்பட்டுப் போயிருந்தாலும் நிஜத்தில் அப்படி ஒன்றுமே இல்லை என்பதை உணரும் கணம் ரொம்பவே வித்தியாசமானது.

பக்தி என்பதும், கடவுள் என்பதும் படி நிலைகளாக இருந்தாலும் அவை கொண்டு சேர்க்கும் இடம் சர்வ நிச்சயமாய் நாம் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. பிரமாண்டம் என்ற சொல்லை கேட்டு விட்டு அதையும் மட்டுப்படுத்திதான் மனது கற்பிதம் கொள்ளும். சொல்வது எல்லாமே சத்தியத்தைப் போன்றதுதானே அன்றி சத்தியம் வேறாகவே இருக்கிறது எப்போதும். எனது சுமையை ஒரு கூலியாய் நான் சுமந்து நகர்கையில் சுற்றியிருக்கும் கூலிகளின் சுமை தூக்கும் அனுபவங்களும் எனதாகிப் போகிறது. உயிரோடு இருக்கும் வரையில் நாம் எடுத்து வைத்து பேசிக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் இறந்த பின்பு காணாமலேயே போக....மிச்சமிருக்கும் ஏதோ ஒன்று உறுத்தலாய் அதிர்வுகளாய்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வாழும் வரை வாழ்க்கையை ஏதோ ஒரு கனவில் வாழ்ந்து விட்டு மரித்துப் போகும் அவல நிலையை விட்டு அந்தப் பெருஞ்சக்தி என்னை இப்போது நகர்த்தி வைத்திருக்கிறது. லெளகீகத்தின அவசியம் எனக்கு அவசியமற்றதாகவும், எனது அவசியம் லெளகீகத்துக்கு அனாவசியமாகவும் இருக்க....

யாருமற்று வந்த நம்மை யாருமற்று கொண்டு செல்ல அதோ காத்துக் கிடக்கிறது காலம். உற்றார், உறவினர், வந்தவன் போனவன், ஏழை பணக்காரன், நல்லவன், கெட்டவன், அதிகாரி, அமைச்சன், அடிமைகள், அறிவாளிகள், முட்டாள்கள்.. என்று எல்லோரையும் மென்று தின்று விட்டு நகரப்போகிறது அது....

இந்த உலகத்திற்குள் நான் வந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தை குறையில்லாமல் செல்ல வேண்டும் என்ற சிரத்தையோடு நகர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் பரதேசியின் பொழுதுகள்...அவ்வளவே...!

ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே....!

எழுதியவர் : Dheva.S (20-Mar-13, 10:56 pm)
பார்வை : 272

சிறந்த கட்டுரைகள்

மேலே