கருத்தப பாண்டி (தொடர் )-பகுதி-30

30
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“இல்லை. இல்லவே இல்லை. என் பிரிவு போர்மென் சந்தானசாமி கூட என்னைத் தடுத்தார். ஸ்பேனர் ,ஸ்க்ரு ட்ரைவர் ஏந்திய என் கைகளால் கோப்புகளை தாங்க வேண்டாம் என்றும், என்னுடைய கொள்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் நிர்வாகம் ஒத்து வராது என்றும் எச்சரித்தார்! ஆனால் விதி சார்! நிர்வாகத்திற்குள் நான் கொண்டு செல்லப்பட்டேன்.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கரலிங்கத்தின் இருக்கையின் மேல் இருந்த பெரிய பேட், மூலையில் ஒரு கவர் இருந்தது. ரகசியம் என முத்திரையிடப்பட்டிருந்தது. பிரித்துப் பார்த்தான் சங்கரலிங்கம்!

படித்தான்! உடல் வியர்த்தான்!

இதென்ன இந்த மாதிரி மேலிடத்தில் இருந்து. தனக்கா... உள்ளுக்குள் குமுறினான்! கொந்தளித்தான்!

கண்காணிப்பாளர் “சங்கர்... ஏன் என்ன ஆச்சு? என்ன பிராப்ளம்” என்று கையில் இருந்த கடிதத்தை வாங்கிப் படித்தார்!

அமைதியாகச் சொன்னார், “சங்கர் ஏன் இதுக்குப் போய் உணர்ச்சி வசப்படணும். இது சும்மா ஒரு விசாரணைதான். நாம்ப ஏன் பயப்படணும். எனக்கும் இதே மாதிரி நேத்தே கடிதம் வந்தது. நாமதான் காலையிலே இருந்தே ரொம்ப பிசியாய் இருந்தோமே அதான் சொல்றதுக்கு நேரமில்லை”

“என்ன சார் இதைப் போய் சும்மா ஒரு விசாரணை அப்படின்னு சொல்றீங்க. எவ்வளவு அசிங்கம் சார் இது! எதோ நரகலைத் தொட்டுட்ட மாதிரி ஒரு அருவெறுப்பு உண்டாகுது சார்! சார் நம்ம மேலே லஞ்ச பிரிவில் l இருந்து நோட்டீசா...? அய்யோ...”

“சங்கர் எவனாவது மொட்டை எழுதிப்போட்டு இருப்பான் , கூப்பிட்டு விசாரிப்பாங்க. நாம ஏன் கலவரப்படணும். நாம் போய் நமக்கு தெரிஞ்சதை எழுதிக்கொடுத்துட்டு வருவோம்! அவ்வளவு தான்”
இருவரும் துணை இயக்குநரிடம் சென்று கடிதம் குறித்த செய்திகளைக் கூறினர்.

“அவன்வோ கிடக்கறான்வோ... ஊரெல்லாம் நாம வேலைக்கு ஆள் எடுத்து தெரிஞ்சுப் போய், வேலை கிடைக்காதவன் அல்லது சங்கரலிங்கத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி உள்ளவன் எவனோ செஞ்ச வேலைதான் இது. நான் கூட எப்பவோ போய் ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டு வந்தேன். இது ஒரு ரொட்டீன் அபயர்பா. அட நம்ப மடியிலே கனம் இல்லாதப்போ நாம ஏன்ப்பா பயப்படணும்! வேலையைப் பாருங்க. போய் ஸ்டேட்மெண்ட் கேட்டா கொடுங்க” மிகவும் காஷுவலாக பேசினார் துணை இயக்குநர்.

“மாலை நான்கு மணிக்கு ஓர் ஊழல் மற்றும் மோசடி தொடர்பான வழக்கு ஒன்றினை விசாரிக்கும் பொருட்டு தாங்கள் நேரில் அலுவலகத்தில் கீழே கையொப்பமிட்ட அதிகாரியை அணுகவும்” என்றிருந்த வாசகத்தை மீண்டும் ஒரு முறைப் படித்தான்.

சரியாக நான்கு மணிக்கு அந்த அலுவலகத்தினுள் நுழைந்தான் சங்கரலிங்கம்.

தொடர்புடைய அதிகாரியும் இளவயதினர். நன்கு மரியாதை அளிக்கத் தெரிந்தவராக தென்பட்டார். இருந்தாலும் இந்த ஆட்களைப் பற்றி ஏற்கனவே சங்கரலிங்கம் தெரிந்து வைத்து இருந்ததால் சற்று எச்சரிக்கையாகவே இருந்தான்.

“எங்கள் குழி நிரப்பிக் கொன்னியே, அந்த பாவம் சும்மா விடுமா. அதான் இதோ எங்கத் துறையிலே மாட்டிக்கிட்ட” என்று அந்த இரண்டு ஸ்பெஷல் பிராஞ்ச் ஆட்கள் பேசுவது போன்ற உணர்ந்தான் சங்கரலிங்கம்.

“உட்காருங்க மிஸ்டர் சங்கர். என்ன சாப்பிடுகிறீர்கள் ? டீ, காபி”

“நன்றி சார். கொஞ்சம் பதட்டமாதான் இருக்கு. டீயே கொடுங்க சார்” என்றான் சங்கரலிங்கம். சற்றே நம்பிக்கை எழுந்தது அதிகாரி மேலே.

“உங்க மேலே ஒரு பெட்டிஷன் வந்திருக்கு. நாங்க உங்களை பத்தி விசாரிச்சோம். உண்மையைச் சொல்லப் போனா உங்கட்கு சாதகமா சூழ்நிலை இல்லே. ஆனா அய்யா தியாகராஜன்
கண்காணிப்பிலே நீங்க வளர்ந்து ஆளாகின ஒரு அம்சம்தான் எங்களை நம்பிக்கைக்கு உள்ளாக்கியது. பல பேர் உங்களோட நேர்மையிலே முழு நம்பிக்கை வச்சிருந்தாலும், கொஞ்சம் ஸ்டிராங்காகவே மேலே எதிர்ப்பு இருக்குது.”

டீ வந்தது. இருவரும் குடித்தனர்.

“ஆமா சங்கர்... தியாகராஜன் அய்யாவுக்கு நீங்க என்ன உறவு?

“மனித உறவு மட்டும் தான் சார். கிராமத்திலே தறிக்கெட்டு நெறி தவறிப் போய் இருந்த என்னை ஆளாக்கின தெய்வம் அவுக”

“இன்றைக்குப் பல பேர் இந்த ஊரில் ஒரு காலத்திலே அய்யாகிட்ட வேலை செய்தவங்க இல்லாட்டி வேலை கத்துக்கிட்டவங்க. இந்த வேலைக்கு ஆள் எடுத்த வகையில உங்களோட பங்கு என்னன்னு சொல்லுங்க” என்று சட்டென்று விசாரணைக்கு வந்தார்.

எதுன்னு நான் சொல்வது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அனைத்து வேலைகளிலும் தன்னுடைய பங்கு இருந்தது என்பதை எப்படி மறுக்க முடியும் என்று தனக்குள் எண்ணிய சங்கரலிங்கம், “குறிப்பா கேட்டீங்கன்னா... சொல்றேன் சார்” என்றான்.

“குறிப்பா இந்த மதிப்பெண்கள் போடறத விஷயம்!”

“சார் ஒண்ணு மட்டும் தயவு செஞ்சு நீங்க தெரிஞ்சுக்கணும். இந்த எழுத்துத் தேர்வு நடந்து பேப்பர் திருத்தம் வரைக்கும் எந்த நிலையிலும் எந்தத் தவறும் இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா தேர்வு நடந்த அடுத்த நாள் விடியல் வரைக்கும் “பொய் எண்” இடும் வேலை, சீல்வைத்தல் முதலியன நடந்தது. இயக்குநர், துணை இயக்குநருக்கும் நான் உதவி செஞ்சேன்.
மறுநாள் விடிந்து காலை 9 மணிக்கெல்லாம் திருத்தும் வேலைதொடங்கி அன்று இரவே மதிப்பெண்கள் எல்லாம் ஒரு ரெஜிஸ்டரில் எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிட்டு வேலை வாங்கித் தரேன்னு சொல்ல எச்சிற் இலை பொறுக்கிகள் கூட “எழுத்துத் தேர்வில் பாஸ் பண்ணி வா பார்ப்போம்” ன்னு சொல்வாங்கன்னு நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.”

“கரெக்ட்... எங்க விசாரணையிலும் இதே ஸ்டேட்மெண்ட் கிடைச்சது. நேர்முகத்தேர்வுக்கு கிடைக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை நீங்க அட்ஜெஸ்ட் செய்ய முடியாதா. சங்கர்”

“இந்த மாதிரியும் குற்றச்சாட்டோ, ஊழலோ நடைபெறக் கூடாதென்றுதான் இந்த முறை நேர்முகத்தேர்வு கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படவே இல்லை”.

“அப்படியா... இது ரொம்ப முக்கியமான பாயிண்ட். ஜஸ்ட் ய மினிட் நான் நோட் பண்ணிக் கொள்கிறேன்!...

அப்புறம் “நேர்முகத்தேர்வு எல்லார்க்கும் முடிந்த பிறகு, அன்று இரவே சீல்வைச்சிருந்த ரெஜிஸ்டரில் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் எழுதப்பட்டு, கூட்டப்பட்டு அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியல் விடிய விடிய தயார் செய்யப்பட்டு நியமன உத்தரவுகள் அனுப்பப்பட்டன. எந்த நிலையிலும் எந்தத் தவறும் எழ வாய்ப்பே இல்லையே”

“சரி மதிப்பெண்களை எழுதி, மொத்தக் கூட்டுத் தொகையும் எழுதியது யார்?”

“இயக்குநர், துணை இயக்குநர், நான் ஆகியோர் மாறி மாறி எழுதினோம். ஒருவரே நிறைய மதிப்பெண்களை எழுதினால் தவறு வரும் என்றுதான் இப்படிச் செய்தோம்.”

“நீங்கள் ஒரு சாதாரண தொழிலாளி i உங்களுக்கு இந்த மாதிரி முக்கியப் பணிகளில் பங்கு வகிக்க எப்படி முடிந்தது?”

“விதி சார்!... என் மேலே அதிகாரிகளுக்கு இருந்த நம்பிக்கை, இயல்பாகவே எதையும் வேகமாய், துல்லியமாய், மந்தணத்தோடும் செய்வது என் வழக்கம். இதனால்தான் பல முக்கியப் பணிகளில் நான் ஈடுபடுத்தப்பட்டேன்.”

“நீங்கள் விரும்பி சிபாரிசுப் பிடித்துதான் நிர்வாக அலுவலகத்திற்குள், இருந்து வந்தீர்களா?”

“இல்லை. இல்லவே இல்லை. என் பிரிவு போர்மென் சந்தானசாமி கூட என்னைத் தடுத்தார். ஸ்பேனர் ,ஸ்க்ரு ட்ரைவர் ஏந்திய என் கைகளால் கோப்புகளை தாங்க வேண்டாம் என்றும், என்னுடைய கொள்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் நிர்வாகம் ஒத்து வராது என்றும் எச்சரித்தார்! ஆனால் விதி சார்! நிர்வாகத்திற்குள் நான் கொண்டு செல்லப்பட்டேன்.”

“குமாரசாமி என்ற ஒரு தொழிலாளி பற்றி உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும் என்னைப்பற்றி, என் குண நலங்கள் பற்றியும் நான் நிர்வாகப் பணியில் நன்கு ஈடுபட முடியும் என்றும். என் நேர்மை, இவைகளை நன்கறிந்தவர். நல்ல மனிதர். இவர்தான் அப்போது இருந்த மேலதிகாரியிடம் என்னைப் பற்றிச் சொல்லி நிர்வாகத்திற்கு அழைத்துக்கொண்டவர். அவருடன் இணைந்து நான் செயல்பட்டு இருக்றேன். என்னைப்போலவே அவரும் நேர்மையானவர். நாங்கள் இருவரும் பலமுறை வெவ்வேறு பிரிவினரை வேலைக்கு எடுத்திட நிர்வாகத்திற்கு உதவி செய்து இருக்கிறோம்.”

“அவருடன் பணியாற்றும்போது அவருக்கும் உங்களுக்கும் ஏதும் கருத்து வேறுபாடுகள் எழுந்தது உண்டா?”

“உண்டு. எவரோடும் நான் என்னுடைய வழிமுறைகளைக் காம்ரமைஸ் பண்ணிக் கொள்வதில்லை. இதனால் கருத்து வேற்றுமைகள் வருவதுண்டு. ஆனால் எப்போதும் எவரிடமும் பகைமைப் பாராட்டியதில்லை. பாராட்டிட வேண்டியச் சூழல் உண்டாகினாலும், அது நேரிடையான, நேர்மையான தாகத்தான் இருக்கும்.”

“உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைப் பார்த்து, பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் நீங்கள் பணி இடமாற்றத்தில் சலுகை காட்டுவதுண்டா?”

“ஒரு தாள் கொடுங்கள். என் வீட்டிற்கு வந்துப் போகக்கூடிய ஒரு சிலரின் பெயர் பட்டியல் தருகிறேன். இவர்களைத் தவிர யாரையும் நான் வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை. நான் மட்டும் அல்ல என் வீட்டில் உள்ளோரும் தான்.”

“நீங்கள் கூறியது எல்லாம் எங்களின் விசாரணைக்கு ஒத்துப்போகின்றன. சரி இந்தச் சங்கங்கள், அதன் தலைவர்கள் குறித்து உங்களுக்கு என்ன கருத்து, ஐ மீன், அவர்கள் மேல் உங்களுக்கு ஏதும் பகைமை உண்டா?”

“ஆம் உண்டு, நேரிடையான பகைமை, இது அவர்களுக்கே தெரியும். உண்மையான தொழிற்சங்கங்களாக இல்லாமல் மாமா வேலைப் பார்க்கும், மன்னிக்கனும் சார் – தலைவர்களை நான் மதிப்பதே இல்லை. இப்படிப் பட்டவர்கள் தங்கள் சுயநலத்திற்குத்தான் தொழிலாளர்களை பகடைக்காய்களாக மாற்றி நிர்வாகத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும்தான் வசதிகளை செய்து கொடுப்பது வழக்கம்! தவிர அவர்களுக்கு ஏற்றாற்போல நான் நடக்கவில்லை என்பதால் என்மீது அவர்கள் இல்லாத பொல்லாதவைகளை குற்றமாக சுமத்திடவும் செய்தார்கள். எனவே அவர்கள் மீது பகைமை தான் எனக்கு! நான் மறுக்கவில்லை”

“இந்த பகைமையின் காரணமாக நீங்கள் அவர்களை பழிவாங்குவது போன்று பல பணி இட மாற்றம் செய்த்துண்டா?”

“இல்லை. இல்லவே இல்லை! செய்யவும் மாட்டேன். காரணம் என் பகைமை அவர்களின் கொள்கைகளின் மீது. தனிப்பட்டது. தொழிலாளி என்ற முறையில் அவர்களுக்கு உரியது – முறையானவை எதுவும் என்னால் கெடுக்கப்படவில்லை கெடுக்கப்படவும் மாட்டாது! சங்கவாதிகள் என்பதால் முறையற்றது எதுவும் கொடுக்கப்படவும் மாட்டாது!

“இறுதியாக ஒரு கேள்வி. சாமியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்”

“சாமி மிக விரைவில் வளர்ந்து வரவேண்டும் என்றத் துடிப்போட உள்ள ஒரு தறிகெட்ட சங்கத்தலைவன். ஆளும் வர்க்கத்தின் அடிவருடி. தன்னைப் பற்றிய இமேஜ் பரவலாக்கப்பட தொழிலாளர்களை அழித்து ஒழிப்பதில் அவர்களுக்குத் தெரியா வண்ணம் திட்டம் தீட்டும் குள்ள நரி!

“உங்களுக்கு தொடர்ந்து நிர்வாகத்தில் இருக்க விருப்பமா?”

“இல்லை. இல்லவே இல்லை. இதை பலமுறை எழுத்துப் பூர்வமாக விண்ணப்பங்கள் கொடுத்துள்ளேன்.”

“ஆதாரங்கள் வைத்து இருக்கின்றீர்களா?”

“விண்ணப்பங்களின் படி வைத்து இருக்கிறேன். வேண்டமென்றால் கொண்டு வந்து தருகிறேன்.”

“சரி மாலையில் கொடுங்கள். தனிப்பட்ட முறையில் நான் உங்கட்கு ஒன்றைச் சொல்லுகிறேன். இப்போது உள்ள காலம் முற்றிலும் நேர்மைக்கு எதிரானது ஊழலுக்கு உதவக்கூடியது. லஞ்ச ஒழிப்பு அதிகாரியே இப்படி பேசுகிறேனே என நினைக்காதீர்கள். இதுதான் உண்மை! நீங்கள் ஒருத்தர் மட்டும் எதுவும் செய்துவிட முடியாது. உங்கள் பெயர்தான கெட்டுப் போகும் இந்தப் புகார் கடைசியாகத்தான் எங்களிடம் வந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஒரு டாக் இன் மேன்ஜர்... அதாவது “வைக்கற் போரில் ஒரு நாய்...” அவ்வளவுதான்”

“இதுலே எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சந்தோஷம்தான் சார்”

சங்கரலிங்கம் ஸ்டேட்மெண்ட் சொல்ல சொல்ல அவர் எழுதி முடித்தார். கையெழுத்து போட்டு எழுந்த சங்கரலிங்கத்திடம் அவர் சொன்னார்.
“இப்போக் கூட வெளியே என்ன பேசிக் கொள்வார்கள் என்றால் நீங்கள் எங்களையெல்லாம் “கண்டுக்கிட்டீங்க” – அதனால கேஸை ஒன்னும் இல்லாமப் பண்ணிட்டோம்னு உலகம் ரொம்ப விசித்திரமானது. பொறுக்கிகள் மத்தியில் பொறுக்கியா இருந்திடாமப் போனாலும் நல்லவனா வாழ்ந்துக் காட்டுவேன் என்ற வீராப்பு உதவாது. பிடிக்கலேன்னா ஒதுங்கிப் போயிடணும்”

“நன்றி சார், உங்களோட கருத்துக்கு” என்று புறப்பட்டான். எழுந்து நின்று கைகுலுக்கி அனுப்பி வைத்தார் அவர்.

வீட்டை நோக்கிப் புறப்பட்டான் சங்கரலிங்கம்! வண்டியில் ஏறிஓட்டிச் செல்லாமல் தள்ளிக் கொண்டே வந்தான்! மனதில் பலவித எண்ணங்கள்!
இவ்வளவு உழைத்தும், ஒரு மொட்டைக் கடிதம் தனது நேர்மையை, உழைப்பை தீக்குளித்து எழுந்துவிடச் செய்துவிட்டதே! குன்றிப் போனான்! சாலையில் வருவோர், போவோர் எல்லாம் இவனைப் பார்த்து சிரிப்பதுப் போன்று இருந்தது!
நாய் ஒன்று குறுக்கே வந்தது.

“நீங்க வைக்கற்போரிலே ஒரு நாய்” அவ்வளவுதான். அவர் சொன்னது நினைவிற்கு வந்தது. சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தவனுக்குக் கருத்தப்பாண்டியும், தியாகராஜனும், மூக்கையாவைப் பார்க்கப் போனது தெரிந்தது.

கருத்தப் பாண்டி வருவான் மீண்டும்...

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (28-Mar-13, 10:28 pm)
சேர்த்தது : agan
பார்வை : 84

மேலே