ஒவ்வாமை

கட்டறுந்த கயிற்றிலே
கண்மூடி நடனம் போடும்
கலியுக அரசியலில்
அள்ளிப்போடும் அரிசிக்கும்
உளுத்துப்போன பருப்புக்கும்
அனலாக்க உதவும் மண்ணெண்ணைக்கும்
மடியேந்தி மயங்கிக்கிடக்கிறோம்....

அக்கிரமகாரர்களின் சதியின் பிடியில்
அள்ளிக் குறைக்கும் அளவுக்கும்
காந்தியை கம்பீரமாக நீட்டும்
எங்களால் வாய் பேச முடியவில்லை
சமத்துவ நாட்டில்.....

கைப்பிடி சோற்றுக்கு அல்லாடும் தமிழ்நாட்டில்
கோடி கோடியாக கொட்டப்படுகிறது கோவில்களில்
கோடியில் வாழும் கடவுளுக்கு
தெருக்(கோடியில்) வாழும் மக்களைப் பற்றிய
அக்கறையிருப்பதாக தெரியவில்லை......

சாதியை ஒழிப்போம்
சாதிசங்க மாநாட்டில்
நாளை ஆர்ப்பாட்டமாம்
கண்துடைக்கும் கைகுட்டை
கவனிப்பாரில்லை ........

மதவாத அரசியலாம்
நாட்டில் புகுந்தால் நாட்டையே நலிவடைய செய்யும்
மதபோதகரின் அறிவுரை .....

வேதனைகள் பல சுமந்து
வீதியிலே நடைபயிலும் எங்களின் விபரீதம்
இச்சைக்கு இருப்பிடமாக்கி கொண்டு
இன்னல்கள் புரியும் வேட்பாளர்களின்
விளம்பர தட்டிக்கு புரிவதில்லை ....

மதுவை ஒழிப்போம் ஒட்டுமொத்த குரல்
ஒலித்தது ஒருநாள்
மதுவை ஒழித்தனர் கடையிலிருந்து
குடிமகன்களுக்கு விற்றுத்தீர்ப்பதன் மூலம்
போராட்டம் புகழ் பெற்றது.......

பொங்கல் பொங்கியதோ என்னவோ ஒவ்வோர் வீட்டிலும்
அரசின் கஜானா பொங்கியது- டாஸ்மாக் மூலம்
குடிகுடியை கெடுக்குமாம்...
தமிழ்நாட்டை(ஆள்பவர்களை) வாழவைக்கிறது

நெடுஞ்சாலையில் பார் வசதியுடன் டாஸ்மாக்
குடித்துவிட்டு வண்டியோட்டினால் அபராதம்
அருமையான கையேந்தல்

வெள்ளையனை விரட்டி சாதனைபுரிந்ததாக
சுதந்திரதினம் கொண்டாடி சோர்ந்து போகிறோம்
கொள்ளையனை குடியமர்த்தியது தெரியாமல் ..

எங்களுக்கு விடிவு காலம் வருமென்று
காத்திருந்து ஆட்சி மாற்றினோம்
அது ஆட்சியல்ல எண்ணத்தின் வீழ்ச்சி
என்று இறுதியில் இளைத்து போகிறோம் ..
அடுத்த விடியலுக்காக காத்திருந்து ...

எழுதியவர் : bhanukl (30-Mar-13, 8:23 pm)
பார்வை : 117

மேலே