அனைவருக்கும் வணக்கம்..!- பொள்ளாச்சி அபி

உங்களிடம் சில செய்திகள் சொல்லவேண்டியதிருக்கிறது.!

உங்கள் பொன்னான நேரத்தை, இதனை வாசிப்பதற்காக நீங்கள் சற்று செலவிடவும் வேண்டியதிருக்கும்.இறுதியில் அது பயனுடையதாகவும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.!

கடந்த ஆண்டில்,எழுத்து தள தோழர்களின் ஒத்துழைப்புடன்,நமது தோழர்.அகன் அவர்களின் சீரியமுயற்சியில்,”யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும்போதும்” எனும் கவிதை தொகுப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே..!

இந்த ஆண்டும்,அதேபோல சிறப்புமிக்க ஒரு தொகுப்பை வெளிக் கொணரும் வகையில் முன்முயற்சிகள் துவங்கிவிட்டன. அது குறித்து ஒரு சிறு பகிர்வே தங்களுக்கான இந்த மடல்.!

ஏற்கனவே தோழர்.அகன் அவர்களால் சில தினங்களுக்கு முன் தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி அனைவரும் பங்கேற்கும் வகையிலான ஒரு தொகுப்பும் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அறிவிப்பு “முற்றிலும் மகளிருக்கான சிறப்புத் தொகுப்பு” குறித்தது.
எழுத்துத் தளத்தில் தோழியர்கள் பலநூறுபேர்,பலவிதமான சிந்தனைகளில்,தங்கள் கவிதைகளைப் படைத்து வருகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி..!

எழுத்துத் தளத்தில் இயங்கும் தோழியர்களின் கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து,ஒரு சிறப்பு தொகுப்பு வெளிக் கொணரவேண்டும் என்பது திட்டம்.!

இதுகுறித்துத் திட்டமிட்டு,இங்குள்ள பல கவிதைகளை சேகரித்தபோதும்,அந்தக் கவிதைகள் அனைத்திலும் அடிநாதமாக ஓடும்,ஒரு குறிப்பிட்ட ஒற்றுமை உணர்ச்சியைக் காணமுடியவில்லை.!

-இதை இங்கு குறிப்பிடக் காரணம்,கடந்த முறை “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்” என்ற கவிதை நூலுக்கான கவிதைகளைத் தொகுத்தபோது,அதில் நமது சமகால பிரச்சினையான ஈழத்தின் நிலை குறித்து பலரது சிந்தனையோட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக,கவிதைகள் இருக்கும்படி தொகுக்கப்பட்டது.-

பொதுவாக ஒரு கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது எனில்,அத் தொகுப்பு முழுவதும் ஊடாடி நிற்கும் ஒரு மையக்கரு தேவையாயிருக்கிறது. அது காதலாக இருக்கலாம்.அரசியலாக இருக்கலாம்,விழிப்புணர்வு,சுயமுன்னேற்றம்,தத்துவம்,பக்தி என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படியிருப்பதே ஒரு தொகுப்பின் சிறப்பம்சமாக இருக்கும்.

ஏழைகளின் குடிசை மேல்
வெளிச்சம் விழாதபடி,
மாடிகளின் நிழல்களே
மறைத்துக் கொண்டன..!
------------

பட்டுவேட்டியைப் பற்றி
கனாக் கண்டு
கொண்டிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது.!
-------- இதுபோல கவிஞர் வைரமுத்துவின் ஒரு தொகுப்பில்-தொகுப்பு முழுவதும் விரவிக்கிடக்கும் அரசியல் நையாண்டிக் கவிதைகள்.!
----------

“கண்ணே கண்ணுறங்கு..
புது ஜனாதிபதி வந்துவிட்டார்.
கண்ணே கண்ணுறங்கு.

இனிமேல் இவரை
இண்டியன் நியூஸில் பார்க்கலாம்..!
வானொலியில் பேச்சைக் கேட்கலாம்..!
வெளிநாட்டில் பறக்கக் காணலாம்..!

இருக்கிற பசியை மறந்து
கண்ணே கண்ணுறங்கு..!
----------

ஆஸ்தான கவிஞனாக
ஆசைகள் இல்லவே இல்லை..
நோபல் பரிசுகளுக்காக
நிமிடமும் நினைப்பதே இல்லை..,
ஏழைகளை சிரிக்கவைக்கும் வரை
எழுதிக் கொண்டே இருப்போம்..!
இவைகள் குற்றங்கள் என்பவரை
கர்ப்பத்திலேயே அழிப்போம்.!!
-------------- இவ்வரிகள், கவிஞர் அறிவுமதியின் கறுப்பு மை சிவப்பெழுத்து தொகுப்பு முழுவதும் பரவிப் பரவசப்படுத்தும் நிதர்சன அரசியல் அவலங்கள்..!

---------
எட்டுமணி நேர வேலைக்கு
கொட்டினாராம் இரத்தம்.!
பெற்றனராம் உரிமை.
வாழ்க..வாழ்க..!

மனைவி எனும் தொழிலாளிக்கு
எட்டுமணிநேரச் சட்டமுண்டோ..?

காலையில் அவள்தான்
தெருக்கூட்டும் தொழிலாளி,
பின்னர் சமையலறையில்
சமையல் தொழிலாளி,
பரிமாறும்போது ஓட்டல் தொழிலாளி,
துணி துவைக்கும்போது
சலவைத் தொழிலாளி.,
பத்துத் தேய்க்கும்போது
வீட்டுவேலைத் தொழிலாளி,

ஒரு சேதி தெரியுமோ..?
மனைவி பிள்ளை பெறுகிற
மருத்துவமனைப் பிரிவின் பெயரே
“லேபர் வார்டு”

---------

காலையில் நான்
விழிக்கும் முன் விழிக்கும் விழி
குளிக்கும் போது
முதுகைத் தேய்க்கும் மூன்றாம் கை..!
.. .. .. .. ..
தொண்டடிமை வேடம் புனைந்து வந்த தெய்வமே..!

--இது கவிஞர் அடியார் எழுதிய மனைவி எனும் கவிதை தொகுப்பில்,
மனைவியின் குணங்களையும்,மாண்புகளையும் தொண்டுள்ளத்தையும் தொகுப்பு முழுவதிலும் சிறப்பாகச் சொல்லிச் சொல்லும் வரிகளில் சில..!
---------

வேட்டையாடப்பட்டு யானைகள்
விழுந்தபோதெல்லாம்
இந்த மலைக்காடுகளின்
இதயத்தில் விழுந்தன இடிகள்..!
--------
மலையின்
மார்பு எலும்புகள் கிடுகிடுக்க
ஆவேசிக்கும் புயலிடம்
சரிகமபதநிக்கள்
சரியாக இருக்கும் என
எவன் எதிர்பார்ப்பான்.?
---
வுட்டத்தை சரியாக
வரைந்து கொண்டு வருவது
பௌர்ணமி நிலாவுக்கு சாத்தியம்..!

--- இது ஈரோடு தமிழன்பன் எழுதிய “மூன்று பெயர்களும்,என் முகவரிப் புத்தகமும்”கவிதை தொகுப்பில் இயற்கையை முன்னிறுத்தி,தற்கால இயல்புகளைச் சாடும் வரிகளாக நிரவிக்கிடக்கும் வரிகளுள் சில..!

கவிதை இலக்கிய வட்டத்தில் பெரும்புகழ் பெற்றுள்ள இத்தொகுப்புகளைப் போலவே,நமது மகளிர் மட்டும் தொகுப்பும் தனது உயிராக ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு பொது அம்சமாக,”இந்த நூற்றாண்டில் பெண்களின் நிலை” என்பதை பொதுக்கருத்தாகக் கொண்டு படைப்பை வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதில்,தற்கால பெண்களின் நிலை-பெண்ணடிமை, பெண்ணுரிமை,பெண்சுதந்திரம்,பெண்களுக்கான சமத்துவமின்மை..தன்னிறைவு.., இப்படி பெண்களின் நிலை குறித்த கவிதைகளை நீங்கள் படைத்தளிக்கலாம்.
ஏற்கனவே எழுதி,தளத்தில் வெளியிட்டிருப்பவர்கள்,உங்களுக்கு திருப்தியாயிருக்கிற மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுத்து தோழர் அகன் அவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்.வாய்ப்பு இருந்தால் எனக்கும்.!

அவ்வாறில்லாதவர்கள் புதியதாக எழுதி,தளத்தில் பதிவு செய்துவிட்டு,அதனையும் அனுப்பிவைக்கலாம்.! மேலும் தங்கள் மேற்கண்ட பொருள் குறித்துப் படைக்கப்பட்ட மற்ற தோழியரின் கவிதைகளையும் நீங்கள் அனுப்பிவைக்கலாம்.!

“இன்று நீங்கள் எழுதுவது வெறும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கவிதைகளாக இருக்கலாம்.ஆனால்,சரித்திரத்தின் பக்கங்கள் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்..!”

அதனால், இந்த நூற்றாண்டின் காலத்தைப் பிரதிபலிக்கும்,வரலாற்று ஆவணத்தை கவிதையாக நீங்கள் அனைவரும் இணைந்து எழுதப்போகிறீர்கள். எனவே, அதற்குரிய அத்தனை சிரத்தைகளும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது உங்கள் கடமையாகிறது தோழியரே..!.

உங்கள் அன்பிற்குரிய தாய்,சகோதரி,காதலி,மனைவி,மகள் பெயர்களில் இயங்கும் படைப்பாளிகள் தயவு செய்து இதில் நேரடியாகப் பங்கேற்காமல்,தோழியருக்கு உதவி செய்யுங்கள்.!
இதனை வாசிக்கும் தோழர்கள்..,தோழியர்களிடத்திலும்,தோழியர்கள் தங்கள் தோழியர்களிடத்திலும் தகவலைப் பரிமாறிக் கொள்வது உங்களுக்கு பெருமை சேர்க்கும்.!
அன்புடன் பொள்ளாச்சி அபி.!.
----------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (3-Apr-13, 2:55 pm)
பார்வை : 328

மேலே