கவிதையும்,கடமையும்..! பொள்ளாச்சி அபி.

தணலுக்குள் விழுந்து துடித்து வெளியேறியவனின் உடலில் ஏற்படுகின்ற காயங்கள், அவனுக்கு உணர்த்தும் வலியில் வெளிப்படும் வார்த்தைகள் நமக்கு தருகின்ற வேதனைகளைப் போல..,
விழுந்தவனின் வேதனைகளை வேடிக்கை பார்த்தவன் சொல்லும்போது, அந்த வேதனையை முழுமையாக உணரமுடியாது.

அப்படித்தான் இருக்கிறது ஈழம் குறித்தும்,அம் மக்களின் அவலம் குறித்தும் நம்மால் பதியப்பட்ட கவிதைகள் என்பது எனது எண்ணம்..!

ஆனால்,இத்தளத்தில் இயங்கிவரும் தோழர் அகரமுதல்வனின் கவிதைகள் அடங்கிய அத்தருணத்தில் பகை வீழ்த்தி எனும் தொகுப்பை வாசிக்கும்போது மேற்கண்ட எனது எண்ணம் வலுப் பெற்றது.

ஈழத்தில் நிலவி வரும் இனப்படுகொலைச் சம்பவங்களும்,பேரினவாதத்தை நோக்கிNயு நகர்ந்து செல்லும் அரசியலும்,கடந்த 1983.க்குப் பிறகு மிகவும் உக்கிரத்தை அடைந்தது.

அப்போது முதல்,தமிழகத்தில் வசித்துவரும் ஆகப் பெரும் கவிஞர்கள் முதல்,கத்துக்குட்டி கவிஞர்கள் வரை,ஈழம் குறித்து இலக்கிய ரீதியாகப் படைக்கப்பட்டவற்றுள் காணப்படாத உணர்ச்சி வேகம் தோழர் அகரமுதல்வனின் படைப்புகளில் உண்டு.

காரணம்,இக்கவிஞர் பிறந்ததே,1992.ல் தான். ஈழத்தின் வடபகுதியிலுள்ள பளை எனும் பகுதியில் பிறந்தவர் இவர்.

அந்த வகையில்,இவர் யுத்தகளத்தில் பிறந்து வளர்ந்தவர்.நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகளை,யுத்தத்தின் கோரத்தை,உறவுகளை பின்னப்படுத்தும் அரச பயங்கரவாதத்தை, நேரில் கண்ணுறும் அவலம் வாய்க்கப்பெற்றவர். அன்றாட வாழ்க்கையின் நிலையே..,
- “அச்சவெளியில் அலறியடித்து
உயிரைக் காக்க
மூச்சிறைத்தபடி ஒரு ஆட்டுக்குட்டியாய்,
பெருமிருகத்திடமிருந்து தப்பிப்பது
சாத்தியமானதில்லை...!” – என்பதாகத்தான் இருந்திருக்கிறது.

இந்தச்சூழலில் வளரும் ஒரு குழந்தைக்கு, தனது ஊனும்,உறக்கமும்,படிப்பும்..,துப்பாக்கித் தோட்டாக்களும்,பீரங்கி ஷெல்களும் தன்னைக் கடக்கும் இடைவெளிகளுக்குள்ளான.,தனது வாழ்க்கையின் நீட்சி,இன்னும் எத்தனை விநாடிகள் என்றுகூட உறுதி சொல்லமுடியாத, விழித்திருக்கும் விநாடியெல்லாம் மரணபயமே போர்த்தப் படுகிற வாழ்க்கையெனில்..அங்கு வாழும் மக்களின் நிலை,நம் கற்பனையையும் கடந்தது.

சாதாரணமாக நாம் கற்பனையை,அனுபவத்தை கவிதையாக்குவோம். அகரமுதல்வனோ, தமது,நாட்டு மக்களது வாழ்க்கையை கவிதையாக்கியிருக்கிறார்.

“ஒரு நைல்நதியாய்
வடிந்து கொண்டோடியது குருதி
கொலைக்களத்திலிருந்து
கறுப்புமனிதர்களால்
அரைப்பிணங்களாய்.
தெருவெங்கும் விரவிப் பிச்சை கேட்கிறது
எம் உயிர்கள்..!”
-------
ஒவ்வொருநாளும்
மலர்களுக்கு பதிலாக
மரணம் மலர்ந்தது.
மரணம்,மரணம் மரணமென்றானது
எம் மண்ணின் தேசியகீதம்.!
---------

“எமைக் கொல்ல விமானங்கள்
தேசியப்பறவையாய் பிறப்பெடுத்தது.”
------------
படுக்கக்கூட நிலமின்றி வீதியோடு
அலையும்
பாவப்பட்ட நாய்போல

அச்சத்தின் ஆக்ரமிப்பில்
எப்படிவரும் நித்திரை..?
----------

விஞ்ஞானரீதியாக பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அவ்வளவாக கண்டுபிடிக்கப்படாத இரண்டாம் உலகப் போரின்போது,பாதிக்கப்பட்ட பன்னாட்டு மக்கள் அனுபவித்த கொடுமைகளை விடவும்,நவீன நாசாகார ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்ட,அதில் பாதிக்கப்பட்ட ஈழமக்களின் துயர்களை,நெஞ்சை உருக்கும் விதத்தில் பலவாறாக சொல்லிச் செல்கிறது அகரமுதல்வனின் கவிதைகள்.

ஆனால்,சிதைக்கப்பட்ட வாழ்வினைச் சொல்லிச் செல்வது மட்டுமே ஒரு கவிஞனின் வேலையென தனது பொறுப்பை,சமூகக் கடமையைத் தட்டிக் கழித்திடவில்லை இவர்.

போருக்குப் பின்னரும் புனர்வாழ்வு இருக்கிறது.அதன் ஆணிவேராக உனக்கு நம்பிக்கை இருந்தால் போதும் என மக்களுக்கு உரமூட்டுகிறார்.

நம்பிக்கையற்ற வாழ்வும்,அரச பயங்கரவாதத்தின் சூழ்ச்சியும் உணராமல் கிடைத்ததுதான் வாழ்க்கை என வாளாவிருப்பவர்களை,வாளாக இருந்து கண்டிக்கவும் கவிஞர் தவறவில்லை.
“அட முட்டாள் தமிழா..,
படுத்தபடி கொட்டாவி விடாதே..
இதுதான் விடுதலையென..,
.. .. … .. .. ..

உனக்குத் தெரியாமலே
உன்வீடு எரிக்கப்படுகிறது.
உனக்குத் தெரியாமலே
உன்சுவாசம் பறிக்கப்படுகிறது.!

என விழிப்புணர்வையூட்டும் வரிகளைப்பாடுவதோடு மட்டுமின்றி
தமது கடமையாக முன்நிற்கும் பணியையும் அவர்,
“பகைவீழும் சத்தம் கேட்கிறதா..?
என் சுடுகருவி
தன் பணியைத் தொடங்கியிருக்கிறது.”

எனவும் குறிப்பிட்டு செல்கிறார்.

அடக்குமுறைக்குட்பட்டு,அடிமைப்பட்டுக் கிடக்கும் தம்தாய் நாட்டு விடுதலையை மீட்க,நாம்தான் முன்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்திச் செல்லும் கவிஞர்,ஈழமக்களின் கொடூர சாவுகளையும் தமது அரசியலுக்கான ஆதாயமாகவே பார்க்கும் தமிழ்நாட்டின் சில கட்சிகளை தோலுரிக்கவும் அவர் தவறவில்லை என்பது,
“முள்ளிவாய்க்கால் தமிழனின்
சவப்பெட்டிகளை
வாக்குப்பெட்டிகளாய்
மாற்றுகிறீர்கள் மானம்கெட்டவரே..!
-என்ற வரிகளினால் அறியலாம். ஈழத்தின் அன்றைய,இன்றைய நிலை, தமிழகம்,இந்தியா,அமெரிக்கா உட்பட உலக நாடுகள்,ஐ.நா.மன்றம் ஆகியவற்றின், ஈழத்தின் மீதான பார்வையும் அதன் அரசியலும்,அடுத்து செய்யNவுண்டியது என அத்தனை விஷயங்களையும் ஒரே தொகுப்பின் மூலம் சொல்லமுடியுமா..? முடியும் என நிரூபித்து சென்றிருக்கிறார் தோழர்.அகரமுதல்வன்.
இதன் சிறப்பான வெளியீட்டுவிழா குறித்த செய்திகள்,எழுத்துத் தளத்தில் ஏற்கனவே பகிரப்பட்டவைதான்.!
“அத்தருணத்தில் பகை வீழ்த்தி..” எனும் அகரமுதல்வனின் கவிதை தொகுப்பு தான் வெளிவந்த நோக்கத்தை சிறப்புற நிறைவேற்றிவிட்டது.கவிதைகளை உண்மையாக நேசிப்பவர்கள்,இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வெளியாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள்..தளத்தில் தோழமையும் நட்பும் பாராட்டுபவர்கள் நிறைவேற்றக் கூடிய கடமை ஒன்று உண்டு.!

அது இந்தத் தொகுப்பை ஆளுக்கொன்றாக மட்டுமல்ல,அவரவர் நண்பர்களுக்குமாக வாங்கி அளிப்பதே,இந்தப் படைப்பாளிக்கு நாம் தெரிவிக்கப்போகும் செயலால் ஆன உண்மையான பாராட்டு.! செயலிலும் சிறந்த சொல் வேறில்லை..!

ஏனெனில்,எந்தப் படைப்பாளியும்,எனது படைப்பை வாங்கிக் கொள் என கூவித்திரிய மாட்டான்.இலக்கியத்தை நேசிப்பவர்கள் யாரும் அவனை அந்த நிலைமைக்கு ஆளாக்கவும் மாட்டார்கள் என்பதை படைப்பாளிகளான நாமும் உணராமல் இருந்தால் எப்படி..?

தகவலுக்காக.புத்தகத்தின் விலை ரூ.100-தபால் செலவு தனி-
தொடர்புக்கு.தோழர் அகரமுதல்வன்-98847 28612

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (3-Apr-13, 2:58 pm)
பார்வை : 132

மேலே