ஊருக்குப்போறேன்...........!

உல்லாசம் உல்லாசமே!
கொண்டாடும் சந்தோசமே!
மல்லாடும் நண்பர்களை
கண்டாடும் கொண்டாட்டமே!

ஊருக்கு நான் போகப் போறேன்.
உறவுகளைப் பார்க்கப் போறேன்.
பழைய நட்பைத் தேடப்போறேன்.
பார்ததுப் பேசி மகிழப்போறேன்..

பேருசொல்லிக் கூப்பிடுவேன்.
உறுவுசொல்லிப் பேசுவேன்..
வீடுவீடாக் காப்பி டீயும்
விருந்துண்டும் மகிழுவேன்.

நாளெல்லாம் கூட்டிவைத்து
நாள்முழுக்கப் பேச வைத்து
பழமைகளைத் துருவித்துருவி
பாடு பேசிச் சிரிக்கவைப்பார்.

சென்ற நாள் நினைவுகளை
சீண்டிவிட்டுக் கேட்டிடுவார்.
சிறகடித்து நினைவுகளை
சுற்றிச் சுற்றிப் பறக்கச்செய்வார்.

மணல்வீடு கட்டியதும்
மனக்கோவி லெழுப்பியதும்
வடிவமைத்த ஊருக்குள்ளே
வாழ்ந்ததும் நினைக்கவரும்.

மாதிரிக் குடும்பங்களை
மணல் வீட்டில் நடத்தியதும்
விளையாட்டாய்க் கடமைகளை
விளங்கியதும் நினைவில்வரும்.

பறந்துபறந்து நினைவுகளும்
பள்ளிக்கூரை மேலமரும்.
சின்னக்காதல் கனவுகளும்
செல்லமாக நாணிப்போகும்.

ஊர் புறத்துச் சமாதியில்
ஒளிந்தகதை நினைவு வரும்.
பார்த்துவிட்ட தோழர்களின் .
பரிகாசம் நினைக்கவரும்.

ஆலமரஞ் சுற்றிடுவேன
விழுதூஞ்சல் ஆடிடுவேன்.
குருவி வேட்டையாடியதும்
குறும்புகளும் நினைவில்வரும்.

பள்ளிசெல்ல மறுத்து நான்
பரணேறிப் படுத்ததையும்
பள்ளிப்படை கண்டுகொண்டு
அள்ளியதும் நினைக்கவரும்.

எண்ணற்ற நினைவுகளை
இதயத்தில் சுமந்த என்னை
இழுக்குதே ஊரை நோக்கி
இன்று நானும் போகிறேனே.


கவிஞர்.கொ.பெ பிச்சையா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (3-Apr-13, 3:01 pm)
பார்வை : 78

மேலே