தர்மத்தின் வாழ்வுதனை சூது ..............?!
எல்லாரும் வேண்டுமென்ற
===வேண்டுதல் பொய்த்தலில்
நல்லாரோ நாளெல்லாம்
===இறுதிவரை மதியிழப்பார் ;
கல்லாரும் விழித்திடுவார்
===கவனமுடன் – போலிகள்
இல்லாரோ தோற்றிடுவார்
===மடமையின் கண்முன்னே !
எக்குத்தப்பாய் உளறுவாயோ
===முடுக்கிடும் உணர்வுகளில்
திக்குத் தவறவிட்டவொரு
===குருட்டுப் பறவையாவாயே ;
மக்குபோல் கசையடிகளை
===மண்டியிட்டு வாங்காதே
கொக்குபோல் ஒற்றைக்காலில்
===குணம்கெடுத்து நிற்காதே !
குருவியொன்று உட்கார்ந்திட
===பனம்பழம் விழுமென்பதை
அருமையாய் கதையாக்குவார்
===சூழ்நிலைக் கைதிகளவர் ;
கருவியதுவாய்க் கூர்செய்தே
===காதுகுத்தி அலங்கரிப்பார்
பெருமையாய்த் தன்பலமதை
===நெஞ்சுயர்த்திக் காட்டிடுவார் !
தீராதோ சுயநலக்கிணறுகள்
===சூதுள்ளவர் வற்றும்வரை
வாராதோ அவர்கொண்ட
===ஈனங்களுக்கும் நற்சாவுகள் ;
நேராதோ பிரளயமொன்று
===நன்னெறியும் தப்பிவாழ
பாராதோ பஞ்சபூதங்களும்
===தீநெறிகளும் சுருண்டுவீழ !
வஞ்சமே பேராயுதமானதில்
===நடைபிணங்களே பாரெங்கும்
நெஞ்சமேயது சிறைகொள்ள
===விடுவதில்லை வேறெங்கும் ;
பஞ்சமாய்ப் பட்டினியாக்குமோ
===தீர்ந்துபோகும் மனுதர்மங்கள்
கொஞ்சமாய்ப் பிணிநீக்குவாயே
===எனையாளும் பரம்பொருளே !