தண்ணீர் தண்ணீர்

விஞ்ஞானம் வித்தைகள் புரிந்தாலும்
மெய்ஞ்ஞானம் மேதினில் திரிந்தாலும்
அஞ்ஞானம் அகிலத்தில் தழைத்திட்டு
எஞ்ஞானமும் ஏழைக்கு உதவவில்லை !

உணவும் உடையும் உறையுளும் தேவை
உயிராய் வாழும் மனிதனுக்கு உலகிலே
பசிக்கு சோறும் பொங்கிட அரிசியும்
புசித்து மகிழ்ந்திட புத்துணர்வு பெற்றிட !

அனைத்தும் இருந்தும் அடிப்படை தேவை
பானைக்கு நீரும் தாகத்திற்கு தண்ணீரும் !
இயற்கை பொய்த்தால் இங்கில்லை நீர்
இருக்கும் நீரையோ பங்கிடப் போர் !

வசதிமிக்க நகரமோ அசதியில் அயர்கிறது
சகதியில் வீழ்ந்த சக்கரமாய் சுழல்கிறது !
கூவமோ நிறைந்து வீதியில் பாய்கிறது
பாவம் நாமும் பார்க்கிறோம் நாளும் !

விற்பனை தண்ணீர் வீடுகளில் இன்று
கற்பனை இல்லை கண்ணீர் வருகிறது
காசானாலும் நீரில் தூசுதான் உண்டு
நேசம் குறைந்து நேர்மை மறைந்தது !

மாறிடுமோ நாட்டில் இந்த நிலை
ஆறிடுமோ நம் மனதும் விரைவில் ?


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Apr-13, 10:36 pm)
பார்வை : 87

மேலே