போதை அதிகமாய்...

கற்றைக் குழலெடுத்து- அதைக்
கூறுகள் இரண்டாக்கி
சுற்றி இருப்பவரின்- மனம்
சூதாய் ஆடவிட்டாள்..

ஓற்றை மலரெடுத்து- அதை
உயரே சொருகிவைத்து
பற்றை அறச்செய்தாள்- பாவி
பார்வையில் கிறங்கவைத்தாள்..

நெற்றிப் பொட்டுவைத்து- அதை
நினைக்க வைத்துவிட்டாள்,
கற்ற வித்தையெல்லாம்- நொடியில்
கனவாய்ப் போகவைத்தாள்..

இதழின் புன்னகையால்- என்னை
இதமாய்க் கொன்றுவிட்டாள்,
மதுவின் குணமதுபோல்- தன்னை
மறக்கச் செய்துவிட்டாள்..

கண்ணின் விழிகாட்டி- பல
கதைகள் சொல்லிவிட்டாள்,
பெண்ணில் உள்ளதுபோல்- வேறு
போதை எதுவுமில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Apr-13, 9:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 99

மேலே