..................பிடிக்காதவன்................
அறவே பிடிக்காதவன் அவளுக்கு,
சிறைப்பட்டுக் கிடப்பதாய் சொல்லுவாள்,
அடிக்கடி என்னிடம் !
நீ வந்தபிறகே நிலையிழந்தேன்,
காரணமாய் மனதின் வலுவிழந்தேன் !
மற்றும் பொலிவிழந்து ஒளியிழந்தேன் !
அமைதி கிடைக்கும் என உனைத்தேடி,
அவலநிலைக்கு வந்தது வாழ்க்கை என்பாய் !
தேடிவராதவனென்று தெரிந்தும்தான்,
ஓடிவந்தேனே உனக்காக மனிதா !
அதுமட்டுமா?
நாடிவந்து கூடியிருந்தேன்,
இருளுக்குள் நீ வாடியபோதெல்லாம் என்றவள் !
இதயம் என்பதை கருவியாய் பாவித்து,
செயலற்றதாய் ஆக்கியவன் !
உனை உணர்வற்றவன் என்றாலும் தகும் !
என ஓங்கார ஒப்பாரி வைப்பவள் ஆங்காரமாய் !
முகத்தில் அடித்தும் சினந்து சிலநேரம்,
கழுத்தை நெரிக்கவும் முற்படுபவள் !
சிலசமயம்...............................
களைத்துப்போய் வாடி வதங்கி,
என் மார்பில் விழுந்து மடி சரிகையில் !
"கடவுளடா என் கண்ணா எனக்கு நீ"
என 'மனதுக்குள் மண்டியிடுபவள்'
ஆனபோதும் மொத்தத்தில் அவளுக்கு இவன் !
"அறவே பிடிக்காதவன்"