............வாழ்வியல்............
திசைமாறிய பாய்மரக்கப்பலில்,
அசைவற்றுக்கிடந்தது எங்கள் விதி !
அவளுக்கும் எனக்கும் இடமிருந்தது,
ஆனாலும் எங்களைச்சுற்றி,
காற்றும் புயலும் சுழன்றது !
தனித்தீவுக்கோ புது வாழ்வுக்கோ,
பிரியப்படவேயில்லை நாங்கள் !
எங்களின் தேவையெல்லாம்,
இடர்பாடுகளில்லாத பயணமாகவேயிருந்தது !
அதனால் பிரார்த்தனைகள்,
ஆபத்தில்லாத பயணம்வேண்டியே உழன்றது !
கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டு அழ,
காதலேதும் இருக்கவில்லை எங்களிடம் !
ஒட்டுமொத்தமான தேவையாய் சத்தமற்ற அமைதியும்,
அதன் இலக்காய்...........
ஒரு அர்த்தமான வாழ்க்கையாகவுமேயிருந்தது !
சூழ்நிலைக்கேற்ப என்ன மாறுவது இங்கே?
யோசிக்கவிடாதபடி யாசிக்கிறது உயிரை பசி !
உணர்ச்சியில் எத்தனை பரிமாணங்கள்,
திக்குத்தெரியாத இந்த ஆயுள் இருளில் !
இணைந்து எப்படி வாழ்ந்தாலும்,
தனித்து விதிக்கப்பட்டதுதானே பிறவி !
வாழ்ந்துவிடலாமே எவருக்கும் வலி தராமல் !
குறைந்தபட்ச அன்பாய் ஒரு புன்னகையை பரிசளித்து !!
மற்றபடி தொடர்ந்துகொண்டே இருக்கட்டுமே,
பேரலைகளுக்கிடையிலான போராட்டமும் திசைதேடலும்..............