ஒற்றையடி பாதை

விதைக்கு செல்லும் விதை நெல்லும்
அறுவடை செய்த விளைச்சல் நெல்லும்
கடக்கும் இந்த பாதை
இது கால் தேய்ந்த பாதை .........

கூனொடிந்த உழைப்பாளியின்
பாதி உழைப்பை தின்ற பாதை
தார் கொண்ட பாதை வந்தும்
எங்களை வாழ வைக்கும்பாதை .......

ஒற்றையடி பாதை
இது ஊர் ஓர பாதை
நெட்டநெடு கதைகள் கொண்ட
நேர் இல்லாத பாதை ........

வீடு வரை கொஞ்சம் தூரம்
வீதி வரை கொஞ்ச தூரம்
காடு வரை கொஞ்சம் தூரம்
கழனி வரை கொஞ்சம் தூரம் ........

செடியோரம் காதல் ஜோடி
சிரித்து மகிழும் சப்தம் கேட்கும்
பனைமரத்தில் நுங்கெடுத்து
உரிந்து குடிக்கும் சப்தமும் கேட்கும்......

பாதையோர புளியமரம்
பறித்தெடுத்த புளியங்காயை
சுட்டு தின்ற குழந்தைகளின்
நாக்கு உருஞ்சும் சப்தமும் .......

பாதையோர இலந்தமரத்தில்
பழம் பறித்து தின்றுவிட்டு
குருவிக்கூடு முட்டை எடுத்து
சுட்டு தின்ற கதையும் .......

காட்டுக்குள்ளே அய்யனார் கோவில்
கடந்து செல்லும் ஒத்தை வழி
பொங்கலிடும் மக்களின்
கூட்டு குரல் ஒலியும் ......

இடுகாட்டு கொட்டகைக்கும்
ஒற்றையடி பாதை வழி
சுமந்து சென்ற உறவுகளின்
மன வலியும் உடல் வலியும் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (21-Apr-13, 9:25 am)
பார்வை : 229

மேலே