நாங்கள் ஒரு பாவ பிறவி
உலகம் போற்றும் பெண்மை நாங்கள்
பெண்மை வெறுக்கும் பெண்கள் நாங்கள்
நூற்றாண்டுகள் பல கடந்தும்
ஏற்றமே இல்லாத எங்கள் வாழ்க்கை .........
நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து
ஆடம்பரமாய் ஓர் திருமணம்
அம்மா தாலி முதல் அப்பன் தலை வரை
என் தாலி ஏற எல்லாம் அடகில் ........
எதிர்கால கனவுகளோடு புகுந்தவீட்டு பயணம்
காலம் கரைந்து கன்னி நானும் கரைய
இதமாய் நகர்ந்த இல்லறவாழ்வில்
இடியாய் விழுந்தது கணவனின் மரணம் .......
துடித்து போனேன் நான்
அழுது புரண்டேன் நான்
என் எதிர்காலம் எனக்கு சூனியமாய்
என்ன செய்வது என்பது புரியாத புதிராய் .......
சடங்குகள் சாபங்களாய் நிறைவேற
பூத்து குலுங்கவேண்டிய புஷ்பவனம் நான்
பட்டமரமாய் பட்டுப்போய் நிற்கிறேன் வீட்டில்
புன்னகை மறந்து அழுகையே நிரந்தரமாய்........
கணவனை நினைத்து காலம் கடத்துகையில்
சீண்ட நினைக்குது உறவு கைகள்
வளைக்க நினைக்குது வாலிப கழுகுகள்
என்னை உயிரோடு கொல்லுது உதாசின பார்வைகள் .........
துரத்தும் சிங்கம் விரட்டி பார்க்குது
தந்திர நரிகள் சமாதானம் சொல்லுது
ஓடி ஒளிகிறேன் ஒவ்வொருநாளும்
மரண சாலையில் ஒய்வு கொள்கிறேன் நான் .....
கற்பின் மகிமை உணர்ந்தவள் நான்
கண்ணகியாய் தினம் துடிக்கிறேன் நான்
பிறப்பை வெறுக்கும் இந்த பிறவி
ஏனோ கொடுத்தான் இறைவன் பாவி .......
விதவைக்கோலம் வெறுமை கோலம்
வெறுத்து சாகுது பெண்கள் உலகம்
இந்த கொடுமை இனியும் வேண்டாம்
இனியாவது மாறட்டும் பெண்கள் நிலைமை ......
அடையாள சின்னம் நாங்கள் இல்லை
அற்ப பிறப்பு நாங்கள் இல்லை
எங்களுக்கு என்று கெளரவம் உண்டு
நிம்மதியாய் வாழவிட்டால் உலகில் நன்று ......
பெண்மையை மிதிக்கும் விதவை வேண்டாம்
அவளும் உயிர்தான் அவமானங்கள் வேண்டாம்
தொல்லை கொடுக்கும் கொள்ளை உலகம் இது
பெண்கள் கற்ப்புக்கு காவலும் கேட்குது .......
மறுமணம் செய்ய மனமும் இல்லை
கணவனின் கையால் காவலும் இல்லை
கர்ப்பை விட மனமும் இல்லை
மானத்தைவிட பெரிது எதுவும் இல்லை .......
மாறும் மனம் வேண்டும் மக்கள் மனதில்
கொச்சை படுத்தும் இச்சை வேண்டாம்
குத்தி பழகும் சண்டைகள் தெரியாது
கூடி அழுவது மட்டுமே தெரியும் .......
உடலும் மென்மை
மனதும் மென்மை
பிறகு ஏனோ எங்களுக்கு வன்மை
திருந்தி வாழ்வோம் இனி திருத்தி வாழ்வோம் ....