கவிதை பெண்ணே.....

உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்......

காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்....

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே...
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்...

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்......

உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்...

உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்..

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்....

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்....

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்.....
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்....

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
"தேசத்துக் கொடிகள்' தவிர
வேறொன்றும் அங்குமில்லை...

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,..!!
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..,....(Thahir)

எழுதியவர் : முகவை கார்த்திக் (25-Apr-13, 11:51 am)
சேர்த்தது : karthikboomi
Tanglish : kavithai penne
பார்வை : 154

மேலே