கருத்தப்பாண்டி(தொடர் )பகுதி-42

42
@@@@@@@@@@@@@@@@@@@
“வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும், தனது அரசியல் தலைவர்களை உண்டாக்காமல், தங்கள் இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கும் தலைசிறந்த பிரதிநிதிகள் இல்லாமல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில்லை” எனும் தோழர் லெனின் வாக்கு இப்போது கருத்தப்பாண்டி விஷயத்தில் உண்மையானது. ஊழல்வாதிகள் குற்றங்களுக்குரிய தண்டனையைக் காலம் கடந்து பெறுகின்றனர் என்பதும் அல்லது வெகுகாலம் விசாரணை என்ற நிலைக்குள் தள்ளப்பட்ட மக்கள் ஊழல் பெருச்சாளிகளையும் குற்றங்களையும் மறந்து போன வேளையில் விடுதலையாவது என்பதும், ஊழலை ஒழிக்க முடியாமைக்குக் காரணங்கள்.

@@@@@@@@@@@@@@@@@
கருத்தப்பாண்டியும், ராஜாவும், இளவட்டங்களும் ரொம்பத் தீவிரமாக உழைத்தார்கள்.

ஒவ்வொரு ஜில்லாவிலும் இப்போது இவர்களின் இளவட்டங்கள் ஊடுருவி இருந்தனர்.

“வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும், தனது அரசியல் தலைவர்களை உண்டாக்காமல், தங்கள் இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கும் தலைசிறந்த பிரதிநிதிகள் இல்லாமல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில்லை” எனும் தோழர் லெனின் வாக்கு இப்போது கருத்தப்பாண்டி விஷயத்தில் உண்மையானது.
இப்போது கருத்தப்பாண்டி, ராஜா தலைமையில் ஓர் இயக்கமாக மாறிக்கொண்டு வந்தார்.

இளவட்டங்கள் மிகுந்த எழுச்சியோடு செயல்படத் தொடங்கினர். “தாம்புக்கயிற்றின்” எண்ணிக்கை பல்கிப் பெருத்துக் கொண்டு வந்தது.

ஆசிரமத்தில் இருந்து செய்தி வந்தது. நாச்சியம்மை நன்கு உடல்நலம் பெற்று வருகிறாள் என்று. சங்கரலிங்கம் தொடர்பாக போன இளவட்டங்கள் சங்கரலிங்கம் சேர்மனைச் சந்திக்கப் போனது வரை செய்திச் சேகரித்து வைத்திருந்தனர்.

கருத்தப்பாண்டி தன்னைச் சுற்றி வலுவான சூழலை ஏற்படுத்திக் கொண்டபிறகு தனது ஜில்லாவில் நேரடியான தாக்குதலில் இறங்கினார்.

மன்னிப்பு என்பது மனிதனை அவன் செய்த குற்றங்களை அவனுக்கு நியாயப்படுத்துவதாகவே உணர்ந்தார். மன்னிப்பு விசாரணை என்ற சொற்கள் எப்போதும் குற்றங்களை ஊழலை ஒழித்து விடுவதில்லை. மாறாய் ஊழலைக் கோபுரமாய்க் குவித்து வருகின்றது. இன்று மக்களிடையே அமைதியின்மை உருவாகி, அதிருப்தி நிலவுவது கருத்தப்பாண்டிக்குத் தெரிந்துள்ளது.
ஊழல்வாதிகள் குற்றங்களுக்குரிய தண்டனையைக் காலம் கடந்து பெறுகின்றனர் என்பதும் அல்லது வெகுகாலம் விசாரணை என்ற நிலைக்குள் தள்ளப்பட்ட மக்கள் ஊழல் பெருச்சாளிகளையும் குற்றங்களையும் மறந்து போன வேளையில் விடுதலையாவது என்பதும், ஊழலை ஒழிக்க முடியாமைக்குக் காரணங்கள்.

“அய்யா... நாம எப்போ சாமி வகையறாக்களை வதம் செய்வது...” ராஜன் கேட்டான்.

“யய்யா... நம்ம இளவட்டங்களுக்கு நல்லா திட்டம் சொல்லி அனுப்பி இருக்கிறேன்ல... காத்திருந்துப் பார். என் தளபதி நீ இல்லாமலா?”

“அய்யா... இன்னெக்கு அமாவாசைக் கூட்டத்திற்கு ஒரு பெரிய பேராசிரியர் நம்ப இளவட்டங்க மத்தியில் பேச வர்றாராம். போவோமா? இப்பவே இருட்டிப்போச்சு. அவங்க எல்லாம் காத்துக் கெடப்பாங்க.”

நீலிப்பட்டிக்காட்டுப்பகுதியின் சற்றே சமதளமான அந்த மலை முகட்டில் ஓரிரண்டு, மங்கலான, சிறிய தீவட்டி வெளிச்சங்களில் அந்தப் பேராசிரியர் பேசத் தொடங்கினார்.

“நமது நாட்டின் வரலாற்றில் இப்போது கறை படியத் தொடங்கியுள்ளது. காவல் நிலையங்களும் நீதி மன்றங்களும், கல்விக் கூடங்களும் ஊழலைத்தான் தன்னில் திணித்துக் கொண்டு வருவது குறித்து இப்போது மக்களிடையே விழிப்புணர்வு வரத் தொடங்கியுள்ளது. இந்த உணர்வு தீவிரமாக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் ஊழல் தவிர்க்க இயலாதது என்று பேசப்பட்ட நிலைபோய் அதிகாரிகள் ஊழலில் ஊறிப் போய் வருவதுவும் கண்கூடு. இவர்களின் ஊழல்களால் சராசரி சாமான்ய மனிதனும் ஊழலை ஒழிப்பதை விட்டு விட்டு அதை நியாயமாக்க முனைந்துள்ளான். நம் புருவமும், கண்களும் திகைப்பில் விரிந்து வேதனையை அளிக்கும் நிகழ்வுகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

ஊழலும், வதந்தி பரப்புவதும் இப்போது நியாயமாக்கப்பட்டு விட்டது. தேசிய அந்தஸ்துக்கு உள்ளாகிவிட்டது.

“முதலாளித்துவ பிரதிநிதிகளின் கட்டாய தகுதியாக்கி விட்டது ஊழல். ஆளும்கட்சி, எதிர்கட்சி என இருவர்க்கும் பொது உடைமை ஆகிப்போனது. வெகுஜன சமூகம் தனக்குரியதை, உரிய காலத்தில் பெற்றிட, எதையாவது எப்போதும் கொடுத்தே வரவேண்டிய அவலச் சூழலை நாம் ஒழிக்க வேண்டும்.

“என்னால் வாங்காமல் இருக்கமுடியும். ஆனால் கொடுக்காமல் இருக்க முடியாது” என்ற அறிஞர் மு. வரதராசனார் கூற்று உண்மையாகிப் போய்விட்ட நிலையை நாம் அழிக்க வேண்டும்.

சொட்டு விஷம் கழுத்தளவு வந்தால் நிறுத்த முடியும். ஆனால் விஷத்திற்குள்ளேயே மனிதன் மூழ்கடிக்கப்பட்டால்...? ஊழலும் விஷம் போன்றது. தீவிர ஒத்த எண்ணங் கொண்ட குழுக்களை ஒன்றாக்குவோம். ஊழல்வாதிகளை மக்கள் தூக்கி எறியும் வகையில் ஒரு மக்கள் போராட்டம் இப்போது தேவை. இது புரட்சியாக ஊழலுக்கு எதிராக வெடிக்க வேண்டும். ஆம், ஒரு புரட்சி இப்போது தேவை, புரட்சி ஒன்றே வழி.

ஊழலுக்கெல்லாம் அடிப்படை ஒரு பக்கமே உண்டாகுற செல்வக் குவியல் தான். செல்வம் குவித்து வைத்தவன் எதையும் பண்ணுகிறான். ஒரு நாட்டின் தலைவிதியை, போக்கை, வளர்ச்சி, வாழ்வை இந்தச் செல்வக்குவியல்தான் தீர்மானிப்பதாய் உள்ளது. செல்வக்குவியல் குறைந்து போகாமல் இருக்க அவன் ஊழலை ஆதரிக்கிறான், வளர்க்கிறான். ஆனால் கலெக்டர் ஆபிஸ் பியூன் பத்து ரூபாய் லஞ்சத்திற்கு தண்டிக்கப்படுவதும், கோடி ரூபாய் ஊழல் மீது விசாரணை கமிஷன் வைப்பதும் என்ன நியாயம்!

“ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால் மதம் சம்பந்தமான பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, முதலாளித்துவ வர்க்கம், வெட்கமில்லாத, நேரடியான முரட்டுத்தனமான சுரண்டலை ஏற்படுத்தி விட்டது. அம்மணமான சுயநலத்தைத் தவிர உணர்ச்சியற்ற “ரொக்கப் பட்டுவாடா” வைத் தவிர மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறு எந்த உறவுமில்லாமல் அது செய்து விட்டது” என்ற கார்ல்மார்க்ஸ் வாக்கு எப்படி இப்போது உண்மையாகிவிட்டது. மக்களுக்கு விழிப்புணர்ச்சி வேண்டும்.

ஆனாலும் புரட்சி என்றால் ஆயுதப்புரட்சி ஒன்றுதான் என்று முடிவு செய்திட வேண்டாம். பண்பாட்டுப் புரட்சி என்று ஒன்றும் உள்ளது. இது தோற்றால் வேற வழி இல்லாமல் ஆயுதப் புரட்சிக்கு மனிதன் தள்ளப்படுவான். பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும்போது தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கியவர்களை, அவர்களின் அடையாளங்களை அழிப்பது என்பதெல்லாம் சரித்திர நிகழ்ச்சிகள். இப்போது நாம் செய்யப் போகிறோம். நமக்காக நாளைய நமக்காகவும் தான்”

கருத்தப்பாண்டி அப்படியே அசந்து போய் அமர்ந்து இருந்தார்.

ராஜன் அந்தப் பேராசிரியருடன் அமர்ந்து பிற இளவட்டங்களோடு திட்டங்களைத் தீட்டிக் கொண்டு இருந்தான்.

புறப்பட்ட பேராசிரியர் கருத்தப்பாண்டிக்கு வணக்கம் சொல்லி, தனது ஊரின் ஊழல்களைப் பற்றிய ஆதாரங்களை அனுப்பி வைப்பதாகவும் ஓர் இளவட்டப்படை ஒன்றையும் தான் வைத்திருப்பதாகவும் சொல்லிப் புறப்பட்டார்.


கருத்தப்பாண்டி வருவான் மீண்டும்...

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (26-Apr-13, 7:27 pm)
சேர்த்தது : agan
பார்வை : 78

மேலே