4.கானலைத் தேடி..!-27.4.13-பொள்ளாச்சி அபி.!

“யாரோ சிலபேர் செய்வதை,வைத்து மொத்தமாக அனைவரையும் எடைபோடக்கூடாது சிவலிங்கம்.!.”

“இல்லேப்பா..பக்தி,புலனடக்கம் இதெல்லாம் எல்லோருக்கும் இருந்திருந்தா, இதுபோன்ற குற்றங்கள் நடக்காதில்லையா..? ஆனா. இதெல்லாம் நடக்குதுன்னா..அது குறைஞ்சு போயிடுச்சுன்னுதானே அர்த்தம்..!” சிவலிங்கம் சொன்னதிலுள்ள உண்மையை எந்தவகையில் மறுப்பது..? நான் மௌனம் காத்தேன்.

சிவலிங்கமே தொடர்ந்தார்.. “எனக்கென்னமோ.. இந்தக் கலிகாலம்னு சொல்லுவாங்க பாரு.. அதுதான் இப்ப நடக்குதுன்னு தோணுது.. இதையெல்லாம் பாக்கும்போது..இந்தக் கடவுளு உடனடியா வந்து இந்த உலகத்தை அழிச்சுட்டு, புதுசா..இப்ப இருக்குற எந்தக் குறையையும் இல்லாம படைச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்..? ஆனா..அதுக்கு கடவுள் மனசு வைக்கணுமே..!

“ம்..ம்;..அப்படியிருந்தா..அது ரொம்ப நல்லாத்தானிருக்கும்..”, என்றேன்.

“அதென்ன..அப்படியிருந்தா..ன்னு..ஒரு இழுவை போடறே, உன்னைப் பொறுத்தவரை கடவுள் இருக்கா..இல்லையா..?” சிவலிங்கத்தின் கேள்வியில் ஒரு தீவிரம் இருந்தது.

"அட இதென்னப்பா..திடீர்னு இப்படியொரு கேள்விய கேட்டுட்டே..?"

“திடீர்னுதான் எனக்கும் தோணுச்சு..நீ பதில் சொல்லு..கடவுள் உண்டா..இல்லையா.? எனக்கு ஒரே வார்த்தையில் பதில் வேண்டும்.”

"உனக்கென்ன அவசரம்..? நீ கேட்ட கேள்வி எவ்வளவு பெரிய கேள்வி தெரியுமா..? ஆண்டாண்டு காலமா விடை தேடிகிட்டே இருக்கற கேள்வியப்பா அது..! இதுக்கு நான் ஒரே வார்த்தையிலே பதில் சொன்னா..அது சரியாக இருக்காது.”

“ஏன்..சரியா இருக்காது..?”

“உன்னோட கேள்விக்கு விளக்கம் இல்லாத பதில் சொன்னா,அது மனசுக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்தும்.”

"உங்கிட்டே இதுவொரு சிக்கல்ப்பா..கடவுள் உண்டு அல்லது இல்லை..ன்னு ஒரு வார்த்தையிலே பதில் சொல்லச் சொன்னால்,விளக்கமா கதையை வளர்க்குறதிலேதான் உனக்கு விருப்பம் அதிகம்..!”

“சரியப்பா..அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி வேறசில தகவல்ககைள நான் உனக்கு சொல்லணும்.அப்பத்தான் உன்னோட கேள்விக்கு நான் சரியா பதில் சொல்ல முடியும்னு எனக்கு தோணுது.”

“சரி..சொல்லுப்பா..நான் பொறுமையா கேட்குறேன்..”சிவலிங்கம் ஒத்துக் கொண்டதையடுத்து நான் சொல்லத் துவங்கினேன்.

“இப்ப கடவுள் இருக்கிறார் என்று நான் சொல்வதாக வைத்துக் கொள்.உனக்கு என்ன தோன்றும்.?”

“என்னையும்,உன்னையும் நம்மைப்போல 600 கோடி மனிதர்களையும் படைத்துள்ள அவரின் சாமர்த்தியம் பற்றியும்,கண்ணுக்குத் தெரியாத அமீபா என்ற ஒரு செல் உயிர் அணுவிலிருந்து, கோடி கோடி செல்களைக் கொண்ட இத்தனை ஜீவராசிகளையும் படைத்துள்ள திறமை பற்றியும் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ தகுந்தளவில், இந்த உலகத்தைப் படைத்தது பற்றியும் எனக்கு மிகுந்த வியப்பு ஏற்படும்.”

“அதற்குப்பின்..?”

“இவ்வளவையும் ஒருவர் எப்படி சாதித்தார். என்று வியப்படைவேன்.”

“அதற்குப்பின்..?"

“அந்த அபரிமிதமான ஆற்றலைக் குறித்து,அந்த ஆற்றலின் அளவு குறித்துப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுவேன்.மனித அறிவுக்கு அப்பாற்பட்டதைப் பற்றி அறிய முடியாதபோது வேறு என்ன செய்வது.? அதை வணங்கிக் கும்பிடலாம்”

“கும்பிடுவதா..வேண்டாமா..என்பதை பிறகு பார்க்கலாம்..பலவிதமாய் யோசித்தாலும்,நீ வியப்படைவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லையா..?

“இல்லை..”

“நல்லது..இப்போது நான் கடவுள் இல்லையென்று சொல்வதாக வைத்துக் கொள்..அப்போது என்ன செய்வாய்..?
-----------------------
மீண்டும் தொடர்வேன்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (27-Apr-13, 9:13 am)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே