தெரு...!

வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை எல்லாம் வாழ்வின் ஓட்டத்தில் இழந்து போய் விட்டோமோ..? என்று யோசித்த படி வாசலில் நான் அமர்ந்திருந்த போது மாலை மணி 6 இருக்கும். வார இறுதி நாள், நாளை ஞாயிறு எல்லோருக்கும் விடுமுறை நாள். எனக்கு ஒரு பழக்கமிருக்கிறது அதாவது வாசல் படியில் உட்கார்ந்து தெருவினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்துவது என்பது எனக்கு பிடித்தமான விடயம்.

சூடான தேநீரை உதடுகளால் மெல்ல உறிஞ்சி கோப்பையிலிருந்து வாய்க்கு இடமாற்றம் செய்யும் அந்த தருணத்தில் தேநீரின் மணத்தை உள் வாங்கிக் கொண்டு சூடான தேநீரின் மெல்லிய சூடு முகத்தில் மெலிதாக பரவ வாய்க்குள் சென்ற தேநீர் உள்நாக்கு தாண்டி வெப்பமாய் தொண்டையை கடக்கும் பொழுது கிடைக்கும் திருப்திதான் தேநீர் அருந்துவதின் குறிக்கோள் என்பது மாதிரி மிக சிரத்தையாக தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

வெறிச்சோடிக் கிடந்த என் தெருவினை சூரசம்ஹாரம் செய்து சப்தமில்லாமல் கிட என கட்டளை பிறப்பித்து விட்டு வீடுகளுக்குள் சர்வாதிகார ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தன இரண்டு மிக முக்கிய சாதனங்கள். ஒன்று செயற்கைகோள் தொலைக்காட்சி, மற்றொன்று கணிணிக்குள் உலகை ஏலம் விட்டு மனித மூளைகளுக்குள் கற்பனை சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் இணையம்.

எல்லா வேலைகளையும் செய்யும் பெரியவர்கள் எல்லோரும் மையமாய் மனதினுள் வைத்திருக்கும் இந்த இரண்டு மையம் தாண்டி சிறுவர்களை கட்டுப்படுத்த கையடக்க போர்ட்டபிள் விளையாட்டுக் கருவியும், இன்ன பிற இணைய விளையாட்டுக்களும்...இதைத் தாண்டிய சிலரின் அவசரமான கேளிகைப் பயணங்கள் திரையரங்குகளையோ அல்லது உணவு விடுதிகளையோ நோக்கி நகர்ந்து விட இதோ வெறிச் சோடி கிடக்கிறது என் வீதி....

வார இறுதியில் இப்படி என்றால் வார நாட்களைப் பற்றி என்ன சொல்வது....? இன்று விடுமுறையை இயந்திரமாய் ஓடிக் கழிப்பவர்கள்..வேலையை ஓய்வாகவா செய்வார்கள்? இதை விட அசுரத்தனமாய் அது இருக்கும்...!

நான் சிறுவனாய் இருந்த போது எல்லாம் இப்படி கிடையாது. இந்த 34 வயது என்னை வளர்த்திருக்கிறதா? அல்லது சீரழித்திருக்கிறதா? என்று கேட்டால், வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது என்று ஒரு காரணத்தை நவீன வசதிகளை வைத்துக் கொண்டு கூறினாலும், மனதளவில் நான் உள்பட அனைவரையும் பரம ஏழையாகத்தான் வைத்திருக்கிறது சமகாலச் சூழல்.

அப்போது எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்...

என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவில் எல்லா பட்டாளங்களும் கொஞ்சம் சீனியராக இருக்கும் ஒரு அண்ணாவோ அக்காவோ வழிகாட்ட...விளையாட்டுக்கள் களை கட்டும்....

பாலம்மா, எங்க அம்மா, ஜோயல் அம்மா இன்னும் தெருவில் இருக்கும் எல்லா அம்மாக்களும் வாசலில் மாலை நேரத்தில் வரும் முல்லை பூவையோ அல்லது கொல்லையில் இருந்து பறித்த டிசம்பர் பூவையோ கட்டிக் கொண்டு ....ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்பாக்கள் எல்லாம் அமைதியாக திருச்சிராப்பள்ளி வானொலியையோ, இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளையோ அல்லது விவித பாரதியையோ கேட்டுக் கொண்டும் ஏதேனும் பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டோ, இரவு 8:40 தூர்தர்ஷன் செய்திகளுக்காக காத்துக் கொண்டோ இருப்பார்கள்....இல்லை கடைகளுக்குச் சென்று வார இறுதிக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அல்லது பிள்ளைகளை கூப்பிட்டு வைத்துக் கொண்டு விளையாடுவதற்கும் தயாராகி இருப்பார்கள்...

எத்தனை விளையாட்டுக்கள் இருந்தனஅப்போது எல்லாம், கிளிக்கோடு, கல்லா மண்ணா, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் விளையாட்டு.....எவ்வளவு சந்தோசமாய் கண்ணாமூச்சி ரே...ரே காதடைபார் ரே என்று யாரோ ஒரு அண்ணாவோ அக்காவோ கண்ணை பொத்தி விட ஒவ்வொருத்தராய் கண்டு பிடித்து வர வேண்டும்....!

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிச்சத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலம்....கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம். கால்களை நீட்டி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அக்கா...அக்கா ஈர்வேலி (சீப்பு மாதிரி இருக்கும் தலையில் இருக்கும் ஈறினை எடுக்க மரத்தால் செய்யப்பட்ட ஒன்று ..பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலுமிருக்கும்)... என்று ஒரு விளையாட்டு.... என்று கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை....

இன்று எங்கே போனது எங்களது கேளிக்கைகளும் சந்தோசங்களும்...? அதே தெருதான்...அடுத்த அடுத்த சிறார் கூட்டம் பிறந்து வளர்ந்து மிகவும் ஒரு குறுகிப்போன தான்மட்டும் பொழுது போக்கும் கேளிக்கைகளை பழகிக் கொண்டு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் விஞ்ஞானம் நவீனமென்று நாம் கூறிக் கொண்டாலும், மனிதர்கள் மனிதர்களோடு அளாவளாவி வளர்ந்த ஒரு வாழ்க்கை தொலைந்து போயிருக்கிறதா இல்லையா? யாருமே எதார்த்தமாய் இல்லாமல் போய் விட்டதற்கு காரணம்தான் என்ன? எல்லோரும் ஒரு வித மன நெருக்கத்தில் இருக்கிறார்களே ஏன்?

எங்க பக்கத்து விட்டு சங்கர் பையன்...உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும், அப் டூ டேட் ஆக பேசுகிறான். அவனுக்கு தெரியாத புத்தகங்களும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் கிடையாது என்பது உண்மைதான் அவன் புத்திசாலிதான்...

ஆனால்...

தன் பக்கத்து வீட்டுக்காரன் யார் என்ன என்று கூட தெரியாமல் இருக்கிறானே? அது எந்த விதத்தில் நியாயம்? எதேச்சையாக அவன் வீட்டுக்கு போன மூணாவது வீட்டு கோபு மாமாவை ஹூ ஆர் யூ என்று கேட்டிருக்கிறான்...? இவனைப் போன்றவர்கள் வளர்ந்திருக்கிறார்களா? இல்லை சிதைந்திருக்கிறார்களா? ஒரு குழப்பமாய்த்தான் இருக்கிறது...

அதோ என் தெரு முனையில் பூட்டிக் கிடக்கிறது பாருங்கள் ஒரு கடை அதுதான் நாடார் கடை. ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னால் நீங்கள் வந்து பார்த்திருக்க வேண்டும். மாலை நேரம் என்றால் நாடார் கடையில் கூட்டம் களைகட்டி நிற்கும்.....! ஏதாவது சாமான் வாங்கப்போனால் சிரிக்க, சிரிக்க பேசிக் கொண்டே சுக துக்கங்களை விசாரித்துக் கொண்டே அவர் சுருள் போட்டு சாமான்களைக் கட்டிக்கொடுக்கும் லாகவமே தனிதான்....

" ஏக்கா சாப்புடியளா...என்ன வேணும் வெல்லமா... இந்தா தாரேன்," " என்னண்ணே சீனியா போட்டுறுவம்.....காப்பில சீனி நெறய போட்டுக் குடிக்காதியண்ணே சக்கர வியாதி வரும்......," "ஏம்மா பாப்பா ஒனக்கு என்ன கருவாடா....? எங்க அம்மாள காணோம் தனியா வந்திருக்க சில்லறைய பாத்து எடுத்துட்டு போத்தா," " டே முருகேசு...நாராயணன் அண்ணே வந்துருக்காரு பாரு அந்த சேர எடுத்துப் போட்டு பேப்பர கையில கொடு....ஏண்ணே டீ சொல்றேன் சாப்பிடுங்க.." " ஏத்தா காசு இல்லன்னா என்ன நாளைக்கி கொடு.. " " என்னண்னே பாக்கி ரொம்ப நிக்கிதே ஒண்ணாம் தேதி செட்டில் பண்ணிடுங்க...அப்பதானே நம்ம பொழப்பு ஓடியடையும்...."

இப்படியெல்லாம் மனிதர்களோடு அளவளாவி வாழ்க்கையோடு கலந்து தானும் பிழைத்து எல்லோரிடமும் வியாபாரமும் நடத்தி வந்தார். ஊரெங்கும் மூலைக்கு ஒரு சூப்பர் மார்க்கெட் கடைகள் வந்து கவர்ச்சிக்கரமான செல்புகள், கலர் கலர் லைட்டுக்கள், பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் ரெடி மேட் சிரிப்போடு யூனி பார்ம் அணிந்த பணியாட்கள் என்ற் நவீனத்தின் பகட்டில் அவரின் பழுப்புக் கலர் மான் மார்க் சியாக்காய் போட்ட முண்டா பனியன் வியாபாரம் தொலைந்தே போய் விட்டது...

நாடார் கடையில் விலை படிமாணமாய் இருந்தாலும், மனித தொடர்புகள் வலுவாய் இருந்தாலும் அவரால் ஜெயிக்க முடியவில்லை காரணம் கவர்ச்சி வியாபார யுத்தி மனிதர்களை அடித்து இழுத்துச் சென்றதுதான். இன்றைக்கும் நீங்கள் கிராமங்களில் அல்லது தெரு முக்கில் இருக்கும் ஏதோ ஒரு மளிகைக்கடைக்கு அல்லது காய்கறிக் கடைக்குச் சென்று பாருங்கள்...அங்கே வியாபாரம் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கும்...

ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்களில் வியாபாரம் மட்டும் இருக்கும். இயந்திரங்கள் போலே உள்ளே செல்வோம், இயந்திரங்கள் போலே பொருட்களை எடுப்போம், காசு கொடுப்போம் இயந்திரமாய் வீட்டுக்கு வந்து விடுவோம். நான் சூப்பர் மார்க்கெட் வியாபாரிகளை குறை கூறவில்லை அங்கே மனித உறவுகள் விரிவடைவதற்கான சாத்தியங்கள் மரத்துப் போய்விட்டன என்றுதான் கூறுகிறேன்.

எல்லா விரிவாக்கத்தாலும் என்ன சாதித்து விட்டோம்....? மனிதர்களை மனித உறவுகளை நாம் மேம்படுத்த இயலவில்லை. மனதுக்குள்ளேயே ஒரு பரபரப்புக் கொண்ட ஒரு சமுதாயமாய் போய் விட்டோம். என்னதான் நீங்கள் தேவி தியேட்டர் ஏசி யில் போய் உட்கார்ந்து பாப்பார்ன் வாங்கிக் கொண்டு படம் பார்த்தாலும் அது.....மாலை 7 மணிக்கு மாட்டு வண்டி கட்டிக் கொண்டு கிராமத்து டெண்ட் கொட்டகைக்குப் போய் மணலை அள்ளிக் குவித்து உட்கார்ந்து படம் பார்க்கும் அந்த த்ரில்லுக்கு முன்னால தூசுதான்...

நவீனத்தை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் வாழ்க்கையை தொலைத்து விட்டு நாம் அறிவு சார்ந்த சமுதாயம் என்று மேடைகளில் பேசிக் கொண்டு ஒரு மன இறுக்கம் கொண்ட மனிதர்களாய் மாறிப் போனது காலத்தின் கோலம் தான்.

சக மனிதரைப் பார்த்து சிரிக்க முடியவில்லை. எப்போதும் பார்மாலிட்டி என்னும் சம்பிரதாயப்பேச்சு......சென்டி மீட்டர்களில் அளவெடுத்த சிரிப்புக்கள், நேரத்துக்குள் அடைத்துக் கொண்டு அவசர கதியில் முடியும் உறவுகளோடான ஒரு இயந்திரத்தனமான சந்திப்புக்கள்....என்று இறுகி இறுகி இன்று மன அழுத்தத்தின் உச்சத்தில் நம் சமுதாயம் இருக்கிறது.

வெட்ட வெளி வானத்தை ரசித்துப் பார்த்து நாட்கள் ஆகிப்போன மனிதர்கள், இன்று இணையத்தில் வந்து விர்ச்சுவல் வானத்தையும், செடி கொடிகளையும் ஆறுகளையும் மனிதர்களையும் தேடுகிறார்கள்.....!

எல்லா பயன்பாடுகளும் மனித உறவுகளை, வாழ்க்கையை செம்மையாக்க பயன்படுமெனில் அந்த பயன்பாட்டில் ஒரு அர்த்தம் இருக்கிறது மாறாக அது சிதைக்கிறது எனில் அப்படிப்பட்ட பயன்பாடுகளை கட்டிக் கொண்டு அழுவதை விட செத்து பிணமாய் போவதே மேல்.....

நான் யோசித்து கொன்டு அமர்ந்திருந்தேன். வானத்தில் பூத்திருந்த நட்சத்திரங்கள் சினேகமாய் என்னைப்பார்த்து சிரிக்க எனக்கு பக்கத்தில் வந்து துணையாய்ப் படுத்துக் கிடந்தது அந்த பெளர்ணமி நிலவின் ஒளி.....

வீட்டிக்குள்ளிருந்து அம்மாவின் குரல்.....சப்தமாக..." மணி எட்டாயிடுச்சு லூசுப்பய மாதிரி தனியா ஒக்காந்து என்னடா பண்ற...உள்ள வாடா....டீவில ஏதோ போட்டிருக்கான் பாரு..." என்று கூப்பிட்டாள்....!

நான் தெளிவானவனாக மாற " இதோ வர்றேன்மா ...." என்று கூறிக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன்.

தெரு வெறிச்சோடி கிடந்தது.....

எழுதியவர் : Dheva.S (28-Apr-13, 2:07 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 231

மேலே