உனக்காய் ஒரு கவிதை - கருவறைக்கு

இருட்டு சொர்க்கமே
பத்து மாத உலகமே
இது உனக்காய் ஒரு கவிதை

கருவறையே !
என்னை நீ சுமக்க
உன்னை என் தாய் சுமக்க
சுமந்தது போதும் என்றா பூமியிலே
இறக்கி விட்டாய்

ரத்த நாளத்தால் குளிப்பாட்டி
நரம்புகளால் தலை துவட்டி
இதய துடிப்பை தாளமாக்கி
உன் தசை என்னும் போர்வையால்
போர்த்தி
என்னை அழகுபடுத்தி பார்த்த
என் முதல் அன்னை நீ தானே

கை முளைத்து, கால் முளைத்து,
தலை முளைத்து, உடல் முளைத்து
நான் குழந்தை ஆகும் வரை
காத்திருந்தாயே
என்ன அவசரமோ நான்
கண் விழித்து உன்னை பார்ப்பதற்குள்
உன் தசை நார் கிழித்து
வெளியே தூக்கி போட்டாய்
நீ எப்படி இருப்பாயோ ?
உன்னை பார்க்க இன்றுவரை
ஏங்குகிறேன்

கருவறையே இந்த உலகம்
இவ்வளவு கொடியது என்று
உனக்கு தெரியவில்லையா ?
என்னை ஏன் இங்கே
இறக்கி விட்டாய் ?
அது சரி
உலகின் கொடுமை
உனக்கெப்படி தெரியும்
நீ தான் என் தாய் வயிற்றில்
சுகமாக வாழ்கிறாயே

நான் உன் கருவறையிலேயே
கலைந்திருந்தால் உதிரத்தோடு
உதிரமாகி ஒரு மூலையில்
உன்னுடனேயே வாழ்ந்திருப்பேன்
மனிதனாய் பிறந்து
வறுமையோடும் வாழ்க்கையோடும்
மல்லுக்கட்டி தோற்று இருக்க மாட்டேனே
சரி
பழைய கதையை தூக்கி எரி
இப்போதாவது என்னை ஏற்றுகொள்
உலக வாழ்க்கை
ஒவொரு நாளும்
வாட்டி வதைக்கிறது என்னை


அது சரி
இரண்டு கிலோவே பாரமென்று
தூக்கி போட்ட நீ
ஐம்பத்து ஐந்து கிலோவையா
தாங்க போகிறாய்

என் கருவறையே
யார் யாருக்கோ கவிதை
எழுதி காற்றில் பறக்க விட்டவன்
உனக்காய் ஒரு கவிதை எழுதுகிறேன்

இதை யாரிடம் கொடுக்க ?

எழுதியவர் : சஷி (29-Apr-13, 8:54 pm)
பார்வை : 137

மேலே