தமிழர்கள் கலாச்சாரம்

ஊர்தோறும்
அன்னச் சத்திரம்,
தண்­ணீர்ப் பந்தல்
வீதி தோறும்
சுமைதாங்கிகள்,

ஊருக்குள்
விழும் மழை நீரை
குடிநீராய் சேமிக்கும்
ஊருணிகள்

ஊருணிக்குள்
செல்லும்
தண்­ணீரை
தெளிய வைத்து
உள்ளுக்குள் அனுப்பும்
மதகுப் பள்ளம்

தெய்வ சாட்சியாய்
மந்தையம்மன்
பார்வை படும்படி
அமைக்கப்படும்
ஊர்ப் பஞ்சாயத்து மேடை
அதில்....

வாய்தாக்கள் இன்றி
வழங்கப்படும்
ஒத்தி வைக்கப்படாத
உடனடி தீர்ப்புகள்

எழுதப் படிக்கத்
தெரியாதவனுக்கும்
தகவல்களை
தண்டோராவால்
தெரிவிக்கும்
தகவல் தொடர்பு

காப்புக் கட்டி
கன்னியமாய்
கொண்டாடப்படும்
திருவிழாக்கள்

பொழுதுபோக்கோடு
மனித வர்க்கத்தை
பழுது பார்க்கத் தூண்டும்
அரிச்சந்திரா நாடகங்கள்

'சாவு வீட்டில்
அலங்காரம் கூடாது' என
சட்டை போடாத
சாமானியக் கலாச்சாரம்....

இன்ப துன்பங்களில்
பங்கு பெறும்
பங்காளிகளை
வரிசையில் நிறுத்தி
துக்கம் கேட்க வரும்
நட்பும், உறவும்
'நாங்கள் இருக்கிறோம்
கவலைய விடு' என
தோள் கொடுக்கும்
கை கொடுத்தல்.....

'அழும்போது
இதயத்திற்கு அழுத்தம்
நேர்ந்திடக் கூடாது'
என்று
ஒத்தி எடுக்கும்
மருத்துவ முயற்சியான
மார் அடித்தல்.....

மனதினுள் சோகத்தை
அடக்கி அடக்கி
இதயத்திற்கு
இடர் ஏதும் கூடாது என்று
முராரியில் நினைவுகளை
மூழ்த்தி இறக்கி
வைக்கும் ஒப்பாரி

"காலமானவரின்
கதாபாத்திரத்தை
இனி நீ சேர்த்தே
செய்திடல் வேண்டும்"
என்று உறவுகள் கூடி
உத்தரவிடும் உருமாக்கட்டு
என்னும்
உருக்கமான கட்டளை.....

வருந்தி வருந்தி
நினைத்து நினைத்து
நெஞ்சுருகி
உடல் ஏற்றிக் கொண்ட
சூட்டை
இறக்கி வைக்கும்
எட்டாம் நாளில்
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கும்
கருமாதிச் சடங்கு.....

இப்படி,

வாழ்ந்து போறவனின்
வழியனுப்பு நிகழ்ச்சியிலும்,

வாழப்போறவனுக்கு
வழிசொல்லும்
ஒப்பில்லாத் தமிழனின்
உயரிய கலாச்சாரம்....

எழுதியவர் : நவீன் (14-May-13, 5:01 pm)
பார்வை : 254

மேலே