தோழியென்னும் ஒருத்தி.....

இலக்குகள் நோக்கிய
அன்றாடத் துரத்தல்களில்
எதிர்முன்னெழும்பும்
தடைக் கீறல்களில்
உணர்வுகள் கழன்று
வெளிறிப் போயிருக்கிறது
தழும்புகளேந்திய மனது...

வருடங்கள் தொலைத்து
தோழியொருத்தி
வினவுகிறாள்..... எப்படி
இருக்கிறாய் தொடங்கி.....

பதின்வயதுக்
குறும்புகள் தொடர்கிறதா....?

இன்னமும்
நடுவகிடெடுக்கிறாயா...?

வெள்ளியன்றணியும்
வெளிர்நீலச் சட்டைப்
பழக்கம் தொடர்கிறாயா.....?

இப்பொழுது
யாரோடு சிலேடை
சுழற்றுகிறாய்.....?

இன்னமும் கண்மூடித்
தலையாட்டி
விரல்களில் நூல் சுற்றியே
மெட்டுக்கள்
ரசிக்கிறாயா....?

எனக்கிருக்கும் காதோர
நரை
உனக்குமிருக்கிறதெனில்
இடமா...? வலமா...?

வினாக்களும்
விழியிமைச் சிமிட்டல்களுமாய்
தெற்றுப்பல்
காட்டிச் சிரிக்கிறாள்
மடிக் கணினித் திரைகளில்....

உன் சிரிப்பு
அப்படியேதானிருக்கிறதென
பதிலுரைத்து
விரல் கடித்த
புன்னகைகளோடு
எதிர்நோக்குகிறேன் மற்றுமொரு
கேள்விதனை....

இடைப்பட்ட நொடிகளில்
இதுதான் நீயென
முற்கொத்துகள் விலக்கி
பூக்கடிவாளங்களுமாய்
பின்னிழுத்து
வாசனை போர்த்திப்
போயிருக்கிறாள்
தோழியென்னும் ஒருத்தி.....

எழுதியவர் : சரவணா (17-May-13, 6:19 am)
பார்வை : 166

மேலே