உளி கொண்ட சிலை
தேடுகிறேன், இருட்டிலே கண்திறக்கா குருடன் தேடுகிறேன். என்னை முழுமையாக்காமல் கண்திறக்கா குருட்டுச்சிற்பமாய் விட்டுச்சென்ற என் உளியை தேடுகிறேன். என்னை செதுக்கிய உளியாரென்று தெரிந்தால் தானே தேடுவதற்க்கு.யார்? யார் செதுக்கியது என்னை? தேடுகிறேன் என் உளியை, உளிகொண்ட கரத்தை, கரம்கொண்ட மனத்தை, மனம் கொண்ட முகத்தை, என் உளியின் முகத்தை!!
பிரமிப்பிலிருந்து மீண்டெழமுடியாமல் தவிக்கிறேன், எப்படி நான் இவ்விடம் அடைந்தேன், நான் எப்படி நானானேன், எங்கே இதற்க்கு ஆதி, எதிலிருந்து இந்த மாற்றம். கல்லாய்யிருந்த நான் இன்று கண்திறக்கக் காத்திருக்கும் சிற்பமானேன். நான் மட்டும் எப்படி சிலையானேன்? உளியின் வளிதாங்காமல் உடைந்து தெறிக்கும் பலர்முன் நான் மட்டும் வலிதாங்கினேன். கண்திறக்கும் வரை சிலைக்குத்தெரியாது உளியாரென்று, கண்திற்ந்தால் தான் உளியைத்தேட முடியும், உளி கிடைத்தால் தான் கண்திறக்க முடியும். முடிவில்லா சூன்யத்தில் மாட்டிக்கொண்டேன். கண்ணில்லா குருட்டுச்சிலையாகவே இருந்துவிடுவேனா?. பலரைச்சிதரடித்த உளி என்னை மட்டும் சிலையாக்கியது ஏன்?. காரணம் புரிகிறது, கண்மூடிய இருள் விலகியது. தெரிந்துகொண்டேன், புரிந்துகொண்டேன் உளியாரென்று. ஒவ்வொரு அடியையும் தாங்கியது நான். எதற்காக? பலர் கால் மிதிபடும் படிகல்லாகாமல், கருவறைச் சிலையாக!!. உளி வேறாருமில்லை, உளி கொண்ட சிலைநானே!!!.
- கண் திறந்தேன்