22.5.13-போகிற போக்கில்..!-பொள்ளாச்சி அபி

இதுவரை எனக்கு மாரடைப்பு வந்ததில்லை. ஆனால்,வழக்கத்தைவிட அதிகமாக இம்முறை,இதயத்தில் வலி இருப்பதாகப் பட்டது.இதனைச் சொன்னபோது, மனைவி,குழந்தைகள்,உறவினர்கள்,நண்பர்கள் என ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை அக்கறையுடன் பகிர்ந்து கொண்டார்கள்.நாள்பட்ட சர்க்கரைநோய் இருப்பவர்கள் உடனடியாக கவனம் செலுத்தாவிடில்..அப்புறம் நீங்கள் கேட்காமலேயே சிவலோக,வைகுந்தப் பதவிகளும் நிச்சயம் என..சிலர் பயமுறுத்தவும் செய்தார்கள்.!

இறுதியில்,அந்தப் பிரபலமான மருத்துவமனைக்கு சென்று முழுமையாகப் பரிசோதித்துக் கொண்டு,பின்னர் தேவையான சிகிச்சையை மேற்கொள்வதென முடிவாயிற்று.

மருத்துவமனையில் ‘அப்பாயிண்மெண்ட்’ பெற்று,குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்றபோது,அப்பாயிண்மெண்ட்..,அட்மிட் என்றானது.

ஏதேதோ கருவிகள்,விதவிதமான பரிசோதனைகள்,பதட்டமான காத்திருப்புகள், மருந்துகள், மாத்திரைகள்..மருத்துவர்களின் ஆலோசனைகள்..,உறவினர்கள் நண்பர்களின் விசாரிப்புகள்.., ஆறு நாட்கள் ஓடியதே தெரியவில்லை.!

இறுதியில்,ஒரு வழியாக பயப்படும்படி ஒன்றும் இல்லை.குறிப்பிட்ட இந்த மருந்துகளை சில நாட்கள் மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்,சரியாகிவிடும் என ஆறுதல் சொன்ன அதேநேரத்தில், “ஆனால்,அவ்வப்போது தொடர்ந்து நீங்கள் இங்கு வந்து பரிசோதித்துக் கொள்ளவில்லையெனில்..அப்புறம் சிரமம்தான்..”என ஒரு வெடி குண்டையும் மடியில் கட்டிவிட்டனர்.

‘ஹோ..பெரிய கண்டத்திலிருந்து தப்பி விட்டோமே..இனி தேவைப்படும் அளவில் ஜாக்கிரதையாய் இருந்து கொண்டால்,மாரடைப்பாவது..மண்ணாங்கட்டியாவது..?’ மனதிற்குள் அபரிமிதமான தைரியம் குடிகொண்டது.

“நான்கு மணியளவில் நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம்..” என்று சிரித்தபடி வந்த நர்ஸ் ஒருவர்,எனது ‘கேஸ் ஹிஸ்டரி’க்கான கோப்பு ஒன்றைக் கொடுத்து விட்டு, “இந்தத் தொகையை கேஷ் கவுண்டரில் கட்டி விடுங்கள்.!” எனச் சொல்லி பில் ஒன்றையும் நீட்டிச் சென்றார்.

நன்றி சொல்லியபடியே,கையில் வாங்கினேன்,ஆர்வமாய் முதலில் பில் தொகையைத் தான் பார்த்தேன். “அம்மா..!” இப்போது நிஜமாய் எனக்கு மாரடைப்பு வந்தேவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.!
“இங்கு வருபவர்கள் நன்றாகத்தான் வருகிறார்கள்.ஆனால்..,போகும்போது நோயாளிகளாகி விடுகிறார்கள்” மூர்ச்சையாய்க் கிடந்த என் காதுகளில் ஏதோவொரு குரலின் எதிரொலி..!
-------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (22-May-13, 6:05 pm)
பார்வை : 145

மேலே