வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டு
----------------
எழுதியவர் : நாகினி
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினைப் பாட
வந்தருள்வாய் கலைமகளே...!!
அதாகப் பட்டது ...இன்று நாம்
பேசயிருப்பது என்னன்னா ..
என்ன ..?
ஒரு ஜோதிட நம்பிக்கை பற்றிய விஷயம்...
சொல்லுங்க...கேக்கிறோம்... (தந்தனத்தோம்...)
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...என்று சொல்லி குடு குடுப்பைக்காரன் வருவதை பார்த்திருக்கீங்க இல்லயா ...
ஆமா..
அப்படி ஒரு சமயம் ...ஒரு வீட்டு முன்னாடி ...குடுகுடுப்பைக் காரன் வந்து ...தாயி ஜெக்கம்மா சொல்ரா இந்த வீட்ல ஒரு துக்க சேதி நடக்கப் போகுது ...என்று சொன்னான்..
ஐயோ...பாவம்..என்ன நடக்குமோ...
ம்ம்..இதே போல் தான் அந்த வீட்டு அம்மணியும் கேட்டாங்க...
குடுப்பைக் காரன் என்ன சொன்னான்னு தெரியுமா ...(தந்தனத்தோம்...)
இந்த வீட்டுல அடுப்படி வாஸ்து முறையில தவறான இடத்துல இருக்கிறதால கேடு வரப் போகுது ...இந்த வீட்ட்ல கெட்ட சேதி நிகழப்போகுது..அடுப்படிய இடிச்சிட்டு மாத்தி அமைக்கணும் ...ஜெக்கம்மா செல்லிட்டா நடந்திரும் தாயி என்று சொன்னானா ...
அப்புறம்...
அந்த வீட்டு அம்மணியும் தெய்வ குத்தம் வந்துருமுன்னு பயந்து....கணவரிடம் வாதம் செய்து அடுப்படிய இடிச்சி வேற இடத்துல அமச்சிட்டாங்க ...
அப்பாடி...பெரிய கண்டத்துலயிருந்து தப்பிச்சிட்டாங்கன்னு சொல்லுங்க...
அதான் இல்ல ...(தந்தனத்தோம் ...)
உணவு சமைக்கிற இடத்த மாத்தி அமைச்ச அன்றைக்கே கணவர் பெரிய விபத்தில சிக்கி...மருத்துவச்செலவு வரவுக்கு மீறி போயிட்டது மட்டுமில்லாம சொத்து கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சு ...
ஐயோ...பாவமே...
கணவன் மனைவிக்கிடையே பெரும் வாக்குவாதமாகி என்றைக்கும் சண்டையும் சச்சரவுமா ...வீடே சூன்ய காடா ஆகிடுச்சு ...
அடுப்படி அப்படியே இருந்துருக்கலாம் ...(தந்தனத்தோம்...)
வீடு கட்டும் போதே யோசிச்சு கட்டின வீடுதான் 10 வருசமா ஒரு குழப்படி வந்ததில்லையேன்னு கொஞ்சமும் யோசிக்காம வாஸ்து ..அது இதுன்னு குழம்பி செய்த வேலையால மகிழ்ச்சி நம்மை விட்டுப் போயிடுச்சேன்னு மிகவும் வருத்தப்பட்டாங்க ...
காலம் கடந்து யோசிச்சு என்ன பிரயோஜனம் ...(தந்தனத்தோம்...)
யோசித்தே எந்த காரியமும் செய்யணும்
செய்து முடித்த காரியத்தைச் சிதைத்து மாற்றம் செய்ய நினைத்தால்
வாழ்க்கை நிலைகுலைந்து விடும் மறக்காதீர் ..
எங்க வில்லடி நிகழ்ச்சியைக் காண வந்த அத்தனை பேருக்கும்
...மங்கலம் உண்டாகட்டும் ..மங்கலம்..சுப மங்கலம்.
------------*********-----------