பாதை மாறிய பயணம்
கூலி வேலை செய்து வரும் வருமானம் அவனின் தாய்க்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. எத்தனை நாட்கள் அம்மாவின் வருமானத்திலேயே வாழ்ந்து கிடப்பது. அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். குடி, குடி கெடுத்துவிட்டது. தக்கிமுக்கி +2 படித்து முடித்துவிட்டான். வேலைதான் கிடைக்கவேயில்லை. அத்தனை கெஞ்சியும் வேலைதர யாவருக்கும் முடியவில்லை. கூலிவேலை பார்க்க அம்மா பலமுறை அழைத்தாள். மனமில்லை. மேலும் அதில் நுழைந்திட்டால் காலம் முழுமைக்கும் அங்கேயேதான் உயர வழியில்லாமல் இருந்திடல் வேண்டும். அம்மாவை உட்காரவைத்து உணவு பரிமாறி, இன்பமாக அவளை வாழவைக்க வேண்டும். அம்மாவிடம் சொன்னான், மதுரைக்கு சென்று வேலை பார்க்கப் போவதாய். அம்மா கொடுத்த காசை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
மதுரையின் வீதிகளிலெல்லாம் அலைந்து திரிந்து, களைத்து, காசை காலிசெய்து, இப்பொழுது என்ன செய்வது என்பதினைக்கூட செய்வதறியாது சென்னை செல்லும் ரயிலில் டிக்கெட்கூட எடுக்க முடியாமல் ஏறினான். பசி வயிற்றைக் கிள்ளியது. அப்பொழுதுதான் உணர்ந்தான் உணவுகொண்டு 2 நாட்கள் கடந்ததை. அப்படியே சுருண்டு படுத்துவிட்டான். திண்டுக்கல் வந்தது. அருகினில் அமர்ந்திருந்தவர்கள் பேசிக்கொண்டு உணவருந்தினர். அவர்களிடம் கைனீட்டி பிச்சையெடுக்க மனம் கூசியது. அவர்கள் பேச்சிலிருந்து அந்த பிரியாணி, வேணு பிரியாணி என்பதுவும், அது மிகவும் ருசியானதுமாக இருக்குமெனவும் அறிந்துகொண்டான். பசி மேலும் கொன்றது. எழுந்து அமர்ந்தான். அப்பொழுது அவனருகில் ஒரு அழகான இளம்பெண், வயது 14 தானிருக்கும், நின்றுகொண்டு வெள்ளரிப்பிஞ்சு விற்றுக்கொண்டு இருந்தாள். இவனைப் பார்த்ததும் புரிந்துகொண்டுவிட்டாள் இவன் பசியினால் துடிக்கிறான் என்று. கரிசனத்துடன் உடனேயே 4 பிஞ்சுகளை அவனுக்குக்கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அவன் அவனிடம் காசு இல்லை என்பதினை சைகை செய்தான். அவள் அதை பொருட்படுத்தாமல், அவன் கைகளினுள் பிஞ்சுகளை திணித்தாள். அவற்றை உண்டவுடன் உடனேயே உயிர் வந்ததை உணர்ந்தான். அவள் இப்பொழுது மற்ற இடங்களுக்குச் சென்று விற்கத்துவங்கினாள். சிறிது நேரத்திலேயே கூடையில் இருந்த அத்தனை பிஞ்சுகளையும் விற்றுத் தீர்த்தாள்.
பின்னர் அவனருகில் வந்திருந்து அவனை பற்றி விசாரித்தாள். சொன்னான். அவர்களுக்குள் நன்றாகப் பேசிக்கொண்டார்கள். அவள் தினமும் 6 கூடைகள்வரை பிஞ்சுகள் விற்கிறாள். ஒரு கூடைக்கு செலவுபோக 250 சம்பாதிக்கிறாள். உற்சாகமாக கதைகளைக்கேட்டபின் மனதில் ஒரு இனம்புறியாத நம்பிக்கை பிறந்தது அவனுக்கு. அவள் சொன்னாள் வேணு பிரியாணி பொட்டலங்கள் விற்றால் நல்ல வியாபாரம் நடக்கும் என்றும் ஒருனாளைக்கு 1000 ரூபாய்வரை சம்பாதிக்கலாம் என்றாள். திருச்சியில் இறங்கி மறுபடியும் திண்டுக்கல் அவளுடனேயே வந்துவிட்டான். இரவு ப்ளாட்ஃபாமிலேயே படுத்து உறங்கினான்.
மறுனாள் அவளே அவனை வேணு பிரியாணி ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றாள். இருவரும் சேர்ந்தே தொழில் செய்வது என்று முடிவு செய்தனர். நினைத்தபடியே தொழில் நன்றாக இருந்தது. ஊருக்குச் சென்று அம்மாவையும் கூட அழைத்து வந்துவிட்டான். 5 வருடங்கள் கடின உழைப்பு. அவளையே திருமணம் செய்துகொண்டான். இப்பொழுது வீட்டிலேயே பிரியாணி தயார் செய்து ரயிலில் விற்கிறார்கள். வீடு கட்டிமுடித்தபின் அம்மாவுக்கு வைரத்தோடு வாங்கிக் கொடுத்தான். அவள் ஆனந்தமாக அதை ரசித்தாள். மருமகளுக்கே அதைப் பரிசாகக் கொடுத்தாள்.
தாய் மடியில் தலைவைத்து மனைவியின் மடியில் கால்வைத்து அப்படியே தூங்கிப்போய்விட்டான்.