பள்ளிகூடத்தில் புராண பாடம்.

வாத்தியார்;
*****************
-----------------அடே... பையா...! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கிறதென்று சொல் பார்ப்போம்...?

பையன்;
*************
--------------எனக்கு தெரியவில்லையே சார்.

வாத்தியார்;
*****************
------------------ஆதிசேசன் என்கிற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது, ''பூமியை ஆதிசேசன் என்ற ஆயிரம் தலைகொண்ட பாம்புதான் தாங்குகிறான்''. இதுகூட தெரியவில்லையாடா மடையா...?

பையன்;
************
------------நான் கேள்விப்பட்டதில்லை சார், ஆனால் ஆதிசேசன் என்கிற பெயர்மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும்போது ஒரு சாஸ்திரி சொல்லக் கேட்டு இருக்கிறேன், அதாவது ஆதிசேசன் விஷ்ணுவின் படுக்கை என்றும் அந்த விஷ்ணு ராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேசன் லஷ்மணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக நியாபகம் இருக்கின்றது.

வாத்தியார்;
*****************
---------------ஆமாம் அந்த ஆதிசேஷன்தான் பூமியை தாங்கிக்கொண்டு இருக்கிறான்.

பையன்;
*************
-------------இப்பொழுது தெரிந்துகொண்டேன் சார், ஆனால் ஒரு சந்தேகம் சார்.

வாத்தியார்;
*****************
------------------என்ன சந்தேகம் சீக்கிரம் சொல்.

பையன்;
************
-------------பூமியை தாங்கிக்கொண்டு இருக்கும் ஆதிசேசன், விஷ்ணுவுக்கு படுக்கையாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் சார் தாங்குவார்கள்...? தவிர லட்சுமணனாக உலகத்திற்கு வந்துவிட்டபோது ஆதிசேசன் யார் தலையில் உலகத்தை வைத்துவிட்டு வந்தார்...? தயவு செய்து சொல்லுங்க சார்...?

வாத்தியார்;
*****************
-----------------நீ என்ன ''குடி அரசு'' படிக்கிறாயோ...! அதனால்தான் அதிக பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய், பொறு..! உனக்கு இந்த பரிச்சையில் சைபர் போடுகிறேன்.

பையன்;
************
------------ இல்லவே இல்ல சார், நான் சத்தியமாய் ''குடி அரசை'' படித்தே இல்லை சார், ராமாயணம்தான் சார் கேட்டேன், தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது சார்.

வாத்தியார்;
*****************
------------------ ஆதிசேசன் தெய்வத்தன்மை பொருந்தியவன், அவன் ஒரே காலத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய சக்தி அவனுக்குண்டு, அவன் பூமியையும் தாங்குவான், அதே வேளையில் விஷ்ணுவிற்கு படுக்கையாகவும் இருப்பான், விஷ்ணு ராமனாக உலகத்திற்கு போகும்போது லஷ்மணனாகவும் கூட போவான் தெரியுமா...?

பையன்;
************
-----------இப்போ தெரிந்தது சார், ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார், நீங்கள் கோபித்துகொள்ளவில்லை என்றால் கேட்கலாமா...?

வாத்தியார்;
*****************
-----------------என்ன? கேள்...!

பையன்;
************
------------(பையன் தலையை சொறிந்துகொண்டே)... ''பூமியை ஆதிசேசன் தாங்குகின்றான் சார், அந்த ஆதிசேஷனை யார் தாக்குறாங்க சார்...? அவர் எதன்மீது இருந்துகொண்டு உலகத்தை தாங்குகின்றார் சார்???'' இதைமட்டும் சொன்னால் போதும் வேற ஒரு சந்தேகமும் இல்லை எனக்கு.

வாத்தியார்;
*****************
----------- போக்கிரிப் பயலே நீ ''குடி அரசு'' படிக்கிறாய் என்று தெரிந்துவிட்டது, இரு.. இரு... உன்னை இந்த வருஷம் பெயிலாக்குகிறேன், போய் வாயை மூடிக்கொண்டு அமரு.

பையன்;
************
------------ தான் ஏதோ மாபெரும் குற்றம் புரிந்ததைபோல் வாயை மூடிக்கொண்டு அமர்ந்தான்.

**********---------***********
**********----------**********

08-04-1928 சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் குடி அரசு பத்திரிகையில் எழுதிய உரையாடல்.

பெரியாரின் எழுத்தும் பேச்சும் என்ற நூலில், தொகுதி -6, பக்கம் 188, 189.

நன்றி
குடி அரசு.

நல்ல வேலை! விஷ்ணுவும், ஆதிசேசனும், கோசலை சுமித்திரை இவர்களின் கருவறையில் இருந்த போது, இந்த உலகத்தை யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்கள் என்று அந்த பையன் கேட்கவில்லை, ஆகையால் நான் கேட்டுவிட்டேன்.

-*- எமதர்மன்.

எழுதியவர் : தந்தை பெரியார். (11-Jun-13, 9:30 am)
சேர்த்தது : எமதர்மன்
பார்வை : 164

மேலே