சாயும் காலம் சிவக்கும் வானம்...

எந்தன் பழைய படைப்புகளுள் ஒன்று.... தங்கள் பார்வைக்காக
---------------------------------------------------------------------------

நாணம் கொண்ட பெண்மகள் இவளோ,
நகரும் முகில்களை அணிகலாய்க் கொண்டாள்..
செவ்விழி ஆதவன் கண்கள் பட்டதும்,
சொக்கிச் சிவந்து செழித்து நின்றாய்..

நித்திரைத் துயில் கொள்ளும் முன்னே,
நிகரற்று செழிக்கும் உந்தன் மேனி..
எத்திரைப் படத்திலும் கண்டதும் இல்லை,
இப்படி ஒரு வண்ணச் செழிமையை என்றும்..

இரவு, நிலவின் வருகையை நீயறிவாய்,
ஈரக் காற்றுடன் ஆலோசனைக் கொண்டு..
அணையும் தீபம் ஒளிரும் என்பதனால்,
இருள் சூழும் முன்னே சிவந்து நின்றாயோ..

மையிருட்டுடன் போரிட்டாயோ,
நீ மையல் கொண்ட வானத்தினின்று..
இருளவன் வெற்றி கொண்டானன்று,
இரவை ஆட்சி புரிந்து வந்தானே..

ஆதவன் சாயும் நேரமிது,
அவன் விழியின் பாதி கடல் மேல், மீதி அதன் கீழ்..
அவன் ஓரப் பார்வை வான்மகளைக் கண்டு,
ஓரவஞ்சனை செய்தான், வானவள் முகம் சிவக்க.

வானில் பூவுமில்லை மாலையில்லை,
சிவப்புத் திலகம் மட்டும் தூவியதாரோ..
மரகத மஞ்சள் கலந்த திலகமது,
நெஞ்சில் நிற்கும் வண்ணம் கொண்டு..

இடி இடித்தகண் அழுகையோ,
இமை கூட மூடாமல், மாரிக் கண்ணீர் வடித்தாயே..
நீ அழுது தேம்பும் ஆர்ப்பாட்டமென்ன,
அதனால், உன் வானக் கண்கள் சிவந்ததென்ன..

மதிமயக்கும் அழகைக் கொண்டவள் நீ,
மஞ்சம் உன்னை அழைத்திடுவேனே..
அழகிய பெண்கள் உனைப் பார்த்த போது,
அடங்கா சினம் கொள்வர், உந்தன் மீது..

பெண்கள் என்ன பெண்கள்..
உதட்டுச் சாயம் இல்லையேல்,
நமக்குச் சகிப்புத் தன்மை இல்லையே..
சாயம் பூசா பெண்ணிவள் தானே,
சாயும் காலம் சிவந்திடுவாளே..!!

எழுதியவர் : பிரதீப் (11-Jun-13, 12:33 pm)
பார்வை : 104

மேலே