ஈழத் தாயிவள்...
என் பழையவைகளுள் ஒன்று....
---------------------------------------------------------------------------
ஈழத்தில் நம் தமிழர்கள் அகதிகளாக தங்கள் பெற்றோர், சுற்றோர், உறவுகள் அனைவரையும் பிரிந்து நாடுகடத்தப்படும் அவலம் இன்றளவும் நடந்தேரிக்கொண்டு தான் இருக்கிறது..
அப்படி ஒரு மகனைப் பிரிந்த தாய் வடிக்கும் கண்ணீரை, என் கவிதை வரிகளாக வடித்துள்ளேன்...
---------------------------------------------------------------------------
பாலூட்டி சோறூட்டி ,
பத்து வருடம் சீராட்டி,
பட்டும் படாமலும் பார்த்த பைங்கிளியே,
என்னை விட்டு தூரம் போவதேனோ...
ஆசைக்கொன்னு ஆஸ்த்திக்கொன்னு,
என்றிரண்டு பெற்கவில்லை...
நீ ஒன்றுமட்டுமென்ற போதும்,
என் ஆசை ஆஸ்தி நீதானே...
ஆருயிரே போகாதே...
உன் முத்து முத்துப் பற்களென்ன,
இதழ் மூடி வைத்த சித்திரமோ...
அகதி சத்திரத்தில் வாழ்ந்தாலும்,
அகம் குளிர வாழ்ந்து வந்தோமே...
முத்துமணி ரத்தினமே போகாதே...
பாட்டெடுத்து பாடி வந்தேன்,
பட்டுப் பூவே நீ கண்ணுறங்க...
தாலாட்டெடுத்து பாட யாரோ,
உன்னைத் தத்தெடுக்கும் நாட்டினிலே...
மட்டற்ற மாணிக்கமே, என்னைப் பிரிந்து போகாதே...
ஏழையிந்த பாவி மகள்,
சேலை கிழித்து மானம் எரித்த,
காமக் கயவர் கூட்டமிங்கே,
அவரை, நீ கொளுத்திக் கொள்ளும் நாளெங்கே...
சீற்றம் கொண்ட சிங்க மகனே, போகாதே...
மாலையிட்ட மன்னவனோ,
புலிகள் கூட்டம் சேர்ந்துவிட்டு,
வேட்டை மானாய் மாய்ந்து போனான்...
முத்தமிழ் ரத்தினமே,
என் மையிருட்டு வாழ்வினிலே,
என்னைவிட்டு மறைந்து போகாதே...
இங்கு ஈழக் காற்று வீசுதம்மா,
ஈர நெஞ்சம் எவர்க்கும் இல்லை...
உன்னை இழந்து வாழ மாட்டேன்,
இந்த இழிந்த சுற்றம் நமக்கு வேண்டாம்...
வந்துவிடு செங்கனியே, என்னை விட்டுப் போகாதே ...
உலையில் இட்ட சோற்றை உண்ணாமல்,
கட்டிப் பாதுகாத்து வைத்து,
வட்ட நிலா, நீ பருக,
உன்னைத் தொட்டு தொட்டு ரசித்திருப்பேனே...
உலையில் இனி சோறு எதற்கு,
என் ஊனில் இனி உயிர் எதற்கு,
கவின் மதியே, போகாதே போகாதே...
மாரடித்து பிச்சை கேட்கிறேன்,
மன்றாடி இரவல் செய்கிறேன்,
அன்னை, இவளுக்குக் கொள்ளி வைத்துவிட்டு,
சாம்பலை, உடன் எடுத்துப் போவாயாக...!!!