தேடல்...
அங்கும் இங்குமாய் அலைந்த பொழுதுகள்
ஆசை கனவுகள்...
மோகம் கொண்ட வாழ்க்கைக் கதையில்
மூடிய பக்கங்கள்...
வருவது என்ன அடுத்து என்றால்
வெள்ளைக் காகிதங்கள்
வாழ்க்கை வாசல் திறந்து கிடக்கும்
எழுதாச் சரித்திரங்கள்...
உள்ளம் சொல்லும் உணர்வுகள் யாவும்
நன்மை பயக்குமா?
நல் சொல்லின் வழிதான் வாழ்வில்
செல்தல் உண்மை ஆகுமா?
உன்னை அறிய முயன்ற தருணம்
உன்னில் இருக்குமா? இல்லை
ஓட்டை விழுந்த பாத்திரம் போலே
ஒழுகி சறுக்குமா?
நீயும் நானும் போகும் இடத்தை
மாற்றிட இயலுமா?
பயணம் ஒன்று பாதைகள் வேறு
அறிந்திடல் கடினமா?
சோதனை வாழ்க்கை சாதனை என்று
சொல்லிடவே தகும் அல்லால்
வெறும் போதனை மட்டும் மனிதனின் வாழ்வை
மாற்றிட இயலுமா?
தோல்வியும் வெற்றியும் ஓவ்வொரு பக்கம்
அர்த்தம் ஒன்றுதான்
தோற்றவன் கற்றலும் வென்றவன் கற்றலும்
வாழ்க்கையின் தேடல்தான்
உயரே உயரே செல்லும் ஆசைகள்
உனக்கு உனக்கு என்பது எல்லாம்
பெயரே இல்லாக் கல்லறை ஒன்றில்
உறைந்த உணர்வுகள்...
மானுட வாழ்க்கையின் மகத்துவம் உணர
மறுபடி பிறப்புண்டோ?
வாழ்க்கை ஒருமுறை கிடைத்த பரிசே
வாழ்ந்து செல்லடா -நண்பா
வன்முறை குரோதம் வஞ்சகம் விட்டு
வாழப் பாரடா....
உன்னதம் உறவுகள் அன்பின் வலுவுடன்
வாழ்ந்து காட்டடா....
.....முகில்