இந்தியத் தொன்மையின் அதிசயம் 6

வருத்தம் என்ன தெரியுமா?

கால ஓட்டத்தில், நமது தொன்மை காலத்தவர்கள் கணித்த இதே காலம்தான் இந்த துறைக்கு, (வானியல் சாஸ்திரம், ஜோதிடம்) முதல் எதிரியானது. ஆம். அவர்கள் பகுத்த காலம் சதியுகம், (இதன் உண்மை பெயர் சத்ய யுகம்) திரேதயுகம், த்வாபர யுகம், கலியுகம் என்ற கணக்கில் வந்த இந்த கலியுகம்தான் இதன் அழிவுக்கு காரணமாகிறது.

அந்த அழிவுக்கு காரணங்களை பிறகு பார்க்கலாம். இந்த யுகங்களை சற்றே மேலோட்டமாக பார்க்காலாம்.

அது என்ன….. எப்பொழுதுமே மேலோட்டமாக பார்ப்பது….?

பிறகென்ன… மேலோட்டமாக பார்த்தாலே பல சங்கதிகள் புரிய மறுத்து…… அபத்தம் எனும் வாதம் தலையெடுத்து, தூக்கி எறிய மனம் வருகிறது….

ஆழமாக பார்க்க பொறுமையும் புரிதலும் எங்கிருந்து வரும்….. யாருக்கு இருக்கிறது நேரம்….? அதனால்தான் எல்லாவற்றையுமே மேலோட்டமாக பார்ப்பது என்பது….

மேலும், எட்டிப் பார்த்த சங்கதிகள்தானே எனக்கும்….. நான் என்ன ஆழமாக கற்ற சங்கதிகளா இவை எல்லாம்…. ?
எனக்கு ஏது நேரம் இவை அனைத்தையும் கற்று, புரிந்து, அறிவு பக்குவம் கண்டு முதிர்ச்சி பெற….

ஏதோ கிடைத்த உடுப்புகளை ஆங்காங்கே தைத்து, அணிந்து, தலையில் ஒரு அட்டையை ஒட்டி வைத்து மகுடம் சூட்டி அரச ஒப்பனை செய்து
(ராஜா வேஷம் –இதன் தூய தமிழாக்கம்)
காலம் கடத்தி வருகிறேனே….. இதை இப்படியே ஓட்ட வேண்டும் என்ற கவலைதான்……

அதுதான் எல்லாவற்றையுமே மேலோட்டமாக பார்க்கலாம் எனும் சொல்லாடல்…..

(உண்மை இருக்க வேண்டுமே எனது எழுத்தில்…… இந்த ஒரு பிடிவாத கொள்கை அவ்வப்போது பாடாய் படுத்தி எடுக்கிறது…. இருந்தாலும் முயற்சித்து வருகிறேன். எங்கேனும் இடறி விழுகிறேனா என்பதை வாசகர்களாகிய, மற்ற படைப்பாளிகளாகிய நீங்கள்தான் அவ்வப்போது எழுதிவைத்து சேர்த்து சொல்ல வேண்டும்…. என் முகம் கண்ணாடியில் தெரிவது என்றால் அது இந்த எழுத்துத் தளம்தானே… அதன் ப்ரதிபலிப்பு உங்கள் கருத்துகள்தானே…)

சரி சரி… இப்படி விளக்கவுரையிலேயே யுகம் கடத்த விருப்பம் இல்லை…. எடுத்த சங்கதி "யுக" த்திற்கு செல்வோம்….

முதலில் யுகக் கணக்கை பார்க்கலாம்….

அடிப்படையாக எதை வைத்து இவர்கள் நேரத்தை கணித்து யுகத்தின் வருடங்களை கணித்தார்கள் என்பதை முதலில் பார்ப்போமா.

ஏனெனில் நாம் இப்போது பார்க்க இருப்பது ப்ரம்மாண்டத்திலும் ப்ராம்மாண்டத்தை…. ஆம்…. யுகம் என்பது ஒளிவருட கணக்கை போன்றதொரு கணிப்பு…

அதென்ன “போன்றதொரு” எனும் சொல்லாடல்….

ஏனென்றால், நமது தொன்மை காலத்தவர் அந்த கணிப்புக்கு யுகக் கணக்கு என்றுதானே பெயர் வைத்து இருக்கிறார்கள். ஒளிவருடம் என்பது அதில் கால் பங்கு புரிந்து கொண்ட மேல்நாட்டவன் வைத்திருக்கும் சொல்லாடல்…

அதாவது ஒளிவருடமே இன்னும் முழுமை பெறாத மேல் நாட்டவன் கணக்கு, இந்த யுகக் கணக்கில் பயணிக்க இன்னும் எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. சரி சரி… சங்கதிக்கு செல்வோம்…. கிளைக்கதைகள் நமக்கு எதற்கு…..?

யுகக் கணக்கின் அடிப்படை என்பது மனித வருடங்கள் 360 ஆகும்.. இதன் சூட்சுமம்தான் புரியவில்லை இந்த மேலை நாட்டவனுக்கு.

அதாவது பூமியின் ஒரு சூரிய சுற்று ஒரு மனித வருடம். அது போன்ற 360 சுற்றுகள் ஒரு அடிப்படை வருடம் இந்த யுகக் கணக்கிற்கு.

பார்த்தீர்களா மேலோட்டமாக பார்க்கும்போதே இப்படி தலை சுற்றல் வந்தால் எப்படி நான் ஆழமாக இதைப் பற்றி எல்லாம் படிப்பது….

அந்த 360 வருடங்களை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் மட்டுமே இந்த யுகக் கணக்கு புரிதலுக்கு வருகிறது. ஏனெனில் யுகம் என்பது சாதாரண வருடங்களாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அதன் அடிப்படை மாறும்போது ப்ரம்மாண்டம்தானே.

அமெரிக்காவின் வரவு செலவுக் கணக்கில் எண்ணிக்கையை குறிப்பிட்டு விட்டு, அடிக்குறிப்பில், எண்கள் மில்லியன் டாலரில் என்பதுபோல..

எண்ணிகையே கோடிகளில் இருக்கும். அதன் அடிப்படை மில்லியன் டாலரில் என்று இருக்கும். அப்படியெனில் அதை ரூபாயாக மாற்றி புரிதல் தேவைதானா என்று ஒதுக்கி தள்ளுவது போன்ற செயல்தான் இதுவும்…

இருந்தாலும் அமெரிக்கா வெளியிடும் அதன் வரவு செலவுக் கணக்கு மில்லியன் டாலர் அடிப்படையில் இருப்பதும், எண்கள் கோடிக்கணக்கில் இருப்பது, அதை புரிய அவற்றை ரூபாய் மதிப்பில் மாற்றுவதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன…. அதுபோலதான் இதுவும்…..

அதாவது சத்ய யுகத்திற்கு 4800 அடிப்படை ஆண்டுகள், திரேத யுகத்திற்கு 3600 அடிப்படை ஆண்டுகள் துவாபர யுகத்திற்கு 2400 ஆண்டுகள் கலியுகத்திற்கு 1200 அடிப்படை ஆண்டுகள்.

இப்போது இந்த யுக ஆண்டுகளை அடிப்படை ஆண்டுகளால் பெருக்க கிடைப்பது நமது நடைமுறை ஆண்டுகள். ஒன்றை மட்டுமே பார்ப்போம். அதாவது 1200 பெருக்கல் 360 என்றால் வருவது 4,32,000 – -- நாலு லட்சத்தி முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகள். இது இந்த கலியுகத்தின் மொத்த கால அளவு.
இதற்கு முந்திய யுகங்களின் கால அளவுகள் இதே கணக்கின் அடிப்படையில்,

சத்ய யுகம், 17, 28,000 ஆண்டுகள், திரேத யுகம் 12,96,000 ஆண்டுகள், த்வாபர யுகம் 8,64,000 ஆண்டுகள். அப்படியென்றால் அதற்கு முன்னால் உலகம் இல்லையா….

கண்ணுக்கெட்டிய தூரம் வரைதானே நேரடிப் பார்வையால் பார்க்க முடியும் அதற்கு அப்பால் நுண்ணோக்கி வைத்து பார்க்க முடியும். அதற்கு அப்பால் ஒன்றுமே இல்லையா என்றால், இருக்கிறது ஆனால் பார்க்க முடியவில்லை என்றுதானே பொருள். எதுவும் இல்லை என்றா பொருள்? இந்த காலக்கணிதம் நுண்ணோக்கி வைத்து பார்த்தவரைதானே……

இந்த மேலை நாட்டவனின் கார்பன் ஆண்டுகள் தற்போதைய புதிய கண்டுபிடிப்பு பூமியின் வயதை கண்டு பிடிக்க.

நமது கண்டுபிடிப்புகள் வைரத்தில் நின்று, ஒளிர்ந்து கொண்டு இருக்க, இவன் இப்போதுதான் கார்பனில் தேடிக்கொண்டு இருக்கிறான் சங்கதிகளை....

இதில் சில சங்கதிகள் புரிந்தும் புரியாததுமாக வர்ணிக்கப்பட்டு இருக்கின்றன.

வர்ணா என்பது தமிழில் வர்ணம் ஆவதால், அதை நிறம் என்று பொருள் கொண்டு கொந்தளிப்பு ஏற்படுகிறது. எல்லாம் என்போன்ற அறைகுறை மொழிப் பெயர்ப்பாளர்கள் செய்யும் மேதாவித்தனம்தானே….

வர்ணா என்றால் வர்ணத்தை குறிப்பதல்ல. அது நிறத்தையும் குறிப்பதல்ல. வர்ணா என்றால் வர்ணிப்பு என்றுகூட இருக்கலாம்தானே…

எதற்கு இந்த திடீர் குறிப்பு என்கிறீர்களா… அதில் ப்ராம்ஹண வர்ணா, சூத்திர வர்ணா எனும் சொல்லாடல்கள் வருகின்றனவே….

அதாவது யுகத்தில் எந்த குணம் மிகுந்து இருக்கும் என்பதுதானே அது…. வர்ணா என்றால் குணம் என்று பெயர்… அதிலும் சூத்திர வர்ணா என்றால் சூத்திர குணம் என்று பொருள் என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது… அதை விளங்கிக் கொள்ள சென்றால் இதுதான் பொருளாகிறது…

அதற்கு முன் இன்னும் சற்றே விரிவாக பார்ப்போம்…

பூமியின் ஒரு சுய சுற்று இரவு பகலுக்கு அடிகோலுகிறது. நிலவின் ஒரு சுற்று அமாவாசை பௌர்ணமிக்கு அடிகோலுகிறது. அதே போல பூமியின் ஒரு சூர்ய சுற்று ஒரு மனித வருடத்திற்கு அடிகோலுகிறது. சுற்றுகள் இத்தோடு முடிந்து விடுவதாக கொண்டால், இந்த யுகக் கணக்கிற்கு எப்படி செல்வது… அதுதான் இந்த வர்ணா முன்னுரை… வாருங்கள் பார்ப்போம்….
எல்லாமே சுற்றாக இருக்கும்போது, தலை சுற்றாமல் இதை புரிந்து கொள்வது முக்கியம் தானே…..

இந்த சூர்ய குடும்பத்தை தாண்டி சென்றால்தான் ப்ரபஞ்ச அறிவு, கற்பனை எல்லாம் உதிக்கும். அப்படியென்றால் சூர்யனையும் தொட்டுத்தானே பார்க்க வேண்டும் சிறிது. அதுதான் இந்த யுகக் கணக்கு. அதற்கு அடிப்படைதான் இந்த சுற்றுகள் விவரிப்பு.

சூர்யனை கோள்கள் சுற்றுகின்றன….அறிந்த சங்கதி.

சூர்யன் எதையோ சுற்றுகிறது என்றால் நம்பவா போகிறீர்கள்?

சமீபத்திய அமெரிக்கன் கண்டுபிடித்து ஆராய்ச்சியாக வெளியிட்டுள்ளான். உடனே ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே…

அதாவது சூரியன் ஒரு மையத்தை வைத்து நீள் சுழல் பெற்று வருகிறது. இதை நமது முன்னோர்கள் யுகக் கணக்கில் சொல்கிறார்கள்.

(வியக்க மட்டும்தானே படித்தேன். ஆராய்வதற்கா படித்தேன் இவற்றை)

அதில்தான் இந்த யுக குணங்கள் பற்றி சொல்கிறார்கள். சதியுகத்தில் தர்மம் அதிகம் காணப்படும். கலியுகத்தில் அதர்மம் தழைத்தோங்கும்.

தர்மம், அதர்மம், என்ன பொருள் இவற்றிற்கு…?

பாவம், புண்ணியம் எனும் நேர்பொருள் கொண்டுதானே இத்தனைநாட்கள் ரத்தக்களரியாக்கிக் கொண்டிருக்கிறோம்.

தர்மம் என்பது சிந்தனை. அதாவது எண்ணம், மனது சார்ந்த செயல். அதனால்தான் சட்டங்கள் போட்டாலும் குற்றங்கள் குறைவதில்லை. சட்டப்படிதானே குற்றம் வாதாடப்படுகிறது. தர்மப்படி யாருக்கு என்ன கவலை.
தர்மம் என்பது சிந்தனை. மனித குலத்தை உயர்த்தும் சிந்தனைப். அதன் படி வெளிப்படும், வெளிப்பட வேண்டிய செயல்கள்.

அ+தர்மம் எனில் தர்மம் இல்லாத செயல்… அதாவது மனித வளத்தை பற்றிய எண்ணம் குறைந்த, எண்ணம் இல்லாத செயல்கள்.

இந்த யுகக் கணக்குப்படி கலியுகத்தில் அதர்மம் அதிகரிக்கும். அதாவது பரப்ஞ்ச அறிவு குறையும்.

சதியுகத்தில் தர்மம் பலமடங்கும், கலியுகத்தில் அது மிக்க்குறைவாகவும் இருக்கும்.

இது என்ன யுகக் கணக்கில் இந்த கதைகள் எல்லாம் எதற்கு? பதிகிறேன் வாசியுங்கள்…

சூரியன், இந்த பூமி, சந்திரன் மற்றும் தனது கோள்களையும், இன்னும் பிற நட்சத்திரங்களையும் தன்னோடு சேர்த்து கொண்டு ஒரு மையப்புள்ளியை சுற்றுகிறது. அது ஒரு நீள்வட்டப் பாதை. அதுதான் மனித சிந்தனைக்கு அடித்தளம் அளிக்கும் ப்ரபஞ்சப் புள்ளியின் ஒரு பகுதி.

நீள்வட்டப் பாதையின் தன்மையால் அந்த மையப்புள்ளிக்கு அருகில் இருக்கும்போது மனித சிந்தனை ப்ரபஞ்ச அறிவோடு நெருக்கத்தொடர்பு கொள்கிறது.
அந்த அருகாமை காலம்தான் சதியுகம் என்பது. அந்த மையப் புள்ளிக்கு சூரியன் வெகு தொலைவு செல்லும்போது கலியுகம் நிகழ்கிறது.

அதில் ப்ரபஞ்ச அறிவு குறைந்து, மனிதப் பிறவி பௌதீக அறிவில் உழல்கிறது. முடிவில் கற்பனை, சிந்தனை என்பதெல்லாம் பொய் என வாதிடும் நிலைக்கு தள்ளப்பட்டு, பௌதீக ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே எதையும் சிந்திக்க துடிக்கிறது. அதன் விளக்கம்தான் இந்த சூத்திர வர்ணா நிறைந்திருக்கும் கலியுகம்.

அதாவது வர்ணா என்பது தமிழாக்கம் செய்யும்போது திரிந்து விட்டது போலத்தான் இந்த சூத்திரம் என்பதும் திரிந்தது.

சூத்திரம், சூத்திரன் என்பது எவரையும் குறிக்கும் சொல் அல்ல.

சூத்திரம் என்பது சூட்சுமம் என்பதே உண்மை பொருள்.

கணக்கில் சூத்திரம் அறிந்த பிறகே தேர்ச்சி பெறமுடியும். அப்படி எனில் ஏதேனும் ஒரு சூத்திரனிடம் போய் அறிந்து கொண்டு வந்தபின்பே கணக்கு வரும் என்று பொருளா?

சூத்திரர்கள் அதிகம் என்றால், வாழ்வை பௌதீக ரீதியாக உருவாக்கும் சிந்தனைகள் அதிகமாகும். மனரீதியாக புரிந்து கொள்ளும் நபர்கள் குறைவார்கள் என்றே பொருள். சூத்திர வர்ணா என்றால் சூட்சும விவரிப்பு அதிகம் கொண்ட நபர்கள் அதாவது பௌதீக ரீதியான ஆதாரங்களை, விளக்கங்களை மட்டுமே புரியும் சிந்தனைகள் கொள்ளும் நபர்கள் என்று பொருள்.

அதுதானே நடக்கிறது இன்றேல்லாம். விண்கலங்களும் செயற்கைக்கோள்களும் விட்டுத்தானே அறிந்து, புரிந்து, சாதித்து விட்டதாக மமதை கொள்ள முடிகிறது இந்த மனித குல மேலை நாட்டவனால்.

அதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கோள்களை பற்றி அமர்ந்த இடத்திலேயே குறிப்பிட்டு சொல்லி, விவரித்து, தொடர்புபடுத்தி, வாழ்ந்து, மனித வளத்திற்கு பயன்படுத்தியும் வந்திருக்கிறார்களே நம்மவர்கள்.

தர்ம சிந்தனை என்பது சுயக்கட்டுப்பாடு கொள்ளும் எண்ணம்.

அதர்மம் என்பது வெளிக்கட்டுப்பாடுகள் அதிகம் கொள்ளும் எண்ணம்.

அதாவது வெளி சக்தி ஏதேனும் கட்டுப்படுத்தாதவரை எதையும் செய்வது தவறில்லை எனும் சிந்தனை. அதனால்தான் இத்தனை சட்டங்கள் இருந்தும் குற்றங்களை வெளிப்படையாகவே தொடர்கின்றன.
சிந்தனைக்கும் ப்ரபஞ்சத்திற்கு தொடர்பு ஏற்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்
இதில் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது கோட்பாடுகளை சேர்த்து வைத்துள்ளார்கள்.

தொடரலாம்………

எழுதியவர் : மங்காத்தா (17-Jun-13, 12:29 pm)
பார்வை : 218

மேலே