சாசனம் என்ன சொல்கிறது பகுதி 2

சாசனம் நமது நாட்டை தேர்தல் முறையின் அடிப்படையில், மக்கள் கையில் வோட்டு வழங்கி அதன்மூலம் ஆட்சி நடத்த சொல்கிறது.
பிறகு ஏன் இந்த மாநில ஆளுநர் பதவி மட்டுமே அடிமை சாசனத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது?

அது என்ன அடிமை சாசனம்?

அடிமை சாசனம் சொன்னது என்னவென்றால், எத்தனையோ தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தில் இருக்கும் லண்டனில் வசிக்கும் அரச குடும்பத்தினர் நியமிக்கும் ஒரு வைசிராயும் கவர்னரும்தான் இந்தியா எனும் நிலப்பரப்பில் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள். அவர்களுக்கு மட்டுமே எதையும் நிர்வகிக்கும் உரிமையுண்டு. இந்த நிலப்பரப்பில் எவர் எதை செய்வதானாலும் இந்த கவர்ன்ர், வைசிராயின் அனுமதி பெற்றே இயங்க வேண்டும் என்கிறது. அதாவது அரச குடும்பத்தின் ஆதிக்கம் இந்த கவர்னர், வைசிராய் வழியே இந்த நிலப்பரப்பில் நிலைநாட்டப்படும் என்கிறது.

யார் இந்த கவர்னரும் வைசிராய்க்களும்?

கவர்னர் என்பது ஆளுநர் என்றே தமிழில் நேரடியாக மொழியாக்கத்தில் வழங்கப்படுகிறது.

வைஸ் ராய் என்பதன் தமிழாக்கம் என்னவென்றால் அரசாட்சியின் கைப்பாவை எனும் பொருள் படும். வைஸ் ராய் அதாவது உதவி ராயல் நபர்.

ராய் என்பது ராயல் என்பதன் சுருக்கம். ராயல், அதாவது அரச குடும்பத்தின் வைஸ்.

வைஸ் எனும் ஆங்கிலேய சொல் உச்சக்கட்ட தலைமைக்கான உதவித் தலைமை என்று பொருள். எனவே அரசக்குடும்பத்தின் கைப்பாவை என்று அங்கு உள்நாட்டி;லும், வெளிநாடுகளின் உச்சக்கட்ட ஆளுமை கொண்ட நபர் என்பதால் கவர்னர் என்றும் பெயர் கொண்டவர்கள்தான் இந்த கவர்னர்களும் வைசிராய்களும்.

அதிகாரத்தில் சுயஆளுமை பெற்றால் அவர் கவர்னர். கைப்பாவை என்றால் வைசிராய். அல்லது ஆங்கேலயர்களுக்கு அவர் வைசிராய். இந்தியர்களுக்கு கவர்னர்.
எனக்கு மாப்பிள்ளை உனக்கு கணவர் என்பது போல….

சரி, அதற்கு இந்த தொடரில் எப்படி தொடர்பு என்றுதானே கேள்வி எழுகிறது. அதுதானே இந்த கவர்னர் எனும் ஆளுநர் பதவி.

இது மாநிலங்களில் மட்டுமே உள்ளது. ஏனெனில் மத்தியில்தான் மக்கள் பிரதிநிதிகளால் வோட்டு முறையில் தேர்ந்தெடுக்கும் குடியரசர் அமர்ந்திருக்கிறாரே.

இந்த ஆளுனர் தானே இன்னும் அடிமைசாசனத்தின் தொடர்ச்சியாக நிமனம் செய்யப்படும் ஒரே பதவியாக இருக்கும் இடத்தில் இயங்குகிறார். இந்த ஆளுநர் மட்டுமே குடியரசரால் நியமிக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் ஆளுமை அதிகாரம் பெறுகிறார்.

நாட்டின் எல்லா இடங்களின் பதவிகளுக்கும் தேர்தல் முறை இருக்கும்போது இந்த பதவிக்கு மட்டும் நியமன முறை ஏன் எனும் கேள்வி எழும்போது இயல்பான பதில் “அடிமை சாசனத்தின் சாபம்” என்றுதானே வருகிறது.

அதாவது நமது சாசனம் மாநிலங்களை ஒரு தன்னாட்சி கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தில் இயங்க வழி செய்கிறது,.

ஆனால் அதன் தலைவரை மத்தியில் இருந்து நியமிக்கும் முறையை கைவிட மறுக்கிறது…. ஆங்கிலேய அரசாட்சியின் விட்டுப்போன சாயலாக இந்த நியமன முறை எதிரொலிக்கிறதே.

ஏன் தெரியுமா….?

மத்திய அரசு எந்திரங்கள் அனைத்துமே ஒரு காரணத்திற்காக பயம் கொள்கின்றன. இந்தியா என்பது கூட்டாட்சித் தத்துவம் கொண்டதாம். அதாவது மத்தியில் வலுவான ஒருமைப்படுத்தும் அரசும். மாநிலங்களில் சுயாட்சி கொள்ளும் அரசுகளும் தேர்தல் முறை இயக்கத்தில் கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த ஆளுநர் பதவியும் தேர்தல் முறையில் இயக்கப்பட்டால் மாநிலம் பிசிறில்லா சுயாட்சி பெற்று இந்திய நிர்வாகத்தில் இருந்து பிரிந்து சென்றுவிடும் அபாயம் உள்ளதாம். அதனால் இந்த ஆளுனர் பதவி மட்டும் நியமன அடிப்படையிலேயே தொடர்கிறதாம். இதனால் இந்திய ஒருமைப்பாடு காக்கப்படுகிறதாம்.

என்னே ஒரு நம்பிக்கை இந்த மத்திய அரசு எந்திரங்களுக்கு நமது மாநில அரசுகளின் நடவடிக்கைகளின் மீது…?

சரி. இந்த ஆளுநரின் பணிகள்தான் என்ன…?

சட்டசபையை தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் உரையாற்றுவது. அந்த உரை முதல் அமைச்சரின் தலைமையில் இயங்கும் அமைச்சர் குழு தயாரித்த தற்பெருமை அறிக்கை உரையாகத்தான் இருக்கும். பிறகு எல்லாமே மிகவும் முக்கியமான பணிகள்தான். மத்திய அரசுடன் அதிகாரபூர்வ தொடர்பு கொள்வது, மாநில அரசின் செயல்பாடுகளுக்குத் தகுந்தாற்போன்று மாநிலத்தில் தேர்தலுக்கு பரிந்துரை செய்வது, மாநிலத்தின் வரவு செலவுக் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிப்பது, அரசு அமைக்கும் நபர்களுக்கு (அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு) பதவி பிரமாணம் செய்து வைப்பது, மாநிலத்தின் முதன்மை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்விப்பது, மாநிலம் தொடர்பான நியமன ஆணைகளை நிர்வகிப்பதும் அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதும் போன்ற பல பணிகளில் மிகவும் பொறுப்புடன் செயலாற்றுவதுதான்.

இதில் அலுத்துக்கொள்வதற்கு என்ன இருக்கிறது?

சரிதான்…. வாருங்கள் மனக்குமுறலை கொட்டிப்பார்க்கலாம்.

நமது தேசத்தில் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்ப்ட்டு உள்ளன, சட்டசபைகள் அந்தந்த மாநிலத்தின் மொழிகளிலேயே நடத்தப்பட்டு இயங்கி வருகின்றன. எந்த ஒரு மாநிலத்தின் ஆளுநருமே அந்த மாநிலத்தின் மொழி அறிந்தவராகவோ, மாநில சட்ட மன்றத்தில் அந்த மாநிலத்தின் மொழியில் உரையாற்றும் திறன் படைத்தவராகவோ இருந்தது இல்லை. இருப்பதும் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய சங்கதி.

இந்த ஒரு கண்றாவிக்காகத்தான் ஆங்கிலம் இன்னும் நம் நாட்டை விட்டு வெளியேற மறுக்கிறது. அதாவது வடக்கில் இருக்கும் சில மாநிலங்களில் ஆளுனராக இருக்கும் நபர்கள் இந்தியிலேயே உரையாற்றிவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்தி அல்லாத பிறமொழி மாநிலத்திற்கு ஆளுனராக நியமிக்கப்படும் நபர்கள் அந்த மாநில மொழிகள் தெரியாதபோது ஆங்கிலேயத்தின் துணையை பெரிதும் நாட வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இல்லையெனில் இந்தியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறது மத்திய அரசு.

திடீரென்று இந்தியில் பிதற்றச்சொன்னாலோ, இந்தி காதில் புகாதபடி சட்டசபையின் ஓரிடத்தில் தொடர்ந்து அமர்ந்திருக்க சொன்னாலோ எப்படி முடியும். அதற்கு பதிலாக எப்போதோ கற்ற ஆங்கிலேயமே மேல்தானே.

ஆங்கிலத்தை ஆங்கிலம் என்று விளிப்பதில் சற்றே நெருடல் எனக்கு, அதை ஆங்கிலேயம் என்று அழைப்பதிலேயே மன நிறைவு எனக்கும். ஏனெனில் அந்த மொழியை மட்டும் நாம் உபயோகத்திற்கு எடுக்கவில்லை. அதோடு ஆங்கிலேயனின் தோரணையும் பாணியும் சேர்ந்தே எடுத்து கையாள்கிறோம். அதனால்தான் அதை ஆங்கிலேயம் என்றே குறிப்பிடுகிறேன்.

இதைத்தான் அடிமை சாசனம் என்கிறேன் நான்.

ஆங்கிலம் ஒரு மொழியாக இருப்பது தவறில்லைதான். அதன் மீது வெறுப்பில்லைதான். ஆனால் அதன்வழியே இந்த சாசனமுறை மாநிலங்களின் சுயாட்சிக் கொள்கைக்களுக்கு அல்லவோ ஊறு விளைவிக்கிறது.

அவ்வப்போது மத்தியில் தீவிரப் பிரச்சினை ஏதும் இல்லாத போது எதிர்கட்சிகள் இந்த பிரச்சினையை சிறிதே கிளறிவிட்டு வாயை மூடிக் கொள்கின்றன. அவர்களிடமும் இதற்கான மாற்று முறை எதுவும் இல்லாததுதான் காரணம். ஏனெனில் ஆட்சி அமைக்கும்போது அதே எதிர்கட்சிகளின் நிர்வாகத்திற்கான கைப்பாவைகளாகத் தானே இந்த ஆளுனர்கள் இயங்குகின்றனர். அதனால்தான் சிறிது கிளறிவிட்டு பிறகு மௌனம் சாதித்து விடுகின்றனர்.

அதாவது நாம் ஆளும் உரிமை பெற்றாலும் அடிமை சாசனத்தின் தொடர்ச்சியிலேயே இன்னும் இருக்கிறோம் என்பதை உணர்த்தத்தான் இந்த படைப்பு.

நமது சாசனம் குடியரசுடன் கூடிய மக்களாட்சிக்கு வழிவகுத்தாலும் அடிமை சாசன சாயலில் இருந்து இன்னும் முழுவதுமாக மீள முடியவில்லை என்பதுதான் என் கருத்து.

இந்த அடிமை சாசனத்திற்கு சான்றாக மாநில சட்டசபை இயக்கத்தை கவனித்தால் புரியும் பல சங்கதிகள்.
ஆளுநர் உரையாற்றுவார் ஆங்கிலேயத்தில். எப்படி என்கிறீர்களா….? பாருங்களேன். ஆளுநரின் ஆங்கில உச்சரிப்பு அவருக்கே பலசமயம் புரியாது, மேலும் அந்த மாநிலத்தின் தனித்தன்மை சொற்கள், உதாரணத்திற்கு, மனோன்மணி தேசிக விநாயகம் விருது, தமிழ்த்தாத்தா உ.வே,.சா கௌரவ விருது என்பதாக (உதாரணத்திற்காக மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன் இது முற்றிலும் பொருத்தமில்லாத ஒன்றாகக் கூட இருக்கலாம்) இருப்பதன் உச்சரிப்பு ஆங்கிலேயத்தில் ஒயிலாக உச்சரிப்பதாக அதன் கழுத்தை நெறிப்பார். (எந்த விதத்திலும் நம் மாநில ஆளுனரை குறிப்பிடுவதாக சாயலாக கூட பொருள் கொள்ளவேண்டாம் ....அவர் மேதை... இதில் சிறிதளவும் சந்தேகமில்லை....) அவர் உரையை வாசித்து முடிக்கும் வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர், பேரவைத்தலைவர் உட்பட அனைவரும் மௌனம் காத்து அமர்ந்திருப்பர். அவரின் அந்த உச்சரிப்புகள் இவர்களுக்கு புரிந்ததோ புரியாததோ அதைப்பற்றி கவலை இல்லை. பிறகு பேரவைத் தலைவர் அதையே அந்த மாநில மொழியில் மொழி பெயர்த்து வாசிப்பார். அதுவும் முடியும் வரை அனைவருமே மௌனம் காத்து நேரம் கடத்தும் நிர்பந்தம். இந்த ஒரே முகம் கொண்ட இரட்டை செயல்பாடு தவிர்க்கப்படலாம்தானே..?

அதுவரை இந்த ஆளுநரும் எதையோ சாதித்து விட்ட திருப்தியில் பேரவையில் அமர்ந்து அனைவரையும் நோட்டம் விட்டு கொண்டிருப்பார். பிறகு அவருக்கு நன்றி சொல்லும் ஒரு சம்பிரதாயம்.

இங்கே அவரின் உரை ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருப்பது கண்கூடு. அதனால் மதிப்பு மிக்க பேரவையின் அனைத்து உறுப்பினர்களின் நேரமும் விரயமாவதும் கண்கூடு. இதை வெளிப்படையாக கூறினால் ஆளுநரையே தனி[ப்பட்ட முறையில் இழிவுபடுத்தி விட்டதாக பொருள்படுமோ என்ற பயத்தில் அனைத்து படித்த பேரவை உறுப்பினர்களும் மௌனம் காத்து உறைந்து போய் அமர்ந்திருப்பது இயல்புதானே. பிறகு எப்படி இந்த மக்களாட்சி செயல்முறைப் படுத்தப்படுவதாக கணக்கில் கொள்வது.

மக்களால் தேர்ந்திடுக்கப்ப்ட்ட உறுப்பினர்களையே கைப்பாவைகளாக்கும் இந்த ஆளுநரின் பதவி எப்படி மக்களாட்சிக்கு உதவுவதாக நினைப்பது.?

எனக்கு எவர் மீதும் தனிநபர் விரோதம் என்பது இல்லை. ஒரு எந்திரக் கோளாறு சரிசெய்யும் நிபுணராகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
நமது சாசனம் சொல்லும் மக்களாட்சி எனும் எந்திரத்தை, எப்படி சரி செய்வது என்பதாகவே இதை பார்க்கிறேன். .

இதற்கு மாற்றுதான் என்ன…?

இந்த கேள்வி உங்கள் மனதில் உதித்து விட்டது என்றால் நீங்கள் சிந்திக்க தொடங்கி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். பிறகு எனக்கென்ன வேலை இந்த பக்கத்தில் உங்கள் அருகில்…

நான் விடை பெறுகிறேன்….
இதை யார் நடைமுறைபடுத்துவது எனும் கேள்வியோடு…….

அதிகார அழுத்தத்துடன்
ஆளுமை கொள்ள வந்தேன்
மாநிலத்தில்.

இங்கோ
எனக்கு புரியாத மொழியில்
பேசும் மக்கள்.

எனக்கோ அவர்களிடையே
உரையாடும் நிர்பந்தம்..

தள்ளாத வயதில் உச்சரிப்பு
பிரச்சினை.

நியமித்து விட்டார்கள்
கௌரவப் பதவியில்.

காலம் தள்ள வேண்டியுள்ளது
எனது இறுதி காலம்
நெருங்கும் வரை.

நிதானமாகவே
நடமுறை படுத்துகிறேன்
மக்களாட்சியை
மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமலேயே.

இளமைத் துள்ளல் இன்றி,
ஆர்ப்பாட்டம் செய்யும் ஆராவாரக்
கட்சிகளின் சாடல்களுக்கிடையே
அடுத்த தேர்தல் வராதிருக்க…!




அடுத்த பகுதியில் சந்திப்போமா…..?

எழுதியவர் : மங்காத்தா (18-Jun-13, 4:39 pm)
பார்வை : 429

சிறந்த கட்டுரைகள்

மேலே