இந்தியத் தொன்மையின் அதிசயம் 8

எதற்காகவோ தொடங்கி, எதையோ எழுத நினைத்து எங்கோ சென்று விட்டது போன்ற ஒரு பறக்கும் உணர்வு வருகிறது பிந்தைய பகுதிகளை ஒரு மீள்பார்வை செய்யும்போது.....

எழுத்தில் பக்குவம் போதாததே இதற்கு காரணம். நான் எழுதி வியந்து அதை பகிர வந்த சங்கதியே காலக்கணக்கை இவர்கள் நடைமுறை படுத்தி அதன் பலனை துல்லியமாக அனுபவித்து வந்த மர்மங்களின் சூட்டசுமப் புள்ளிகள்தான்.

போருக்கு செல்லவேண்டுமா நேரம் கணி. பிறப்பு புதியதா, நேரம் கணி. சுப காரியங்களா, நேரம் கணி. வியாபாரத்தில் புதிய தொடக்கமா, நேரம் கணி., படிப்புத் தொடக்கமா, நேரம் கணி.

என் சுற்றத்தாருடன் பல நேரம் தர்க்கம் செய்வது வழக்கம். (வாழ்க்கை ஓடுவதே இந்த தர்க்கத்தில்தானே). தர்க்கம் என்றாலே கேள்விகளும் பதில்களும்தானே. அதில் சிறந்த கேள்வி கேட்பவர் பெருமிதம் கொள்வதும் அதற்கான சிறந்த பதில் சொல்லி கேள்வி கேட்பவர் வாயை அடைத்து விடுபவர் சாதனை உணர்வு கொள்வதும் ஆண்டாண்டு காலமாக நிகழ்வதுதானே.

அப்படி ஒரு தர்க்கத்தை உங்களுடன் இங்கே பகிர நினைக்கிறேன்.

வாழ்வில் எது முக்கியம். இலக்கு (காரியம்) முக்கியமா
அல்லது
வீர்யம் (அந்த இலக்கை அடைய உந்து சக்தி) முக்கியமா.
அதாவது காரியமா வீர்யமா எது முக்கியம் எதையும் சாதிக்குபோது?

தர்க்கத்தில் வெற்றி என்பது சொல்லும், சொல்லிய கருத்து, நீட்சியோ எதிர்ப்போ இன்றி ஆமோதிக்கப்படுவதில்தான் இருக்கிறது.

என்னுடன் வாதத்தில் ஈடுபட்டவர் எப்போதுமே நேரடியாக பதில் தராமல் தன் விருப்பத்திற்கேற்ப தர்க்கத்திற்கு பாதை போடுவதிலே அதிக ஆர்வம் காட்டுபவர்.

அவரோ, இந்த காரியமும் வீர்யமும் முதல் கட்ட நடவடிக்கைகள்தான். இதன் நோக்கம் எல்லாம் மன திருப்திக்கானவையே எனவே காரியம் வீர்யம் இவற்றால் வரும் அனுபவ உணர்வுகளே முக்கியம் என்று முடிக்க எத்தனித்தார்.

தர்க்கம்தானே, காரண கோணங்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாமே. திடீரென்று அங்கிருந்த மிகவும் சுட்டித்தனம் செய்யும் ஒரு சிறுமி, எங்கள் தர்க்கத்தில் ஊடுருவல் செய்து,

(வாயாடி இல்லை அது அவச்சொல்…. சுட்டித்தனம் குழந்தைகளின் வளர்வதற்கான உரிமை)

இந்த காரியம் வீர்யம் அனுபவம் எல்லாம் எதற்கு? எல்லாமே எதிர்காலத்தில் வரும் என் போன்றவர்களின் நலவாழ்வு குறிந்த சிந்தனைதானே?. அதனால் இந்த காரியம், வீரியம், அனுபவம் எல்லாவற்றையும் விட இவற்றால் வரும் எதிர்காலத்தில் வரும் சந்ததியினரின் நல்வாழ்வே மிக முக்கியம்.

ஆனால் தொடக்கம் முதல் இறுதி வரை எதையும் வரிசைப்படுத்துவது அவசியம் என்பதாலும், இங்கு தர்க்கத்திற்கு எடுத்துக்கொண்ட சங்கதிகளை மட்டுமே வரிசைப்படுத்துதல் அவசியம் என்பதாலும்,

இந்த சங்கதிகளின் தொடக்கமான காரியம் முதன்மையாகவும்,
பிறகு வீரியம் அடுத்தபடியாகவும்,
வரும் அநுபவ உணர்வுகள் அதன் பிறகும் இறுதியில் இவைகளால் எதிர்கால நல்வாழ்வும் வரிசைப்படுத்தப்பட்டு
எதிர்கால நல்வாழ்வு மிக முக்கியம் என்று புரிகிறது என்று முடிவுரை எழுதினாள்.

எல்லோருமே வாயடைத்து போனோம்.

மலைக்கச் செய்ய இதிலும் பல சங்கதிகள் உண்டு.

இதில் இவளது திறமை கண்டு வியப்பதா, தர்க்க கோட்பாடுகளை எளிதாக கையாளும் முறையை பளிச்சென்று செய்து காட்டிய அபாரத்தை எண்ணி வியப்பதா, அதில் அவள் முன் வைத்த ஒழுங்குமுறை ஒயிலை கண்டு மலைப்பதா இல்லை அவள் சொன்ன தீர்ப்பின் முடிவை எடுத்துக் கொண்டு சலனமின்றி நகர்வதா?

நான் செய்தது இதில் கடைசி வேலையைத்தான்.

அவளின் தாயோ மிகவும் லேசான மனதுடன் அருகில் வந்து ஒரு விளக்கவுரை தந்தாள்.

நீங்கள் எல்லோரும் உங்கள் சங்கதியை விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். அவளை யாருமே கண்டுகொள்ளவே இல்லை. அதையே பளிச்சென்று உள்புகுந்து உடைத்து அதி உயர் சிந்தனையாகவும் குழந்தைத்தனம் மாறாமலும் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் என்று கூறி புன்சிரிப்பு உதிர்த்தாள்.

இது என் மலைப்பின் உச்சக்கட்டமாகவே இருந்தது.

ஆம்.

என்றுமே எதிர்காலம்தான் முக்கியம். நம் முன்னோர்கள் எதிர்கால சந்ததியினினரின் நல்வாழ்வு குறித்தே இத்தனை கோட்பாடுகளையும் அனுபவ ரீதியாக வளர்த்து, தர்க்க ரீதியாக அவற்றிற்கு மெருகேற்றி ஆலமரமென தழைக்க வைத்து நம்மிடம் வழங்கிவிட்டு சென்று இருக்கிறார்கள்.

இவர்களின் இந்த கணிப்பு எல்லாமே எதிர்காலம் குறித்ததுதானே. அதுவும் சத்ய யுகத்தில் இருந்து கொண்டு கலியுகத்தை கணித்து இருக்கிறார்களே. அதில் எங்குமே இளக்காரம் காட்டவில்லை. எதிர்வரும் நிலவரத்தை கணித்து சொல்லியிருக்கிறார்கள் நிலைமை இவ்வாறு இருக்குமென....

எதிர்காலத்தை நினைத்து பெருமூச்சு விடவில்லையே.

ஆனால் நம்மாலோ, இந்த கலியுகத்தில் இருந்து கொண்டு நமது எதிர்காலத்தையும் கணிக்க முடியவில்லை, முந்திய யுகங்களையும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. முந்திய யுக சங்கதிகளை எல்லாம் பொது இடங்களில் நின்று கொண்டு, நமக்கு தெரிந்த மொழியில், நமக்கு வந்த புரிதலில், துகிலுரித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

மரம் வெட்டுவதை அடியோடு வெறுத்து எதிர்க்கும் பல உயர்குடி படைப்பாளிகள் நம்மைச் சுற்றிலும் நான் காண்கிறேன். மரம் வெட்டுப்படுவதை கதையாக எழுதி மனக்குமுறலை கொட்டி பக்கம் நிரப்பும் சில அதி உன்னத உணர்வாளர்களும் நம்முடனேதான் நம்மை சுற்றி இங்கே உலாவருகிறார்கள். அவர்ளுக்கு இந்த தொன்மையின் அதிசயங்களான ஆலமரம் வெட்டப்பட்டு கொண்டிருப்பது கண்ணுக்கு புலப்படவில்லையா அல்லது ஆலமரம் வெட்டப்படுவதை எதிர்த்து எழுதுவது என்பது பிழைப்புக்காக பக்கம் நிரப்பும் ஒரு செயலா என்பது தெரியவில்லை.

காலத்தை நம் முன்னோர்கள் கணித்த விதம், அதை நடமுறைப் படுத்திய விதம் அதன் பலன்களை அனுபவித்த விதம். அதை அவர்களின் எதிர்கால சந்ததியினரான நமக்கு அவர்கள் விட்டு சென்ற விதம் எல்லாமே பெருமிதம் சேர்ப்பதாகவே இருக்கிறது.

இந்த தொன்மையின் அதிசயத்தை லேசாக எட்டிப்பார்த்த கைநாட்டு எனக்கே இத்தனை சுவாரசியங்கள் கிடைக்கும்போது, அதை உபயோகித்து, பலன்களை அனுபவித்து மகிழும் நபர்களுக்கு இன்ப லோகம் (சுவர்க்கம்) இந்த பூமிதானே.

இதன் அருமை புரியாத தரம் தெரியாத என்போன்ற கைநாட்டுக்கு இது அபத்தம்தானே. திண்ணைக்கதை தானே. ஏனெனில், மேல்நாட்டு பாணி உடை அணிந்து, ஆங்கிலேயத்தில்
(ஆங்கிலம் என்பது மொழி, ஆங்கிலேயம் என்பது அந்த மொழியுடன் கூடிய நடை உடை பாவனைகள்,…… என் வசதிக்கான எனது சொந்த கண்டுபிடிப்பு)
உடல் வாசனைத் தெளிப்பான் அடித்துக் கொண்டு, குளிரூட்டிய அறையில் இவைகள் வழங்கப்படவில்லையே. என் வீட்டுத் திண்ணையில், தலைமுடி நரைத்த, பேச்சு குழறும், தள்ளாடும், அழுத்தமாக்க் கூட பேச முடியாத பெரிசுகள்தானே, வியர்வையில் அமர்ந்து, கொட்டை வடிநீர் அருந்தி இவற்றை சிலாகித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த பகுதியை எனது மன உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் பகிர மட்டுமே உபயோகித்துக் கொண்டேன். அடுத்த பகுதியில் இன்னும் விரிவாக. மலைப்பான சங்கதிகளுடன் சந்திக்கலாம்….

அதில் நேரத்தை இவர்கள் பகுத்து, நற்பயன் அடையும் சூத்திரங்களை கொண்டு வாழ்ந்திருப்பது கண்டு மலைக்கலாம்.

எனது இந்த தொடரின் நோக்கம் இதில் உள்ள சங்கதிகளை கண்டு மலைத்து, வியந்து பழம்பெருமை பேசி நேரத்தை விரயமாக்குவது அல்ல.
அவற்றில் இன்னும் கூட உயிரூட்டம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதில் இருந்து நமக்கு தேவையான சங்கதிகளை எடுத்து உபயோகித்து பலன் அடைய ஏதாவது வழிகள் உள்ளனவா என்று தேடுவதுதான் என் நோக்கம். மனித குல நல்வாழ்வுக்காகத்தானே இத்தனை கோட்பாடுகளும் அதன் சூட்சுமங்களும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தழைத்து வந்திருக்கின்றனவே நமது பல கோட்பாடுகள். இன்னும் ஆங்காங்கே, சிதிலமாக அன்றி, உயிரூட்டத்துடனே காணப்படுகின்றனவே. பிறகேன் அங்கு சென்று இளைப்பாறி, உணர்வுகளில் தெம்பு ஏற்றிக் கொள்ளக்கூடாது?

நமது சித்தர்கள் பலவற்றை எழுதி வைக்காமல் போனதால்தான் அவை அழிந்து போயின என்று கூப்பாடு போடும் நாம், எழுதி வைத்து வாழ்ந்து காட்டிய சங்கதிகளை என்ன செய்கிறோம்? அடிமை சாசன எண்ணங்களில் ஊறிப்போய், நமது தொன்மையின் அதிசயங்களை அவலங்களாக்கிக் கொண்டிருக்கிறோமே.! புரியாமல் போன சங்கதிகள் எல்லாமே அபத்தங்களாகி ஒதுக்கப்படுவதோடு மட்டுமல்லாது அவலங்களுக்கும் உட்படுகின்றனவே!

எனக்கு தெரியாத, புரியாத மொழிகள் உலகில் எத்தனையோ உண்டு. அவற்றை எல்லாமே உளறல்களாக கருத வேண்டும் என்பது எனது நிர்பந்தம் எனில், எனது சிந்தனை பித்தம் ஏறியது என்றுதானே பொருள்?
நாம் பித்தர்களாக ஆக வேண்டாம். அறிந்தோ அறியாமலோ சித்தர்களாவோமே இந்த தொன்மையின் அதிசய ரகசியங்களை உணர்ந்து, உபயோகித்து…

இல்லை… இல்லை…. தூக்கணாங்குருவி கூடு கட்டட்டும்…. மரத்தில் ஏறி அதை குலைக்கும், பிய்த்து எறியும் குரங்காகவே இருக்க நான் விருப்பப் படுகிறேன். அப்போதுதான் இந்த தூக்கணாங்குருவிக்கு நான் (குரங்கு) என்றால் ஒரு பயம் எப்போதும் இருக்கும்..

நான் குரங்காக இருந்தால்தான் இந்த உலகம் என்னை மனிதனாக மதித்து பயந்து ஒதுங்கும்…..

பகுத்தறிவு பேசலாம் வாருங்கள் மேடை போட்டு......


தொடரலாம்

எழுதியவர் : மங்காத்தா (19-Jun-13, 2:39 pm)
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே