கள்வனின் காதலி .....................!
உன் மௌனத்தில்
மரணித்த பூக்களுக்கு
வாசம் தேடுகிறேன் பிழையாய்
ஏதோ கேள்விகள் எங்கோ விடைகள்
இருந்தும் தொலையாதவளாய் !
என் பவளமல்லிகளோ
விடியக் காத்திருக்கும் வேளையில்
விழிவிடு தூதுகளின் விண்ணப்பம்
அறியாப் பிடிவாதம் நீ
அத்துமீறும் ஆனந்த நினைவில் !
முல்லைக்கொடிகள் திருகும்
என் நாணமோர் துறவி
நளினமோ நடைபயிலும் மழலை
துறந்த தூக்கங்களோ ஒற்றர்களாய்
முல்லைத்திணை நோக்கிய புறப்பாடு !
செங்காந்தள் சூடிய உள்ளங்கையோ
உன் வாய்மொழிகள் ஊடுருவிய
தென்றல் தீண்டச் சிவக்கும்
ஒரு வேடிக்கையாய் நானாகையில்
தேன் தூறல்கள் !
என் வாடாமல்லிக் கனவுகள்
குளித்த மஞ்சள் துளிகளோ
உதிராது பார்த்திருக்கப் பறிக்கும்
ஓர் கதம்ப மாலையாய் – உன்
பாவனைகள் காட்டும் அகவிளைவு !
பனிக்கால சிந்தனையில்
அவிழும் பன்னீர்ப்பூக்களோ
காணாக் கழுவாயாக
அதனுள் உறைந்த நறுமணமோ
இதயம் மீட்டும் கருவியாகும் !
சங்குப் பூக்கொடிகள் தலைகவிழ
நீலம் பூத்த தேடல்கள்
தனை மறந்து ஐயமுறப் படரும்
வெட்கை தவிர்க்கும் வேட்கையில்
மருந்துண்ணக் காத்திருக்கும் !
அந்திகளைக் களவாடும்
பெண்ணின் உலர் ஏக்கங்கள்
வாசல் ஒட்டிக் குடைசாய
ஆறுதல் பூசிய அந்திமல்லிகளோ
சுகந்தம் பருகி மொட்டுவிரியும் !
பெரும் பொழுதுகள் கழித்து
குறுங்கவிகள் குழைவில்
மல்லிகைப் பூக்கள் குடியேற
அலர்ந்த தாகங்களோ
கோகிலமாய்க் கூவிக் குனியும் !
கார்முகில் கூட்டத்தில்
ஒளிந்துள்ள வெண் துளிகளாய்
வந்துன் காதலைத் தூறிவிடு
என் மரமல்லிகள் தோரணம் கட்ட
இருமனங்கள் மணமாகட்டும் !
இரு பன்னிரண்டுகள் மடிந்த
ஓர் குறிஞ்சிப்பூ
மூன்றாம் பிறவியில்
விரைந்தோடும் சக்கரகால வீதியில்
உன் கரம்பிடிக்க சிரஞ்சீவியாகும் !
அல்லிப் பூக்கள் நனையும்
நிலவொளிக் கங்கைகளில்
இமைகள் சூழ் கற்பனைகள் கிளறி
மனவோலை திருடிய கள்வனே
காதலுக்கோர் காண்டம் இயற்று !