''ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் ...???

''ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு நடிகர் நாகேஷ் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு?'

''தெற்கு ரயில்வேயில் ஒரு குமாஸ்தா அந்த இளைஞர். சினிமாவில் நடிக்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால், பிரமாதப்படுத்திவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். அந்தச் சமயம், ஒரு நாடகத்தில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி நடிக்க சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது.

வயிற்று வலியால் துடிக்கும் ஒரு நோயாளியாக நடிக்க வேண்டும். நாடகத்தில் அந்தக் காட்சியும் வந்தது. மேடையில் காலடி எடுத்தவைத்த முதல் கணத்திலேயே 'ஐயையோ டாக்டர்... வலிக்குதே... வயிறு வலிக்குதே’ என்று அந்த இளைஞர் துடித்த துடிப்பு ஒட்டுமொத்த அரங்கத்தையும் குபுக்கெனச் சிரிக்கவைத்தது.

அப்போது மேடையில் இருந்த வேறு எவர் மீதும் கவனத்தைப் பதியவிடாமல், 'வயிற்று வலிக்காரனை’ மட்டுமே ரசிக்கவைத்தார் அந்த இளைஞர். இத்தனைக் கும் கதைப் போக்கில் எந்த மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம் இல்லை அது.

ஆனால், நாடகம் முடிந்ததும் அந்த 'வயிற்று வலிக்காரன்’ மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தான். நாடகத்தை ரசித்த எம்.ஜி.ஆர். கையால் 'சிறந்த நடிகருக்கான’ முதல் பரிசையும் வென்றான் அவன்.

கிடைத்த சின்ன சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட அந்த இளைஞன்தான்.... 'நாகேஷ்’ என்றழைக்கப்பட்ட நாகேஸ்வரன்!

- ஹெச்.பாஷா, சென்னை-106.

(நானே கேள்வி... நானே பதில்)
(ஆனந்த விகடன் - 24/10/2012)

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 6:00 pm)
பார்வை : 119

மேலே