மானை கொன்றது யார்? - சிறுவர் கதை

காட்டை அடுத்து மலைக்கோட்டை என்ற சிற்றூர் இருந்தது. அங்கே ஒரு உழவன் வாழ்ந்து வந்தான். அவன் மான் ஒன்றை அன்பாக வளர்த்து வந்தான். அந்த மானும், அவனிடம் அன்பாக இருந்தது. வேலை முடிந்து அவன் வீட்டிற்கு வருவான். அவனை வரவேற்க, மான் துள்ளிக் குதித்தபடியே ஓடி வரும். அவனைச் சுற்றி, சுற்றி வந்து தன் மகிழ்ச்சியைக் காட்டும்.

அவனும் அதைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுவான். அன்றும் வழக்கம் போல, வீட்டிற்கு வந்தான் அவன். அவனை வரவேற்கும் மான் வராததைக் கண்டான். பரபரப்புடன் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றான். அங்கும் மான் இல்லா ததைக் கண்டான். மானைத் தேடி ஊர் முழுவதும் அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை.

கோபத்தால் துடித்தான் அவன்.

"இங்கே உள்ள எவனோதான் என் மானைக் கொன்று இருக்க வேண்டும். அவன் எங்கே இருந்தாலும் கண்டு பிடித்துக் கொல்ல வேண்டும். அப்போதுதான் என் உள்ளம் ஆறும்' என்று நினைத்தான்.

அவன் செய்த முயற்சி எதுவும் பயன் தரவில்லை. மானைக் கொன்றது யார்? என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அவன் கோபம் அதிகம் ஆனது.

மானைக் கொன்றவனைக் கண்டுபிடிக்க அவனுக்கு நல்லவழி தோன்றியது. கடவுளை நினைத்து கடுமையான தவம் செய்தான்.

அவன் முன் கடவுள் தோன்றினார்.

""கடவுளே! என் மானைக் கொன்றவனை இங்கே கொண்டு வந்து நிறுத்துங்கள். நான் அவனைக் கொன்று பழி தீர்க்க வேண்டும்,'' என்று கோபத்துடன் சொன்னான் அவன்.

""அன்பனே! கோபம் கொடியது. யார் கோபம் கொள்கிறாரோ... அவரை அந்தக் கோபமே அழித்து விடும். கோபத்தை விடு. உன் மானை வேண்டுமானாலும் தருகிறேன். வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்,'' என்றார் அவர்.

கோபம் சிறிதும் அடங்காத அவன், ""எனக்கு மானும் வேண்டாம், வரமும் வேண்டாம். மானைக் கொன்றவன்தான் வேண்டும்,'' என்றான்.

""அப்படியே ஆகட்டும்,'' என்ற அவர் அங்கிருந்து மறைந்தார்.

பயங்கரமாக கர்ஜித்தபடி சிங்கம் ஒன்று அவன் முன் தோன்றியது.

""ஐயோ! என் மானைக் கொன்றது இந்தச் சிங்கமா? கோபத்தால், இப்படி ஒரு வரம் கேட்டு விட்டேனே. என்ன செய்வேன்?'' என்று அலறினான் அவன்.

அதை பொருட்படுத்தாத சிங்கம், அவன் மேல் பாய்ந்து அவனைக் கொன்று தின்றது.

சிறுவர் மலர்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (1-Jul-13, 4:43 pm)
பார்வை : 1485

மேலே