சிறு துளிகள் பெருவெள்ளம்

ஒரு ஊரில் நலங்கிள்ளி வளவன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய அங்க தேசம் மிக வளமான நாடு. மிகப் பெரிய நாடாக இல்லை என்றாலும் அவன் நாடு யாருக்கும் அடி பணியாமல் இருந்தது. மன்னனுக்கோ போதும் என்ற மனம்; தயாள குணம். தன்னுடைய அண்டை நாட்டு மன்னர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தான். அவனுடைய நாட்டு மக்களும் மிக மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில வருடங்களில் மன்னனுக்கு மிக வயது ஆனதால் தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டி அழகு பார்த்தான். பின்னர் அக்கால மரபின்படி வடக்கிருந்து உயிர் துறந்தான்.

மகன் சாலிவாகனன் மிக திறமையாக ஆட்சி புரிந்தான். அவன் தன்னுடைய தந்தையின் நல்லாட்சியை தொடர்ந்தான். சில வருடங்களுக்கு பிறகு அண்டை நாட்டுக் கொடுங்கோல மன்னன் பாணபத்திரன் அங்க தேசத்தை அடிமைப் படுத்த ஆசை கொண்டான். தூதுவன் ஒருவனை அனுப்பி கப்பம் கேட்டான். மானமுள்ள சாலிவாகனன் தூதுவனை மறுத்து திருப்பி அனுப்பினான். பாணபத்ரனுக்கு பாடம் புகட்ட நினைத்தான். அடிமைகளாக இருக்கும் அவனது நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு அமைக்க முடிவு செய்தான்.

அண்டை நாடு இரத்னபுரி மிகப்பெரிய நாடு. அதனை வெல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவனுக்கு தெரியும். ஆதலால் அவனால் முடிந்த அளவு மிகப்பெரும் படை ஒன்றைத் திரட்டினான். பாணபத்ரனை நேரில் சென்று வீழ்த்த அவனுடைய தலைநகரமான சங்கபுரியை படை எடுத்தான். சங்கபுரி தலைநகர் ஆயிற்றே. சாலிவாகனன் மிகத் திறமையாக போர் புரிந்தாலும் முறியடிக்கப்பட்டான். சங்கபுரிக்கு சற்று தொலைவில் இருக்கும் கந்தர்வக் காட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டான்.

கந்தர்வக் காட்டுக்குள் உள்ள ஒரு குகைக்குள் மறைந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. வேட்டையாட சென்றும் ஒரு விலங்கும் அகப்படவில்லை. அகப்படுவது போல தென்பட்ட ஒரு மானைத் தேடி வெகு தூரம் சென்றான். வழி தெரியாமல் திகைத்தான். தெய்வாதீனமாக தூரத்தில் ஒரு குடிசையைக் கண்டான். நேராக அங்கு சென்று வாசற்கதவைத் தட்டினான். ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தான் ஒரு வேடன் என்றும் வழி தெரியாமல் இங்கு சேர்த்ததாகவும் தெரிவித்தான். மேலும், மிகவும் பசிப்பதாகவும் ஏதேனும் உண்ண இருக்கிறதா என்றும் இரந்தான்.

இளகிய மனம்கொண்ட கிழவி அவனை உள்ளே அழைத்தாள். குடிசையில் நடுவில் அமரச் செய்தாள். பசியோடு இருப்பவன் அண்டை நாட்டு மன்னன் என்பது அவளுக்கு தெரியாது இல்லையா? அதனால் அவனுக்கு தன்னாலான கூழும் பச்சை வெங்காயமும் கொடுத்தாள்.

மிகுந்த பசியோடு இருந்த மன்னன் நேராக கூழின் நடுவில் கையை வைத்தான். கையை சுட்டுக் கொண்டான். சிரித்த கிழவி, மகனே, எடுத்தவுடன் முதலிலேயே நடுவில் சென்றால் சாலிவாகனன் போல கையை சுட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஓரமாக இருப்பதை முதலில் முடி. நடுவில் இருப்பதை எளிதாக அடையலாம் என்றாள்.

மன்னனுக்கு நன்றாக மண்டையில் அடித்தது போல் உறைத்தது. முதலில் சங்கபுரியை வெல்ல நினைத்ததால் தானே தன்னால் வெற்றி பெற முடியவில்லை. கிழவி கொடுத்த உணவினை அவள் கூறியது போல் உண்டு பசியாறினான். அவளிடம் தன்னுடைய குகைக்கு வழி கேட்டுக் கொண்டான். கிழவிக்கு மிகுந்த நன்றி தெரிவித்து விட்டு குகைக்குத் திரும்பினான்.

குகையில் நன்றாக யோசித்தான். சில காலம் பொறுத்திருந்து பின் மீண்டும் போர் புரிவதே உசிதம் என்றெண்ணினான். அதற்காக தன்னிடம் விசுவாசமாக இருக்கும் சில போர் வீரர்களைத் திரட்டினான். அவர்களுடன் மிகச் செம்மையாகப் போர் பயிற்சி எடுத்தான். அவர்கள் உணவுக்காக வேட்டை ஆடிக் கொண்டார்கள்.
சில மாதங்களுக்குப் பின் தன்னுடைய நாட்டுக்குச் சென்று மேலும் தன்னுடைய வீரர்களை ஒன்று கூட்டினான். மாபெரும் சேனையை திரட்டினான். அவர்களுக்குப் போர் பயிற்சியும் கொடுத்தான்.

தக்க சமயம் பார்த்து இரத்னபுரியின் எல்லையில் இருக்கும் சண்டிதேசத்தை முதலில் முற்றுகை இட்டான். சண்டிதேசம் சிறிய கிராமம் ஆதலால் எளிதில் வெற்றி கொண்டான். அவ்வாறே ஒவ்வொன்றாக பாணபத்ரனின் சிறிய தேசங்களை அவனின் கட்டுப்பாட்டில் இருந்து பறித்தான்.

இறுதியில் சங்கபுரிக்கு சென்று பாணபத்ரனுடன் போரிட்டான். பத்து நாட்கள் நடந்த போரில் முடிவில் சாலிவாகனன் பாணபத்ரனை வென்றான். அவனது நாட்டு மக்களை விடுவித்து மக்களாட்சி மலரச் செய்தான். பாணபத்ரனை விலங்கிட்டு அங்கதேசத்து பாதாள சிறையில் தள்ளினான். கிழவி சொன்ன அந்த ஒரு அறிவுரை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று மனதிற்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (4-Jul-13, 10:43 pm)
பார்வை : 823

மேலே