எல்லாம் நன்மைக்கே

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்; மிகுந்த முன்கொபக்காரன். அவனுடைய மந்திரி மகா புத்திமான்; மிகுந்த சமயோசிதம் உடையவர். அதனாலேயே எப்போதும் அவரைத் தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்வான் ராஜா. அந்த மந்திரிக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. அவரைப் பொறுத்தவரை நம் வாழ்வில் நடக்கும் எல்லாமே நம் நன்மைக்காகவே என்று எடுத்துக் கொள்வார். ஆனால் ராஜா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். அவனைப் பொறுத்தவரை நன்மையையும் தீமையும் நடக்கும் நிகழ்வைப் பொருத்தது. எல்லாமே நன்மையில் எப்போதுமே முடியாது என்பது அவன் கருத்து.

ஒரு நாள் அரண்மனைத் தோட்டத்தில் இருவரும் உலா வந்து கொண்டிருந்தனர். சில அரசியல் நிகழ்வுகளையும் நாட்டு மக்களின் நலத்திட்டங்களையும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது உண்பதற்காக ஒரு மாம்பழத்தை தோட்டத்தின் மரத்தில் இருந்து பறிக்கச் செய்தான் ராஜா. பின் ஒரு கத்தியைக் கொண்டு அமைச்சருக்கும் அப்பழத்தை வெட்டிக் கொடுத்தான்.

அவ்வாறு வெட்டும் போது அவன் தன் கைவிரலை வெட்டிக் கொண்டான். ரத்தம் கொட்டியது. அமைச்சர் உடனே ஒரு துணியை வைத்து அவர் காயத்திற்கு மேல் கட்டி ரத்தபோக்கை கட்டுப்படுத்தினார். சமாதானம் செய்வதாக எண்ணி அவர் "மன்னா! எல்லாம் நன்மைக்கே! வருந்தாதீர்கள். இதில் கூட ஏதேனும் நன்மை வரும் பாருங்கள்" என்றார். பக்கத்தில் இருந்த ஏவலாளி தனது சிரிப்பை மறைத்துக் கொண்டான். அவமானத்தால் கோபப்பட்ட ராஜா, உடனே மந்திரியை சிறையில் அடைக்கச் சொல்லி ஆணையிட்டு தன் அந்தப்புரத்திற்குள் சென்றான்.

சிறிது நேரத்திற்குப் பின் தனது மெய்க்காவலர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். ஒரு வாரம் ஆகிற்று. அப்போது மகாராணி சிறைச்சாலைக்கு வந்து மந்திரியை சந்தித்தார். ராணி மந்திரியிடம் "ஒரு வாரமாக வேட்டைக்குச் சென்ற ராஜா திரும்பவில்லை. அவருடைய மெயக்காவலர்களுள் ஒருவன் நேற்று வந்தான். ராஜாவையும் மற்ற வீரர்களையும் எங்கே என்றே தெரியவில்லை என்று தெரிவித்தான். ஒரு வாரமாக அவர்களைத் தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் யாரிடமோ சிக்கி இருக்கவேண்டும். நீங்கள் தான் ஒரு சேனையைத் திரட்டிக் கொண்டு இந்நாட்டின் சக்கரவர்த்தியை மீட்க வேண்டும். ராஜா உங்களை சிறைப்படுத்தியதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். இந்நாட்டுக்காக நீங்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றாள் ராணி.

மந்திரி மகாராணியை சமாதானப் படுத்தினார். ஒரு சிறு சேனையை திரட்டிக் கொண்டார். திரும்பிய அந்தக் காவலாளியையும் அழைத்துக் கொண்டு ராஜா சென்ற பாதையில் போனார். போன சில நேரத்திலேயே ராஜா எதிரே தென்பட்டான். உடனே ராஜாவிடம் சென்றார் மந்திரி. மந்திரியைப் பார்த்த ராஜா மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். முன்கொபத்தினால் சிறைப்படுத்தியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். அனைவரும் திரும்ப அரண்மனைக்கே வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் காலை ராஜா மந்திரியை வரவழைத்தான். மந்திரியிடம் ராஜா "மந்திரி. முதலில் என்னைக் காப்பதற்காக வந்ததற்கு நன்றி. நீங்கள் தவறாக எண்ணவில்லையென்றால் என்னுடைய சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும். நீங்கள் எப்போதும் எல்லாம் நன்மைக்கே என்று கூறுவீர்கள். தற்போது நடந்த நிகழ்வில் எனக்கு என்ன நல்லது இருக்க முடியும்?" என்றான். மந்திரி ராஜாவிடம் "அரசே! உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதற்கு நான் தக்க பதில் கூற கடமைப் பட்டிருக்கிறேன். அதற்கு முன், நீங்கள் ஒரு வாரமாக எங்கே இருந்தீர்கள் என்று கூறுமாறு கேட்டு கொள்கிறேன்" என்றார்.

ராஜா சொன்னான் "என்னை ஒரு திருட்டுக் கூட்டம் சிறைப் பிடித்துக் கொண்டார்கள். என்னை அவர்கள் வழிபடும் காளியிடம் பலியிட நல்ல நாள் பார்த்தார்கள். நேற்று அமாவாசை. ஆதலால் என்னை நேற்று பலியிட முடிவு செய்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் கையில் ரத்தகாயம் இருந்ததால் அவர்களால் என்னைப் பலியிட முடியவில்லை. அதனால் அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், நானும் நம் காவளிகளும் அவர்களை ஏமாற்றி தப்பினோம். வழி தெரியாமல் வந்த எங்களை நீங்கள் எதிர் கொண்டு அழைத்துக் கொண்டீர்கள். இது தான் நடந்தது.".

மந்திரி சொன்னார் "ராஜா! அன்று உங்களுக்கு மாம்பழம் வெட்டும் போது அடி பட்டதே, அது உங்களுக்கு நன்மையாக முடிந்தது. இந்த அனுபவம் உங்களுக்கும் எல்லாம் நன்மைக்கே என்ற உண்மையை விளக்கியது." ராஜாவோ "அது சரி மந்திரியாரே. இதில் உங்களுக்கு என்ன நன்மை?" என்றான். மந்திரியோ "நீங்கள் என்னை சிறையில் அடைத்ததால்தானே நான் உங்களுடன் வரவில்லை. நான் வந்து இருந்தால் என்னை பலி கொடுத்திருப்பார்கள் இல்லையா? மேலும் நான் இங்கே இருந்ததால்தானே உங்களைக் காப்பாற்ற வர முடிந்தது." என்று ராஜாவுக்கு விளக்கினார்.

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (6-Jul-13, 6:23 am)
பார்வை : 1128

மேலே