அரசாளப்பிறந்தவள்!

தாலாட்டு!

ஆராரோ ஆரிரரோ!
அன்னக்கிளி கண்ணுறங்கு!
ஊராரும் தூங்கிவிட்டார்
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ!
உற்றதென்ன கண்மணியே.!

கள்ளிப்பால் ஊட்டுவேனோ!
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென்று
பிஞ்சுக்கொடி கலங்காதே!
கண்ணாலச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் மயங்காதே!
கல்விகற்று உயர்ந்துவிட்டால்
கால்தொழுவார் கண்ணுறங்கு!

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்றுவிட்டார்..
பெண்ணடிமை ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.!

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடியல் வரும் கண்ணுறங்கு!

சூலம் குத்தி ஆடுதம்மா
சூரத்தமிழ் கண்ணுறங்கு!
காலம் வென்று தேடுதம்மா
கரும்புலியே கண்ணுறங்கு!
பாலம் ஒன்றும் போடுதம்மா
ஈழம் கூடக் கண்ணுறங்கு!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (8-Jul-13, 7:53 am)
பார்வை : 114

மேலே