தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் தெலுங்கர்கள் ஆர்ப்பாட்டம்...!

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் 'டெசோ' ஆர்ப்பாட்டம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் ஆர்ப்பாட்டம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய கருணாநிதி, இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரத்திற்காக அல்ல; இது ஒரு கட்சியினுடைய குறிப்பிட்ட கொள்கை அல்ல. இது தமிழர்களுடைய குரலை எதிரொலிக்கின்ற நிகழ்ச்சி. “டெசோ” இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை - குறிப்பாக நான்கு தீர்மானங்களை - செயல் வடிவம் கொடுக்க தமிழர்களுக்கு நினைவூட்டுவதற்காக நடைபெறுகின்ற நிகழ்ச்சி தான் இந்த ஆர்ப்பாட்டமாகும்.
“டெசோ” கூட்டத்தில் கழகத்தின் சார்பில் நானும், திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் வீரமணியும், விடுதலை சிறுத்தைகள் சார்பாக தம்பி திருமாவளவனும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர்.சுப. வீரபாண்டியனும், டெசோ உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும் - இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வற்புறுத்தியும் - தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க உடனடியாக வெறும் பேச்சு இல்லாமல், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும் - இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் தொடர் நிகழ்ச்சியாக ஆகி விட்டதைக் கண்டித்தும், அதைத் தடுக்க வேண்டுமென்பதை இந்திய அரசுக்கு எடுத்துக்காட்டியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மொத்த வடிவம் தான் - அதைச் செயல்படுத்துவதற்கான அடையாளம் தான் - அந்த அறைகூவல் தான் - இந்த எழுச்சி மிக்க ஆர்ப்பாட்டம் - தமிழர் பெருந்திரள் என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இலங்கைத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனை தான், இந்த அமைப்பு உருவாகவே காரணம். அந்தச் சிந்தனைக்கு இடம் தராமல் தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிந்து தமிழர் படை முன்னேறும், இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் - அதுவும் தவறினால் என்றோ ஒருநாள் திராவிடர்கள், தமிழர்கள், இலங்கையிலே வாடுவோர், இலங்கையிலே சீரழிவோர் இவர்கள் எல்லாம் புத்துயிர் பெற்றுக் கிளம்ப, காலம் நிச்சயமாக உருவாகும்.
( அதாவது இலங்கைத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று மட்டும்....கண்டிப்பாக என்றேனும் ஒரு நாளும் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அது திராவிடர்கள் தமிழர்கள் இங்கு அதாவது தமிழ் நாட்டில் இருக்கிறார்களே அதுபோல இருக்க வேண்டும் என்ற தனது ஆசையை எப்படி வெளிப்படுத்தியுள்ளார்...)
அப்படிப்பட்ட ஒரு காலத்திற்கு இன்றைக்கு நாம் அச்சாரம் போடுகின்ற நாள் தான் இந்த நாள் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து, குறிப்பாக இதனை நம்முடைய மத்திய அரசுக்குத் தெரிவித்து - எவ்வளவு நாட்களுக்கு மத்திய அரசு மௌனமாக இருக்கப் போகிறது? ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் சுடப் படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள் - அவர்களுடைய மீன்கள் பறிக்கப்படுகிறது - அவர்களுடைய படகுகள் நொறுக்கப்படுகின்றன - அவர்களுடைய மண்டைகள் உடைக்கப்படுகின்றன.
இதை இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? மீனவர்கள் மாத்திரமல்ல; தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு நாளைக்குத் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? ஆகவே பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை எங்களை ஆட்டிப் படைப்போர், ஆணவத்தின் காரணமாக ஒரு அரசை நடத்த முடியும் என்று எண்ணியிருப்போர், தயவு செய்து சிந்தித்துப் பார்த்து செயல் பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
( கடல் மேலாண்மை மற்றும் கடல்சார் பாதுகாப்பு என்று ஒரு சட்டத்தை இரண்டு வருடங்களுக்கு முன் கொண்டுவந்தது மன்மோகன் அரசு...அதை அப்படியே முழுதாக ஆதரித்து விட்டு அதாவது அந்த மசோதாவை நிறைவேற்ற முழு ஆதரவு வழங்கிவிட்டு இன்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்கிறார்...அதாவது அன்று நிறைவேற்றிய கடல்சார் மசோதாவை கடந்த வருடங்களில் இருந்து முழுவீச்சில் நடைமுறைப் படுத்தி வருவதின் வெளிப்பாடுதான் இந்த மீனவர்கள் விரட்டியடிப்பு மற்றும் சுட்டுக் கொல்லுதல்...)
இந்திய அரசு கேளாக்காதாக, தன்னுடைய காதுகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, வருகின்ற “காமன்வெல்த்” மாநாட்டில், நீங்கள் இலங்கைக்குச் சென்று கலந்து கொண்டால், அது திராவிடர்களை, தமிழர்களை இழிவுபடுத்துகின்ற, கேவலப்படுத்துகின்ற ஒரு செயல் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்தச் செயலுக்கு நீங்கள் ஆட்பட வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி, இந்த அறிவுரையை நீங்கள் கேட்கா விட்டால் - ஏதோ ஆபத்து ஏற்படும் என்று நான் அவர்களை அச்சுறுத்த விரும்பவில்லை – எதிர்காலத் தமிழ் இனம் உங்களைச் சபிக்கும் என்பதை மாத்திரம் உங்களுக்குக் கோடிட்டுக் காட்டி - அந்த நிலைக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார் கருணாநிதி.
( இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அச்சுறுத்தவில்லை...நாங்கள் சொல்கிறோம் அங்கு கலந்து கொள்ள சொல்பவர்களிடம் அறிவுரை கூறுங்கள் என்று...எப்படி..? தமிழர்கள், திராவிடர்களை இழிவு படுத்துகின்ற, கேவலப்படுத்துகின்ற...ஆக மொத்தத்தில் தமிழர்களை எப்படி வேண்டுமானாலும் இழிவு, கேவலம் என்று செய்து கொள்ளுங்கள்...
திராவிடர்களை...இல்லாத திராவிடர்களை என்ன செய்தால் என்ன..? இதுதான் முக வின் அரசியல்....)
சங்கிலிக்கருப்பு