குட்டக்குட்ட குனிவதும் தவறு... குனியக்குனிய குட்டுவதும் தவறு...

ஒரு ஊரின் எல்லையில் ஒரு பாம்பு இருந்தது. அந்தப் பாம்பு, அவ்வழியே போவோரையும், வருவோரையும் சதா சர்வ காலமும் கொட்டிக்கொண்டே இருந்தது. அதனால் இறந்தோர் சிலர், பயம்
கொண்டோர் பலர்.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் அவ்வூருக்கு, முற்றும் துறந்த முனிவர் ஒருவர் வந்தார். அவரோ அனைத்து ஜீவராசிகளுடனும் பேசும் சக்தி வாய்ந்தவர். மேலும், தன் தவ வலிமையால், தீயோரை திருத்தும் கொள்கையும் உள்ளவர். அதை அறிந்த அவ்வூர் மக்களும், தங்களுக்கு மேலே குறிப்பிட்ட பாம்பினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி முனிசிரேஷ்டரிடம் உரைத்தனர்.

அம்முனிவரும் அவர்கள் கூறியதைக் கேட்டவுடன், அவர்கள் மேல் பரிவுகொண்டு, அந்த பாம்பை சந்திக்க அவ்வூர் மக்களுடன் சென்றார். முனிவர் மட்டும் பாம்புப் புத்துக்கு அருகில் சென்றார். புத்துக்குத் தொலைவிலேயே மக்கள் அனைவரும் நின்று, நடப்பதை வேடிக்கை பார்க்கலாயினர்.

சினம் கொண்ட பாம்பும் புற்றிலிருந்து சீறிக்கொண்டு வெளியில் வந்தது. அதைக்கண்ட முனிவரும், அப்பாம்புடன் அதன் பாஷையில் பேச ஆரம்பித்தார். ஏன் இப்பக்கம் வரும் மக்களை துன்புறுத்துகிறாய் என்று பாம்பிடம் முனிவர் கேட்டதற்கு, பாம்பும், விவரம் அறியாத தன் குழந்தையை, இவ்வூர் மக்கள் கொன்றுவிட்டனர். அதற்குப் பழிவாங்கவே அவர்களை துன்புறுத்துகிறேன் என்று கோபத்துடன் கூறியது.

உடனே முனிவரும், பழிக்குப்பழி என்பது ஒரு தொடர்கதையே, மேலும் குட்டக்குட்ட குனிந்த மக்களை வாட்டியது போதும். இனிமேல் யாரையும் கடிக்கக்கூடாது என்று அதனிடம் சத்தியம் வாங்கிக்கொண்ட அவரைப் பார்த்து, நம்பிக்கையற்ற மக்கள், பாம்பு உங்களிடம் கொடுத்த வாக்கைக் காக்குமா? என்று கேட்டதற்கு, முனிவரும், மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் கொடுத்த வாக்கைக் காக்கும். அதனால் பயம் வேண்டாம் என்று நம்பிக்கையோடு கூறிவிட்டு, அங்கிருந்து யாத்திரைக்கு கிளம்பினார்.

சிறிது காலம் சென்றது.

அம்முனிவர் மீண்டும் அவ்வழியே செல்லும்போது அப்பாம்பைப் பற்றிய நினைவு வந்ததும், அந்த புத்தை நோக்கி வந்து, அப்பாம்பை அழைத்தார். பாம்பும் வெகுநேரம் கழித்து மெதுவாக வெளியில் வந்தது. அதன் உடம்பு முழுவதும் ஒரே காயங்கள். மேலும் அது இரையெடுத்து வெகுநாட்கள் ஆகியிருக்கும்போல் தோன்றியது.

அதைக்கண்டு வருத்தமுற்ற அத் துறவி, என்ன ஆயிற்று என்று வினவ, பாம்பும் முனிவரிடம், நீங்கள் கூறியபடி குட்டக்குட்ட குனிந்த மக்களை கடிக்காமல் இதுவரை வாழ்ந்து வரும் என்னை, மக்கள் கற்களால் அடித்தும், குச்சியால் குத்தியும் விளையாடுகிறார்கள். என்னசெய்வது! "யாரையும் கடிப்பதில்லையென" உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டேனே? என்றது.

அதைக்கேட்ட முனிவரும், முட்டாள் பாம்பே, உன்னை கடிக்காதே என்றுதானே சொன்னேன், சீறாதே என்று சொல்லவில்லையே. குனியக்குனிய குட்டும் மக்களைப் பார்த்து நன்றாக நீ சீறலாம் என்றார்.

பிறகென்ன? பாம்பும் நலமோடு வாழத்துவங்கியது.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (19-Aug-13, 2:22 pm)
பார்வை : 275

மேலே