மூடு மந்திரம்(தொடர்கதை 19)

யாரோ அருகில் அமர்வதை கவனித்த அனகா... கழுத்தை மேல் நோக்கி உயர்த்தி பார்த்தாள் .... குண்டாயி புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.... பாவம் காதும் கேட்காது , வாயும் பேசாது.. பேர்தான் குண்டாயி ... வேல் மாதிரி அத்தனை ஒல்லியாக இருப்பாள்....

ம்........ ப.... பா.... ஹா........................... கா.... வா... பா..........................

கையில் வைத்திருந்த கற்களை கொண்டு, அவள், ஐந்தாம் கல் விளையாட அழைக்கிறாள்.... என்ற அர்த்தத்தை சமீப வார தனிமை அனகாவிற்கு கற்பித்திருந்தது........உள்ளங்கையில் இருக்கும் ஐந்து கல்லும் உயர்த்தி தூக்கி போட்டு புறங்கையில் ஐந்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு அமர்ந்திருக்கையில் தானாக உதட்டில் வந்து அமர்ந்து கொள்கிறது ஒரு சிறு புன்னகை.. எதிராளிக்கு உதடே காணாமல் போய்விடும்.. அனகாவுக்கும், குண்டாயிக்கும் புன்னகை இடம் மாறிக் கொண்டே இருந்தது.. ஐந்திற்கு பதில் , நான்கு, மூன்று, இரண்டு, கடைசியில் ஒரு கல் கூட புறங்கையில் அமரலாம் அல்லது எல்லாமே கீழே விழிந்து தோற்பதற்கான ஆரம்ப நிலையை ஏற்படுத்தலாம்.... அப்போது புன்னகை இடம் மாறி அமரும் விந்தை விளையாட்டுக்கான உச்சபட்ச சுவாரஷ்யம் ....

மனம் லேசானது போல் உணரப் பட்டாள் அனகா....ஐந்து கற்களிலும் ஐந்து விதமான பட்டாம் பூச்சிகளை உணர்ந்தாள் ..... முகம் வியர்த்திருந்தது...அவ்வப்போது வார்த்தைகளற்ற சிரிப்பை உதிர்த்துக் கொண்டே இருந்தாள் குண்டாயி..... ....

வர்ற ஞாயிற்று கிழமை நமக்கு கல்யாணம் என்றான் மயில்சாமி....அனகாவுடம் சேர்ந்து குண்டாயி யும் புன்னகைத்தாள்.

எல்லாமே கனவு மாதிரி, சில நேரங்களில் விபத்துக்கள் வாழ்க்கையையே தருகிறது இல்லையா... யாருக்கு எப்படியோ , தனக்கு வாழ்கையில் நிகழ்ந்தது அழகிய விபத்து.. எதிர்பார்க்காத ஒரு தேவதை தூர தேசத்திலிருந்து வந்திருக்கிறாள்.. உலகமே... நான்தான் என என்னை நினைக்கிறாள்.. நினைப்பில் தவறொன்றும் இல்லை...அப்படி நினைக்க எவனுக்கும் ஒரு உறவு வேண்டும்.. இவனுக்கும் கிடைத்ததில் மனம் எல்லாம் சைரன் சத்தங்கள் வித விதமாக கத்துகின்றன....

என்ன ஒரு குறை.... ஆராய் பாட்டி இருந்து நடத்தி வைக்க வேண்டிய திருமணம்... அப்படி என்ன அவசரமோ அவளுக்கு, மேகமாய் ஓடிப் போனாள் ....

மனசெல்லாம், சந்தோஷ துக்கம்.... உருளவில்லை.. உருட்டியது ... அன்காவின் முகம் வெற்றிடத்தில் அச்சடித்து வைத்தது யாரோ....மனிதனுக்கு திருமணம் என்பது எத்தனை முக்கியமான தேவையான ஒரு நிகழ்வு.... அழகான தோழமை, அன்பான பகிர்தல், வெறும் உடல்கள் மட்டுமல்ல.. உயிர்களும் இணைவது திருமணத்தில் தான்.. மனித குலம் எத்தனை சடங்குகளால் ஆனது.... எல்லா சடங்குகளும் ஒரு வித நம்பிக்கைக்குள் அடங்கி விடுகிறது.. ஏனோ பொழுது ஓடவேயில்லை.. மனம் அனகாவையே சுற்றிக் கொண்டிருந்தது.... அவனின் இத்தனை வருட வாழ்கையின் பாதை சட்டென ஒரு பூந்தோட்டத்திற்குள் திருப்பி விட்ட உணர்வு அவனெங்கும் பொங்கியது..விட்டால் புன்னகைத்து விடுவான்.. அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு, கீழ் உதட்டை மேல் பல்லால் அழுந்த கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்....

அத்தனை கசப்பான மருத்துவமனை அன்று அப்படி தெரியவேயில்லை... ஒருவேளை நிஜங்கள் ஒருவனை பக்குவப்படுத்தி விடுமோ... அல்லது நிழலுக்குள் தன்னை ஒளிய வைத்து விடுமோ.....தொடரும் சிந்தனையில் தொடர்பற்ற நினைவலைகள்.. ஒருவேளை அதீத சந்தோசம் ஒரு வரையறைக்குள் அடைபடாதோ என்னவோ.....சட்டென கலைந்தது எல்லாமே.... கலைத்து போட்டான் சக தோழன்....
மயில் போனு ........ வடவள்ளி..... முருகன் கோயில்ல ஆக்ஸிடெண்டாம் ........


மூடு மந்திரம் தொடரும்....

எழுதியவர் : கவிஜி (23-Aug-13, 10:47 am)
பார்வை : 53

மேலே