ஐக்கியத்தை நிறுத்தி வைப்போம்.

முள்ளிவாய்க்காலை
முல்லை வாய்க்காலாய்
மாற்றித் தருவோம்
என்கிறார்கள்,
அழிக்கப்பட்ட எங்கள்
உறவுகளின் எலும்புக் கூடுகளில்
இருந்து எடுக்கப்பட்ட
உரமூட்டி செழிப்பாக்கலாம்
என்னும் நம்பிக்கையில்.

எல்லோருக்கும்
வீடு கட்டித் தருவார்களாம்
இருந்த வீடுகளைத்
தரைமட்டமாக்கியவர்கள்.

ஊருக்கொரு
ஆடை தொழிற்சாலை
கட்டிக் கொடுப்பார்களாம்
மானபங்கப் படுத்தப்பட்ட
எங்கள் மங்கையரின்
சாபத்திலிருந்து
தப்பிக்கொள்ள.

விதவைகளுக்கு
புது வாழ்வு அளிப்பார்களாம்
பூவையும் பொட்டையும்
பறித்தவர்கள்.

மத நல்லிணக்கம்
வளர்க்க பாடுபடுவார்களாம்
கோயில்களை தகர்த்தெறிந்து
கடவுள்களையே மதம் மாறச்
செய்தவர்கள்.

கைது செய்தவர்களை எல்லாம்
விடுதலை செய்வதாக
சூளுரைக்கின்றார்கள்
சிறைச்சாலைகளுக்கு
திறப்பு விழா நடாத்திக்கொண்டு,

மொழி வளர்ச்சிக்காக
பாடுபடுவோம் என்கிறார்கள்
"டமில் பேசிக் கொன்று."

இனமேம்பாட்டுக்கு
கைகொடுப்போம் என்கிறார்கள்
கருச்சிதைவுக் கூடங்களை
அமைத்துக் கொண்டு

எங்கள் ஊர்களையெல்லாம்
நந்தவனமாக்குவோம்
என்கிறார்கள்
எங்கள் நந்தவனங்களை
மயானமாக்கியவர்கள்

மொத்தத்தில்
பால் போன்ற எங்களுக்கு
காவல் புரியக் காத்துக்
கிடக்கிறார்களாம்
பூனையாய் இருந்துகொண்டு.

இவர்களின்
தேர்தல் காகித
பதாகைகளை
மானமுள்ள எங்கள்
மாடுகள் கூட
தின்னாது என தெரிந்திருந்தும்
அண்டப் புளுகுகளை
அள்ளி வீசி
முழு பூசணிக்காயை
மறைக்கப் பார்க்கும் இவர்கள்
மறைமுகமாய் எங்கள் உரிமைகளை
மறுக்கப் போராடுகிறார்கள் என்று
மழலைக்கும் தெரியும்போது
மானமுள்ள மனசுக்குமா புரியாது?

கண் துடைப்புக்கு
கைதேர்ந்தவர்களின்
வாய் பேச்சுக்கு
செவிகொடுத்து
முடமாகிப் போவதிலும்
கல்லடியும் சொல்லடியும்
ஷெல்லடியும் வாங்கிய நாங்கள் போடும் புள்ளடிகளில் எங்கள் இன ஐக்கியத்தை
நில்லடி நிமிர்ந்து என்று
எம் மண்ணில் நிறுத்திவைப்போம்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Aug-13, 2:31 am)
பார்வை : 49

மேலே