மனம் அமைதி பெற ....

விடிந்ததும் மனம் நேற்று விட்ட இடத்தில் தொடங்கும்
காலைக்கடன்கள் சிந்தனைகளின் நடுவே நடந்தேறும்.
தின்னும் சிற்றுண்டி சுவைக்கும் நாக்கில்
கடந்து போனதே மூளைக்கு தெரியாது
உணர்வுகளை மதிக்காது கடமைகளை மட்டும்
அசை போடும் ஓய்வில்லா மூளையின் ஓட்டம்.

கை பேசி அழைப்புகளில் நாம் பெரும்பாலும் தவிர்ப்பது...
வீட்டிலிருந்து வரும் ஏங்கும் அழைப்புகள் மட்டுமே!
கேட்டால் "நான் ரொம்ப பிசி" என்றிடுவோம்.

வீடு திரும்பினால் சூடு ஆறிப்போன இரவு சாப்பாடு
ஆம் ... நாம் உணரமாட்டோம்.. அங்கே வீட்டில் உறங்கிப்போனவர்கள் மனதின் ஆறிப்போன
ஏக்கங்களை ...

ஓர் நாள் ...
நமது உடலும் மனமும் களைத்துப்போகும்
சிந்தனைகள் ஓட மறுத்து உட்கார்ந்து விடும்
நம்மை அறியாமல் ஓய்ந்து அமர்வோம்

அப்போது ...
நமக்கு புத்துணர்வும் உற்சாகமும் தேவை என
புரிந்துகொண்டு நமது மனம் அமைதி பெற
உதவ வரும் அன்பு நெஞ்சங்கள் எது தெரியுமா?
நமது குடும்பத்தார் தான் ......

நாம் பேசக்கூட நேரமில்லை என்று புறக்கணித்து
அவர் ஏக்கங்களை நிறைவேற்ற தவற விட்டு
எந்திரம் போல் வந்து போன இந்த வீட்டுக்குள்
தொந்தரவு கொடுக்காமல் தூங்கிவிட்ட அதே
ஏக்கமுள்ள நெஞ்சங்கள்தான்.

பலனேதும் கருதாமல் பாசமான பேச்சு மட்டும்
போதுமென வாடிய அதே அன்பு நெஞ்சங்கள்தான்

அவரோடு அமர்ந்து பேசுங்கள்
இறுகிப்போன மனம் சற்று தளர்ந்து திளைக்கும்
மனைவியின் பேச்சுக்கு செவி கொடுங்கள்
அவள் உங்கள் மனச்சுமைக்கு மருந்து தருவாள்
குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுங்கள்
உங்கள் நெஞ்சின் சுமைகள் அஞ்சி ஓடிவிடும்
பெற்றவர்களுடன் சற்றே பேசி சிரியுங்கள்
கொற்றவன் போல் நிமிர்ந்து நடக்க வழி சொல்வர்

உங்கள் அன்பு மனம் அமைதி பெரும்
உறவுகள் இரவில் முகம் சிரித்து உறங்கிவிடும்
அவர்கள் தூங்குவதை அருகில் அமர்ந்து
உறங்காமல் ரசித்து பாருங்கள்
உங்கள் பாதுகாப்பில் அவர்கள் நிம்மதி உள்ளது.

மறந்து விடாதீர்கள்...
நீங்கள் தூங்கும்போது அவர்களும் அன்புடன்
உங்களை கண்களில் மகிழ்வோடு கண்டு மகிழ்வர்.

இதுதான் மனிதர்களின் எந்திர வாழ்வில்
மனம் அமைதி பெரும் அற்புத நிகழ்வு

எழுதியவர் : ஜ. கி. ஆதி (9-Sep-13, 4:32 pm)
பார்வை : 328

மேலே