சிரித்திரபுறம் I

முதலில் சில அறிமுகங்களைச் செய்து கொள்ளுங்கள். பின்னால் எது, என்ன, யார் என்று குழப்பம் வந்துவிடக் கூடாது பாருங்கள்... முதலில் ஊர். அந்த ஊரின் பெயர் விரிஞ்சிபுரம். சமீபகாலமாகப் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. அதை ஆண்டு வரும் மன்னனின் பெயர்... கொஞ்சம் இருங்கள், மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்கிறேன்! மதயானை கொன்ற சேனாடுசேந்தமங்கலத்துச் செருகளம் வென்ற• மறத்தமிழ் வாணன் செந்தமிழழகு ஜடாவர்ம மணிமாற பாண்டியன்! ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை மூச்சைப் பிடித்துச் சொல்ல என்னாலாகாது மக்களே... ஆகவே நான் ‘மணி’ என்று குறிப்பிட்டால் இந்தப் பெயரை ஒரு முறை நீங்களே படித்துக் கொள்ளவும்.

================================

• இதுபற்றிய குறிப்பு சோமசேகர பரதேசியார் எழுதிய ‘தமிழக மன்னர்கள் அரசு முறை’ நூலின் 14850ம் பக்கத்தில் இருக்கிறது.

================================

தன் அரசவையில் ஆண் மந்திரிகளைத் தவிர, பெண் மந்திரிகளையும் நியமித்திருந்த ஒரு சமத்துவவாதி மணி. பொதுவாக நல்ல மன்னன்தான். என்றாலும் சமயங்களில்... சரி, அதைச் சொல்வானேன்... போகப்போக உங்களுக்கே தெரியும்... ஆதெள கீர்த்தனாரம்பத்திலே கதை துவங்குகிற போது அரசவையில் சலசலப்பு நிலவிக் கொண்டிருக்க, மன்னர் வருகையை அறிவிக்க ஒல்லியாக, ஓமக்குச்சி நரசிம்மன் போல உடல் படைத்த கட்டியக்காரன் குரல் எழுப்புகிறான்.

க.காரன்: ம.கொ.சே.செ.வெ.ம.வா.செ.ஜ.மணிமாற பாண்டியர் பராக்! பராக்! பராக்!

மணி (கோபமாக) : பெருவழுதிச் சாத்தனாரே.... (இரைகிறான்)

அமைச்சர் மூச்சுவாங்க ஓடி வருகிறார். அவர் வயதுக்கு நடப்பதே அதிகம்.

பெரு : என்னாச்சு மன்னா...?

மணி : என் பெயரை முழுதாகச் சொல்ல இவனை வேலைக்கு வைத்தால் சுருக்கிச் சொல்கிறான் படுபாவி! இவனை உடனே...

‌பெரு : பட்டத்து யானையை விட்டு மிதிக்கச் சொல்கிறேன் மன்னா...

மணி : இவன் அளவுக்கு பட்டத்து யானை எல்லாம் அதிகம். அரசியார் வளர்க்கும் பட்டத்து நாயை விட்டு மிதிக்கச் ‌சொல்லும். ஆள் காலி! வேறொருவனைப் போட்டு விடும்.

-கர்ஜித்துவிட்டு அரசவையினுள் நுழைகிறான் மன்னன். அமைச்சர் பின்தொடர்கிறார். சிம்மாசனத்தில் மன்னன் அமர்ந்ததும் பணிப் பெண் பழங்கள் அடங்கிய தட்டை அருகில் வந்து நீட்டுகிறாள்.


மணி : சேனாதிபதி! உருவுங்கள் வாளை...!

சேனாதிபதி படுகளங்கொண்ட கோப்பெருஞ்சிங்கன் துடித்து எழுந்து கத்தியை உருவி மன்னன் முன் மண்டியிடுகிறான்.

கோ.சிங்கன் : ஆணையிடுங்கள் மன்னா... யார் மீது போர் தொடுக்க வேண்டும்? எப்போது துவங்கட்டும்?

மணி : (அடிக்குரலில்) மூதேவி! ஏற்கனவே சரியா சம்பளம் ‌கொடுக்கலைன்னு படையில பாதிப் பேர் பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டாங்க. இதுல போர் வேறயாடா? (சத்தமாக) போர் இல்லை சேனாதிபதி... இந்தப் பழங்களை உமது வாளால் நறுக்கித் தாரும்...

கோ.சிங்கன் : வாளுக்கு வேலை தந்து நாளாச்சுன்னு நான் சொன்னது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படியா...? (புலம்பியபடி தன் இருக்கையில் அமர்ந்து நறுக்கத் தொடங்குகிறான்.)

மணி : முக்கியமான ஆலோசனைக்காகத்தான் இன்று சபையைக் கூட்டியிருக்கிறேன். மந்திரிமார்களெல்லாரும் வந்தாயிற்றா?

பெரு : ஒருவரைத் தவிர எல்லாரும் வந்தாயிற்று மன்னா...

என்று சொல்லிக் கொண்டிருக்கையில் தரை அதிர்கிறது. நாற்காலிகள் ஆடுகின்றன.

மணி : அமைச்சர்களே...! சேனாதிபதி! தரையில் படுங்கள்... பூகம்பம் ஏற்பட்டுள்ளது...!

பெரு : அமைதி மன்னா... பூகம்பம் இல்லை. நம் விவசாயத் துறை அமைச்சர் தெய்வயானை வந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அவர் சொன்ன அதே நேரத்தில் தெய்வயானை வந்து, மன்னர் முன் குனிந்து வணக்கம் தெரிவிக்கிறாள்.

மணி : பட்டத்து யானை‌யே தலையைக் குனிந்து வணக்கம் சொல்வது போலிருக்கிறதே! இனி தெய்வயானை எனறழைக்காமல் வெறுமே யானை என்றழைக்கப் போகிறேன். சென்ற முறை சபை கூடியபோது கூட நீ இப்படி குண்டாக இல்லையே...

கோ.சிங்கன் : (முணுமுணுப்பாக) அடிக்கடி சபை கூட்டினால் தெரிந்திருக்கும். வருஷத்துக்கொரு முறை சபை கூட்டினால்...? அது பதவியேற்ற புதிதாகையால் ஒல்லியாக இருந்தாள்.

மணி : சேனாதிபதி! அங்கே என்ன முணுமுணுக்கிறீர்?

கோ.சிங்கன் : ஒன்றுமில்லை மன்னா... ஏதோ முக்கியமான விஷயத்திற்காக சபை கூட்டியிருக்கிறேன் என்று சொன்னீர்களே அது என்னவாக இருக்குமோ என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

மணி : ஆங்... நல்லவேளை, நினைவுபடுத்தினீர்! கேளுங்கள் மந்திரி மார்களே!

தெய்வயானை : மன்னா... மந்திரிக்கும் மார்களேவுக்கும் இப்படி இடைவெளி கொடுத்து உச்சரிக்காதீர்கள். நாராசமாக இருக்கிறது. உமது பார்வை வேறு கொடியது!

மணி : (முணுமுணுப்பாக) இவளைப் பாத்துட்டாலும்... (சத்தமாக) சரிசரி... என் நீண்ட கால ஆசையை நிறைவேற்றியாக வேண்டிய தருணம் வந்து விட்டது. வடக்கே ஒரு மன்னன் சலவைக் கல்லினால் மிகப் பெரிய அரண்மனை ஒன்று கட்டியிருக்கிறானாம். இங்கே சோழ மன்னனோ மிகப் பெரிய சிவன் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார். அவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக மிகமிகப் பிரம்மாண்டமான மாளிகை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்த பிரம்மாண்ட மாளிகை தன்னுள்ளேயே அங்காடிக் கடைகள், நாடக அரங்கங்கள் என்று அனைத்தையும் கொண்டு தனி நகரம் போலத் திகழ வேண்டும் என்பது என் கனவு.

பெரு : மன்னர் வாழ்க! நல்ல நினைப்புதான். ஆனால் சாத்தியமா என்பதுதான்...

மணி : என்னை வாழ்க என்று வாழ்த்திய உமக்கு வாழும் ஆசை போய்விட்டதா என்ன?

பெரு : ஐயோ... நிறைய இருக்கிறது மன்னா!

மணி : அப்படியானால்... இது நல்ல திட்டம், உடனே நிறைவேற்றலாம் என்று கூறும்.

பெரு : (அவசரமாக) ஆஹா... அருமையான திட்டம்! நம் கஜானாவில் பணவசதி இல்லாவிட்டால்கூட உடனே நிறைவேற்றப்பட வேண்டிய சிறப்பான திட்டம்!

மணி : என்ன... கஜானாவில் பணம் இல்லையா...? சரி, விவசாயத்திற்கான வரியை அதிகப்படுத்தினால் பணம் சேருமல்லவா?

தெ.யானை : அது இயலாது மன்னவா... ஏற்கனவே நாட்டில் உணவுப் பஞ்‌சம் தலைவிரித்தாடுகிறது.

மணி : நல்ல ரிப்பனாகக் கொடுத்து, அதைக் கட்டிக் கொண்டு ஆடச் சொல்! எனக்கென்னமோ நாட்டின் விளைசசலில் பாதியை நீயே தின்று தீர்த்து விட்டதால்தான் பஞ்சமோ என்று தோன்றுகிறது.

தெ.யானை : (வெட்கமாக) ‌ச்சீ! போங்கள் மன்னா.... ரொம்பக் குறும்பு!

சிரி: (கோபமாக) சபை கலையட்டும்! நாளை வரும்போது என் கனவை நிறைவேற்றுவதற்கு தேவையான யோசனைகளுடன் வாருங்கள்! (போகிறான்)

- தொடரும்

எழுதியவர் : (10-Sep-13, 10:42 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 112

மேலே