சிரித்திரபுரம் - 2

காட்சி - 2

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மணி, அமைச்சர்களை கோபமாகப் பார்‌க்கிறான்.

மணி: எல்லாரும் இப்படி ‘ஙே’யென்று விழித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? மதயானை கொன்ற சேனாடுசேந்தமங்கலத்துச் செருகளம் வென்ற மறத்தமிழ் வாணன் செந்தமிழழகு ஜடாவர்ம மணிமாற பாண்டியன் ஆன யான நான் ஆணையிட்டும்... (மூச்சு வாங்குகிறான்) என் பேரே எனக்கு சோதனையப்பா! அமைச்சரே நான் எங்கே விட்டேன்?

பெரு: பொக்கிஷப் பணத்த‌ையெல்லாம் பெண்களிடம்தான் விட்டீர்கள் மன்னா!

மணி: அடசட்! அதை யாரையா கேட்டது? விஷயத்தை எங்கே விட்டேன் என்று கேட்டால்... நீர் மந்திரியல்ல... மந்தி!

பெரு: அதுவா..? தங்களின் பெயரை முழுதாகச் ‌சொல்லி ஆணை என்றீர்கள்.

மணி: ஆங்! எமது கனவு மாளிகையைக் கட்ட வருமானம் வரும் சரியான வழியை யாரேனும் உரைத்திட்டால் அவர்தான் இனி பிரதம அமைச்சர், நீர் அல்ல. இதுவே எமது ஆணை!

சபையிலிருந்து ஒரு இளைஞன் எழுந்து வந்து மன்னன் முன் கை நீட்ட, அடிக்கத் தான் வருகிறானோ என்று சிம்மாசனத்தில் பின்னடைகிறார் மணி. அவன் நீட்டிய கையுடன் மண்டியிட்டு வணங்கி,

இளை; மன்னா! என்னை உங்களின் பிரதம அமைச்சரென்றும், உங்களின் சார்பாகப் பேசும் அதிகாரம் எனக்கு உண்டென்றும் ஒரு முத்திரை ஓலை எழுதித் தாருங்கள். அண்டை நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஒரே மாதத்தில் பெரும் பொருளுடன் ‌திரும்புகிறேன்.

மணி: ‌என்ன... ஒரு ஓலையை வைத்து சாதிப்பாயா? இதோ, உடனே எழுதித் தருகிறேன் இளைஞனே. உன் பெயர் என்ன?

இளை: அறிவுடைய நம்பி என்பது என் பெயர் மன்னா!

அப்போது மணியின் மகன் - இளவரசன் - சொல்லழகு சுந்தரவர்மன் படுவேகமாக அவையினுள் ஓடிவருகிறான்.

மணி: என்னாயிற்று மகனே... போர்க்களத்தில் நான்கூட இப்படி ஓடியதில்லையே.... ஏனிபபடி தலைதெறிக்க ஓடி வருகிறாய்?

சொ.சு.வர்மன்: சுப்பா... சே, அப்பா! நான் ஊருக்கு வெளியே குளத்தில் பன்னிகளுடன்... சே, கன்னிகளுடன் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது எதிரி நாட்டுக் கிழவர்கள்... சே, கயவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்...



மணி: சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை பிழையின்றிப் பேசத் தெரியவில்லை. உனக்குப் போய் சொல்லழகு என்று பெயர் வைத்தேன் பார். என் குறறம்தான்! நீ என்ன செய்தாய்?

சொ.சு.வர்மன்: பன்னி... ச்சே, கன்னிகளை அவர்கள் மீது ஏவிவிட்டு, தலைதெறிக்க இங்கு ஓடிவந்து விட்டேன்...

மணி: (தலையில் அடித்துக் கொண்டு) குலப்பெருமையைக் காப்பாற்றி விட்டாய் மகனே! (பொறாமையாக) பெண்கள் பின்னால் சுற்றாதே என்று எத்தனை முறை எச்சரித்தாலும் திருந்த மறுக்கிறாய். அரசியாரே... உன் மகனை உடனே போர்க்கலை பயிலச் சொல். இல்லையேல்...

அரசி புவனமுழுவதுடையாள் கோபமாக முறைக்கிறாள்.

புவன: ச்சே...! குழந்தை நிம்மதியாக இருந்தால் உங்களுக்குப் பொறுக்காதே! இந்த வயதில் கன்னிகளுடன் சுற்றாமல் பின் உங்கள் வயதிலா சுற்றுவான்? நீ வா மகனே...! சற்றே ஓய்வெடுப்பாய்!

மகனை அணைத்தபடி அந்தப்புரத்திற்கு அவள் அழைத்துச் செல்ல... அரசவையில் இளைய அமைச்சரான மார்த்தாண்டனை கை காட்டி அருகில் அழைக்கிறார் மணி.

மணி: நானும் நிறைய நூல் விட்டுப் பார்க்கிறேன். எனக்குக் கிடைக்காத கன்னிகள் என் மகனுக்கு மட்டும் எப்படியோ சிக்கி விடுகிறார்கள். எமது வசந்த மண்டப மாளிகைக்கு சில கன்னிகளை நீர் அழைத்து வாரும். இது அரச கட்டளை!

மார்த்: இது அரச கட்டளை இல்லை மன்னா... விரச கட்டளை! (தலையிலடித்துக் கொண்டு வெளியேறுகிறான்.)

காட்சி - 3

அரண்மனை நந்தவனம். (மன்னர் ‘மணி’யின் மகள்) இளவரசி சுந்தரவல்லி அமர்ந்திருக்க, அறிவுடைய நம்பி வருகிறான்.

அ.நம்பி: கண்ணே வல்லி! மாமன்னரின் உத்தரவைப் பெற்றுவிட்டேன். நாளையே நான் சுற்றுப்பயணம் புறப்படுகிறேன்.

சு.வல்லி: மாமன்னர் என்றீர்களா, மாமனார் என்றீர்களா? சரியாகக் காதில் விழவில்லை...

அ.நம்பி: (முணுமுணுப்பாக) இவளுக்கு காது சரியாகக் கேட்காதது நமக்கு பல வகையிலும் வசதிதான். (உரக்க) எப்படி எடுத்துக் கொண்டாலும் ஒன்றுதானே... மாமனார் என்றே வைத்துக் கொள்ளு!

சு.வல்லி: ‌கொள்ளா? குதிரைக்குத்தானே போடுவார்கள்? உங்களுக்கெதற்கு?

அ.நம்பி: (மெதுவாக) சில வார்த்தைகள் மட்டும் கேட்டுத் தொலைக்கின்றன. ஹும்...! (உரக்க) நல்லது கண்ணே... நான் வெளிநாடுகளுக்குச் சென்று பெரும் பொருள் சம்பாதித்து வரச் செல்கிறேன். அதைச் சொல்லிச் செல்லவே வந்தேன்.

சு.வல்லி: நல்லது. சென்று வாருங்கள். இங்கே நம் காதல் விவகாரம் யாருக்கும் தெரிந்து விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

அ.நம்பி: நாசமாப் போச்சு. இப்படி எட்டூருக்குக் கேட்கிற மாதிரி உன்கிட்ட உரக்கக் கத்திப் பேசி ‘காதல்’ பண்ணினால் ஊருக்கே ‌தண்டோரா போட்ட மாதிரிதான். அப்புறமென்ன ரகசியமாம்... (புலம்பியபடி செல்கிறான்)

-தொடரும்...

எழுதியவர் : (10-Sep-13, 10:45 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 97

சிறந்த நகைச்சுவைகள்

மேலே